Breaking News
recent

உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்!

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.
இது சம்பந்தமான தகவல்களை அல்குர்ஆனின் 37 ஆவது அத்தியாயத்தின் 100 ஆவது வசனத்திலிருந்து 111 ஆவது வசனம் வரை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்.
நபியவர்களின் காலத்தில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலிப்பிராணிகளை வாங்கி கொழுக்க வைத்து பின்னர் பெருநாளன்று அறுத்துப்பலியிடுவார்கள். இது இன்று கிராமங்களில் நடைமுறையிலிருக்கிறது.ஆனால் பெருநகரங்களில் இது சாத்தியமில்லை. எனவே பெருநாளைக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பாக பலிப்பிராணிகளை வாங்கி குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுப்பது மார்க்கத்தில் தடை இல்லை.
நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள் என உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) கூறினார்.
புகாரி
குர்பானி கட்டாயக்கடமையா?
குர்பானி என்பது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னத் தானே தவிர கட்டாயாக்கடமையில்லை ஆனால் இன்று கடன் வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள் ஜக்காத், ஹஜ், போன்ற இஸ்லாத்தின் தலையாய வணக்கபழிபாடுகளே கடன் இருக்கும்போது கடனை நிறைவேற்றிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்கிறபோது குர்பானி என்பது கடன் வாங்கி செய்யவேண்டிய வணக்கமல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆனால் வசதியுள்ளவர்கள் அவசியம் குர்பானி கொடுக்கவேண்டும்.
பலிப்பிராணிகள் எவ்வாறு இருக்கவேண்டும்?
பலிப்பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகமாக இருக்கவேண்டும். வெளிப்படையாக பார்க்கும் போது நொண்டி, குருடு, கொம்பு உடைக்கப்பட்டது, மாறுகண் உடையது, காதுகள் முன்புறமாகவோ பின்புறமாகவோ கிழிக்கப்பட்டது போன்ற குறைகளற்றதாக இருக்கவேண்டும்.
ஒரு முறை நபியவர்கள் எங்களுக்கு முன்னால் எழுந்து நின்று உரையாற்றுகையில் நன்கு தெரியும்படியாக கண் பொட்டையான பிராணி, வெளிப்படையாகத் தெரியும் நோயுற்றிருக்கும் பிராணி, ஊனம் வெளிப்படையாகத் தெரியுமளவிற்குள்ள நொண்டியான பிராணி, எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி ஆகிய நான்கு பிராணிகளை அறுப்பது கூடாது எனத்தெரிவித்தார்கள் என பராஉ பின் ஆஸிஃப் (ரலி) அறிவிக்கிறார்
அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்
கூர்ந்து கவனித்து கண்ணிலும் காதிலும் குறை இல்லாத பிராணியையே குர்பானி கொடுக்கத் தேர்ந்தெடுக்கவேண்டும் எனவும் காதின் ஓரம் கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிற பிராணியையும் பின் காது கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருக்கிற பிராணியையும் காதுகள் இரண்டும் கிழிக்கப்பட்டு பிளந்திருக்கிற பிராணியையும் முன்பற்கள் விழுந்து விட்ட பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்று எங்களுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என அலீ (ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்
காலும் முட்டியும் கண்ணைச் சுற்றியுள்ள இடமும் கறுப்பு நிறமாயுள்ள செம்மறி ஆட்டுக் கிடாய் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காக கொண்டு வருமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்…
முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள் என அனஸ் (ரலி) கூறினார்.
புகாரி 5565.
பலிப்பிராணிகளின் வயது:
“இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்ப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் “இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக்கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்கள். பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
புகாரி 965, 968, 976, 5557, 5560
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்று விளங்குகிறது. முஸின்னா என்பது பால் பற்கள் விழுந்து புதுப்பற்கள் இரண்டு முளைத்து இரண்டு வயது முழுமையடைந்திருக்க வேண்டும். ஒட்டகங்களுக்கு ஐந்து வயதிலும் ஆடு மாடுகளுக்கு இரண்டு வயதிலும் பற்கள் முளைக்கும். இதிலிருந்து ஒட்டகம் ஐந்து வயதும் ஆடு மாடுகள் இரண்டு வயதும் இருக்கவேண்டும்.
மேலும் பெண் இனங்களை குர்பானி கொடுப்பதற்கு நபிமொழிகளில் எவ்வித தடையும் வரவில்லை. ஆனால் கன்றுகளுக்கு பால் தரும் பிராணிகளை குர்பானி கொடுக்க நபிமொழியில் தடைவந்திருக்கிறது;
ஒரு நபித்தோழர் நபியவர்களுக்கு ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுக்கும் போது, “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கை செய்கிறேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
எப்போது கொடுக்கவேண்டும்? தொழுகைக்கு முன்பா? பிறகா?
