Breaking News
recent

முஸ்லிமாகப் பிறந்தது பாவமா? விஷ விதை விழுந்தது எப்படி?

"இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" - வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய்.
"நான் முஸ்லிமா பிறந்தது பாவமா? என் பேரைச் சொன்னாலே ஏன் எல்லாரும் சட்டுனு வெறுப்பாப் பாக்குறாங்க?"- கல்லூரி செல்லும் சுல்தானின் கேள்விக்கு என்ன பதில்?

ஜனவரி 26, ஆகஸ்ட் 15, டிசம்பர் 6-களில் தங்கள் வீட்டு ஆண்களை வெளியே நடமாடவிடுவதற்கே, முஸ்லிம் பெண்களுக்குள் ஒரு பயம். "இத்தனை நாளா உன் ஃப்ரெண்ட் முஸ்லிம்னு நீ சொல்லவே இல்லியே. வேணாம், இனிமே அவனை நம்ம வீட்டுக்கெல்லாம் அழைச்சுட்டு வராத. அவன்கூடப் பழகுறதைக் குறைச்சுக்க!" - சில மாற்று மதத்து வீட்டுப் பிள்ளைகளுக்குச் சமீபகாலமாக இந்த அட்வைஸ் அதிகமாகி வருகிறது. ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்களில்... தாடி, தொழுகைத் தழும்புகளுடன் வருபவர்களை எக்ஸ்ட்ரா எச்சரிக்கையுடன் சோதிக்கும் உணர்வை போலீஸிடம் பார்க்க முடிகிறது.

ஒட்டுமொத்தமாக இல்லையென்றாலும்... ஆங்காங்கே இந்தக் காட்சிகள் கவலை தருகின்றன. முஸ்லிம்களுடன் இன்றளவும் 'தாயாப் புள்ளையாய்' - 'மாமன் - மச்சானாக'ப் பழகுவதே தமிழ்நாட்டு வழக்கம். ரமலான் நோன்புக் கஞ்சியும், தைத் திருநாளின் மிளகுப் பொங்கலும் பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அம்மன் கோயில் மின்விளக்குகளில் 'உபயதாரர் ரசாக்பாய்' பளிச்சிடுவதும், இந்துக் குழந்தைகளுக்கு தர்காவில் மந்திரிப்பதும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு. ஆனால், இங்கும் கூட இப்படி நெருடல் அலைகள்!

"மசூதியில் வெள்ளிக்கிழமை மைக் வைத்தால் இந்துக்களுக்கு இம்சையாக இருக்கிறது. இஸ்லாமிய நண்பனைப் பார்த்து ஸ்டைலாக தாடி வைத்துக்கொண்டவர்களுக்கு, இப்போது தாடியைப் பார்த்தால் அலர்ஜியாகிறது. பர்தாவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மறுபக்கம், சாதுப் பிள்ளையார் சச்சரவு சாமியாகிவிட்டார்!

சென்னையில் திருவல்லிக்கேணி, மதுரையில் காஜிமார் தெரு, நெல்லையில் பேட்டை, கோவையில் கோட்டைமேடு மட்டுமல்ல... வாணியம்பாடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட ஏரியாக்கள் 'குட்டி பாகிஸ்தான்' போலவே பாவிக்கப்படுகின்றன.

சமீப நாட்களாக மேலப்பாளையத்தில் முஸ்லிம்களுக்கு புது சிம்கார்டு கொடுப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். பல ஊர்களில் முஸ்லிம் பெயர்களைச் சொன்னாலே, லாட்ஜ்களில் 'ரூம் காலி இல்லை' என்று அவசரமாகப் பதில் வருவதையும் பார்க்க முடிகிறது" என்கிறார் சீனியர் பத்திரிகையாளர் ஒருவர்.

இன்னொரு பக்கம், "இந்துத்வா அமைப்புகள் கிளப்புவது பயத்தை அல்ல... எச்சரிக்கை உணர்வைத்தான். 'முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதே, முஸ்லிம்களை வேலைக்கு வைக்காதே!' என்று அந்த அமைப்புகள் உரக்கக் கூவுவது அபத்தமாகத் தோன்றினாலும், அதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது?" என்ற வாதம் வலுப்பெற்று வருவதும் வேதனை.

ஏன் இந்த அவல நிலை?

"பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பொத்தாம்பொதுவாக மதச் சாயம் பூசக் கூடாது" என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா. "முஸ்லிம் மக்கள் இந்தியாவில் தனிமைப் படுத்தப்பட்டு குற்றப்பரம்பரை போல முத்திரை குத்தப்படுவது அதிகமாகிவிட்டது. 'அநியாயமாக ஒரு மனிதனைக் கொலை செய்வது, முழுச் சமூகத்தையே கொலை செய்வதைப் போன்றது!' என்கிறது குர்-ஆன். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலகுழுக்கள்தான் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடுகின்றன. ஆனால், நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் மறுநிமிடமே, 'முஸ்லிம் தீவிரவாதிகள் சதி' என்று மதத்தையும் சேர்த்து அறிவித்துவிட்டுத்தான் குற்றவாளிகளைத் தேடவே செல்கின்றனர் போலீஸார். தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். யாரோ செய்த தவறுக்காக தாங்களும் சேர்ந்து பதைபதைக்கிறவர்களைத் தண்டிப்பது என்ன நியாயம்?" என்று வேதனையுடன் கேட்கிறார் ஜவாஹிருல்லா.

மனித நீதிப் பாசறையின் முன்னாள் செயலாளரான குலாம் முகம்மது, "கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 166 பேருக்கு ஜாமீன் வழங்கப்படவே இல்லை. 45 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 பேருக்கு 13 வருடத் தண்டனை வழங்கப் பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் தங்கள் நாட்களைக் கழித்துவிட்டதால் விடுவிக்கப்பட்டார்கள். இதில் யாரும் கவனிக்க விரும்பாத விஷயம்... கோவை வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. மறு வருடமே அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கிற அளவுக்குத்தான் போலீஸ் அந்த வழக்கை நடத்தியது. தப்பு செய்தவர் யாரானாலும் தண்டனை என்பது இந்த தேசத்தில் நிஜமென்றால், எப்படி, எங்கே பாகுபாடு வந்தது?" என்கிறார்.

"முஸ்லிம்களின் மீதான இந்தத் தீவிரவாத முத்திரைக்கு போலீசும் மீடியாவுமே முக்கியக் காரணம். கோவையின் சில பகுதிகளை வரைபடமாக வைத்திருந்தவரை, ஒரு முஸ்லிம் என்பதாலேயே கைது செய்தார்கள். 'கோவையைத் தகர்க்கச் சதி' என்று மீடியா அலறியது. விசாரித்ததில், ஊர் சுற்றிப் பார்க்க வந்த அப்பாவி என்று தெரியவந்து விடுவித்தார்கள். ஆனால், அவர் நிரபராதி என்பது எந்த மீடியாவிலும் பெரிதாக வரவில்லை. கேரளாவில் பார்சல் வெடிகுண்டு நான்கைந்து இடங்களுக்குச் சென்றதும் 'முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி' என்று அலறினார்கள். ஆனால், அதை அனுப்பியது மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் பிறகு கண்டுபிடித்தார்கள். இது போன்ற ஃபாலோ-அப் செய்திகளும் மீடியாக்களில் பெரிய அளவில் இடம்பிடிப்பதில்லை" என்கிறார் 'சமநிலை சமுதாயம்' இதழின் பத்திரிகையாளர் அப்துல் அஜீஸ்.

"நான் மத நம்பிக்கையற்றவன். எப்போதும் மத அடையாளங்களை அணிவதில்லை. ஆனால், மத நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் மதச் சின்னங்களை அணிந்துகொள்வதற்கான சுதந்திரமான சூழல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவன். பயங்கரவாத முத்திரைக்கு அஞ்சி, முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள நேர்வதைவிடவும் பெரிய கொடுமை உண்டா?" என்கிறார் கவிஞர் இன்குலாப் வேதனையாக.

"சந்தேகத்துக்குரியவர் ஒரு முஸ்லிம் என்றாலே 'உடனடிக் கைது' நிலை நிலவுகிறதா?" என்று தமிழக டி.ஜி.பி-யான கே.பி.ஜெயினிடம் கேட்டோம். "அப்பாவி முஸ்லிம்களை நாங்கள் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. தமிழகத்தில் தீவிரவாதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது புதிதாக அறியப்படும் குற்றவாளிகளைக் கைது செய்வது எங்கள் கடமை. அவர்கள் தரும் தகவல்கள் மூலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டுமே தமிழக போலீஸ் செய்கிறது" என்கிறார்.

யாருடைய நியாயங்களைக் காப்பதற்காக பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்களோ... அந்த மக்களின் நிம்மதி கெடுவதற்கு தாங்களும் ஒரு காரணம் என்பதை ஆயுதம் எடுத்தவர்கள் உணர வேண்டும். அதே சமயம், தலைப்பாகை வைத்த அத்தனை பேரும் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்பது போன்ற கண்மூடித்தனமான வெறியை வளர்க்கின்ற தவறான போதனைகளை மற்றவர்களும் கைவிட வேண்டும்.

இல்லையேல், இந்திய தேசத்தின் அமைதியையும் சகோதர உணர்வையும் குலைக்க வேண்டும் என்று நினைக்கும் சதிகாரர்களின் வேலையில் பாதியை நாமே செய்து முடித்துவிடுவோம்!-----ஆனந்த விகடன் 20-08-08-----
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.