Breaking News
recent

மனிதநேய மக்கள் கட்சி பெயர், கொடியை பயன்படுத்த கூடாது!

மனிதநேய மக்கள் கட்சி யின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார். 

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தபோது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்ட விரோதமானது

மனிதநேய மக்களின் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாங்கள் கடந்த வாரம் பொதுக்குழுவை கூட்டிய நிலையில் முன்னாள் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி தஞ்சாவூரில் நடத்திய பொதுக்குழு சட்ட விரோதமானது.

எங்களை தவிர மற்றவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியையோ, பெயரையோ பயன்படுத்த கூடாது. இது குறித்த அறிவிப்பை நாங்கள் நாளிதழ்களில் வெளியிட்டுள்ளோம். அதையும் மீறி கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்துபவர்கள் (கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள்) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டணி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியில் தற்போது விரிசல் ஏற்படவில்லை. கீறல்தான் ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்பட்டு, இன்னும் அதிக உத்வேகத்துடன் கட்சி செயல்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறைபிடித்து செல்வது கண்டனத்திற்கு உரியது. இதற்கு 2 நாடுகளும் ஒருங்கிணைந்து பேசினால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும். 

இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உலகம் முழுதும் சென்று பேசி வருகிறார். டிஜிட்டல் இந்தியா என்று பெருமையாக கூறுகிறார். ஆனால் தாத்ரி போன்ற சம்பவங்கள் இந்தியாவிற்கு இழுக்கையே ஏற்படுத்துகின்றன. 

உரிமை பறிப்பு

தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் மனிதர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என்ற உரிமை கூட பறிக்கப்படுவது வேதனைக்குரியதாக உள்ளது. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களால் இந்தியா தலைகுனிவை சந்திக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.