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே ‘உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.” என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் (ரலி), “இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்” என்றார். அப்போது நபி (ஸல்) “உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர் “இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். “ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள் என பராஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 955.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். “தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்ரை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள் என ஜுன்தப் (ரலி) அறிவித்தார். புகாரி 985.
எனவே முற்கூறப்பட்ட நபிமொழிகளில் தொழுகைக்குப்பிறகு தான் குர்பானி கொடுக்கவேண்டும் என விளங்குகிறது. மேலும் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ என்று சொல்லப்படுகின்ற துல் ஹஜ் பிறை 11, 12, 13, ஆகிய தினங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
கூட்டுக் குர்பானி:
நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் ஒட்டகம் மற்றும் மாட்டை ஏழுநபர்கள் சார்பாக குர்பானியாகக் கொடுத்தோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.
முஸ்லிம்.
நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வரவே ஒருமாட்டில் ஏழுநபர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 நபர் வீதமும் நாங்கள் கூட்டு சேரந்தோம் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்.
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் மாட்டில் ஏழு நபரும் ஒட்டகத்தில் ஏழு நபரும் அல்லது பத்து நபரும் கூட்டு சேர்நது குர்பானி கொடுக்கலாம் என விளங்குகிறது.
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்கவேண்டியவை:
துல்ஹஜ் பிறை கண்ட முதல் நாளிலிருந்து பிறை 10 அல்லது அதற்கு அடுத்த மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கும் வரை குடும்பத் தலைவர் தலைமுடி, நகங்களை எடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறையைக்கண்டு குர்பானி கொடுக்கும்வரை நகம் தலை முடி ஆகியவற்றை வெட்டவேண்டாம் என நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம், நஸயீ.
மேலும் குடும்பத்திலுள்ள அனைவரும் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளைப் பேண வேண்டும் என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கு நபிமொழியில் எத்தகைய ஆதாரங்களும் காணப்படவில்லை. அப்படியிருந்தால் நபியவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள். குடும்பத்தலைவர் மட்டுமே மேற்கூறப்பட்ட நிபந்தனைளைப் பேண வேண்’டும்.
குர்பானி கொடுக்கும் போது கவனிக்கவேண்டியவை:
கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும். ‘அல்லாஹ்வின் நாமம்’ கூறப்படவேண்டும். பலிப்பிராணிகளை வேதனைப்படுத்தக்கூடாது. அவற்றிற்கு சிரமம் தரக்கூடாது.
ஆயிஷாவே கத்தியைக் கொண்டு வா. அதை கல்லில் கூர்மையாக்கு என நபியவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன் என அனஸ்(ரலி) கூறினார்.
புகாரி 5558.
ஆட்டையோ மாட்டையோ அறுப்பது போல ஒட்டகத்தை அறுக்கக்கூடாது அதை நிற்க வைத்து ஒரு காலை கட்டி அதன்பிறகு அறுக்கவேண்டும். பின் வரும் நபிமொழி அதற்கு ஆதாரமாக இருக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
புகாரி 1712.
“இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, “அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை!” என்று கூறியதை பார்த்தேன்” என ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
புகாரி 1713.
குர்பானி இறைச்சியை பங்கிடுதல்:
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள், அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக் கிறோம், உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது, எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்ல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக, பிறகு அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக்
கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும் இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அல் குர்ஆன் 22:36
மக்களிடத்தில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது குர்பானி இறைச்சியை மூன்று பங்காக ஆக்கி ஒருபங்கை தனக்காகவும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் மூன்றாவது பங்கை உறவினர்களுக்கும் வழங்கவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அப்படி பங்கிடவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 1717.
நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள் அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன் என அலீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 1718.
நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக்கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். இன்னொரு அறிவிப்பில் “பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.
புகாரி 1716
நபி(ஸல்) அவர்கள், “உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்” என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் “இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் “நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்” என்று பதிலளித்தார்கள் என ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்
புகாரி 5569.
மேற்கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஏழைகள் போன்ற தேவையுடை யாருக்கும் குர்பானி இறைச்சியை வழங்கலாம் எனத் தெரிகிறது. மேலும் தோலையும் இறைச்சியையும் உரித்தவருக்கு கூலியாகக் கொடுக்கக்கூடாது எனவும் அவற்றையும் ஏழைகளுக்கே வழங்கவேண்டும் எனவும் தெரிகிறது.
குர்பானியின் நோக்கம்:
பின்வரும் வசனத்தில் அதன் நோக்கத்தை இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை, ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும், அல்ல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான், ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!
அல் குர்ஆன் 22:37
எனவே குர்பானி உட்பட எந்த வணக்கமாக இருந்தாலும் அதில் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மை அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வழிபாடுகள் செய்யவேண்டும்.
ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி M.A.
ஆசரியர் அல் ஜாமிஅதுல் ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி
இமாம் IRGT பள்ளிவாசல்
நாகர்கோவில்
நன்றி:இஸ்லாம் கல்வி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.