Breaking News
recent

கல்விப் பணியில் முஸ்லிம் பெண்கள்- வரலாற்றின் ஒளியில்..! சிராஜுல்ஹஸன்

ஒரு மலாலா அல்ல, ஓராயிரம் மலாலாக்கள்- 

அதாவது முஸ்லிம் பெண்கள் கல்விக்காக
பெரும் பங்காற்றியுள்ளனர்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது
எந்தத் தாலிபான்களும்
அவர்களைத் தடுக்கவும் இல்லை. சுடவும் இல்லை.
இதோ அந்தக் கல்வி வைரங்கள்.
மிக நீண்ட கட்டுரையைச் சுருக்கமாக தருகிறேன்.


·குர்ஆன் அறிவிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கிய
பெண் அறிஞர்கள்: ஆயிஷா, ஹப்ஸா, உம்மு மைமூனா,
உம்மு தர்தா, உம்மு சல்மா, உம்மு ஹபீபா.


·அம்ரா பின்த் அப்துர்ரஹமான் என்பவர்
நபிமொழிக் கலையில் மாபெரும் வல்லுநர்.
இந்தப் பெண்ணிடம் நபிமொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று
கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.


(இன்றைய முற்போக்குவாதிகளின் பார்வையில்
இஸ்லாமிய ஆட்சி நடத்திய அன்றைய கலீஃபாக்கள் எல்லாம்
தாலிபான்கள்தாம். ஆகவே ஒரு “தாலிபானின்” கட்டளைதான் இது-
“பெண்ணிடம் சென்று கல்வி பயிலுங்கள்.”)


·அப்துல் மாலிக் இப்னு மர்வான் ஸ்பெயின் முதல்
இந்தியா வரை ஆட்சி நடத்தியவர்.
இவரும் முற்போக்காளர்கள் பார்வையில் “தாலிபான்தான்.”
இந்தத் “தாலிபான்” கல்வி கற்றது யாரிடம் தெரியுமா?
உம்மு தர்தா எனும் பெண் அறிஞரிடம்..!


·கரீமா அல் மர்வாசிய்யா எனும் பெண் மாபெரும்
கல்வி மேதையாக விளங்கினார் என்று
ஐரோப்பிய அறிஞர் கோல்ஸீஹர் கூறுகிறார்.
(Goldziher,Muslim Studies Part 2, 366)


·உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவி
அதன்மூலம் சான்றிதழுடன் கூடிய பட்டப் படிப்புகளைத்
தொடங்கியவர்களே இரண்டு முஸ்லிம் பெண்கள்தாம்.


பாத்திமா அல் ஃபிஹ்ரி, அவருடைய சகோதரி மர்யம் ஆகிய
இரண்டு பெண்கள் கி.பி. 859ஆம் ஆண்டில்
மொராக்காவோவில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினர்.
அது படிப்படியாக பல்கலைக்கழகமாக வளர்ந்தது.


இன்றும் அல்காராவின் பல்கலைக்கழகம்(Al Qaraouine University)
என்னும் பெயருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்கூட
இதற்குப் பிறகுதான்- 1096-இல்தான் தொடங்கப்பட்டது.


அந்த முஸ்லிம் பெண்கள் உருவாக்கிய பல்கலைக்கழகத்தில்
மார்க்கக் கல்வியுடன் வானவியல்(Astronomy), புவியியல், மருத்துவம்
என அனைத்துக் கல்வியும் கற்றுக்கொடுக்கப்பட்டன.


இந்த நூற்றாண்டிலும்கூட எகிப்தின் ஜைனப் கஸ்ஸாலி,
அமெரிக்காவின் லூயி லாமா அல்பரூக்கி,
மாபெரும் பெண் அறிஞர் மர்யம் ஜமீலா,
கனடாவின் தலைசிறந்த கல்வியாளரான ஷாஹினா சித்தீகி,
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கதீஜா ஹப்பாஜு எனத் தொடங்கி
ஏராளமான முஸ்லிம் பெண் கல்வியாளர்கள்
வரலாற்றில் ஜொலிக்கிறார்கள்.


இவர்களில் கதீஜா ஹப்பாஜு 1995-இல் சீனாவில் நடந்த
ஐநா பெண்கள் மாநாட்டில்
முஸ்லிம் பெண்கள் சார்பாகக் கலந்துகொண்டவர்.
பல விருதுகள் பெற்றவர்.


இலங்கையிலும் இந்தியாவிலும்- குறிப்பாகத் தமிழகத்திலும்
கல்வித் துறையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்கள் பற்றிய
விவரங்கள் என்னிடம் நிறைய உண்டு.


ஆகவே, என்ன சொல்ல வருகிறேன் என்றால்-


ஒரு மலாலாவைக் காட்டி
சும்மா டபாய்க்காதீர்கள் தோழர்களே...!


கல்வியில் முஸ்லிம் பெண்கள்
யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை
என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.
-சிராஜுல்ஹஸன்
adirai post

adirai post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.