Breaking News
recent

பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

தேர்தல் 2009! ஏறத்தாழ எல்லா கட்சிகளின் கூட்டணிகளும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டன! தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி-சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மதிமுக பமக மற்றும் இரண்டு கம்யூணிஸ்ட்கள் மறு அணியாகவும் நின்று போட்டியிடுகின்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் களம் காண்கின்றது. போதாக்குறையாக மூன்றாம் அணியென்றும் நான்காவது அணியென்றும் சில லட்டர் பேட் கட்சிகள் அணிகளை உருவாக்கி வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றது.

குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.

திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கு குறிப்பிடும்படியான ஒன்றும் செய்யாமலிருந்தாலும் தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.

அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.

அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.

அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.

ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.

தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.

மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.

குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.

ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

எம். எம். அவுலியா
முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

1 கருத்து:

  1. பெயரில்லா1 மே, 2009 அன்று 10:04 PM

    ம‌.ம.க. மீது சேற்றை வாரி இறைக்கும் அவுலியாவே.. ஒன்றை மறந்து விட்டீர்கள் தேர்தல் கூட்டணி என்பது கொள்கையளவில் இணைவது இல்லை. தேர்தல் வெற்றிக்காக ஒன்றிணைவது தான். அதனால் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

    இஸ்லாமியர்களின் தன்மானம் காக்கப்படவேண்டுமானால் ஒரு சீட் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும். மேலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போது தான் முஸ்லிம்களின் பிரச்சினையை யாருடைய குறுக்கீடுமின்றி நாடளுமன்றத்தில் விவாதிக்க முடியும். எந்தக் கட்சியின் சின்னத்திலாவது நின்று முஸ்லிம் கட்சிகள் வெற்றிப் பெற்றால் கொறடா உத்தரவு கிடைத்தால் தான் நாடாளுமன்றத்தில் பேசவே முடியும். நமது பிரச்சினையை பேச நாம் தீர்மானிக்க முடியாத அவலமான நிலையே ஏற்படும். இதையெல்லாம் களையப்பட வேண்டும் என்று தான் ம.ம.க. தனித்து நிற்பது முஸ்லிம்களின் தன்மானம் காக்கவே என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ம.ம.க. வேட்பாளர் ஜெயிக்கும் போது அவர் நாடளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை விவாதிக்க எந்த அரசியல் கட்சிகளின் அனுமதியையும் கேட்கத் தேவையில்லை. நம் பிரச்சினையை பேசவும் விவாதிக்கவும் நாம் ஏன் அந்நிய கட்சிகளிடம் மன்றாட வேண்டும். இந்த கோணத்தில் யோசித்துப் பார்க்கவும்.

    அடுத்து.. தவழும் குழந்தையாகிய ம.ம.க ஒருவேளை தோற்றாலும், நமது வாக்கு வங்கியின் அளவை தீர்மானிக்கவும் உதவும். நாளை நமது பலம் அரசியல் கட்சிகளுக்கு புரிய உதவும். ஆகவே.. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி சமுதாயத்தை இருண்ட சூழ்நிலைக்கு தள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் முஸ்லிம்களின் நோக்கம், எந்த கொறடாவும் கட்டுப்படுத்தாத சுதந்திரமான நாடளுமன்ற உறுப்பினர் வேண்டும்; அடுத்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியின் அளவு தெரியவேண்டும். மற்றவற்றை புறம் தள்ளுவோம், வெற்றி பெற மையிடுவோம்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.