வக்பு வாரிய கல்லூரி மாஜி முதல்வருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரையில், பேராசிரியைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த வக்பு வாரிய கல்லூரி முன்னாள் முதல்வர் இஸ்மாயில், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மீண்டும் பணியில் சேர்க்க கோரிய இஸ்மாயில் மனுவையும் தள்ளுபடி செய்தது. மதுரை கே.கே.நகரில், வக்பு வாரிய கல்லூரி 1958ல் துவக்கப்பட்டது. வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் பேராசிரியை ஷமீம்ராணி 1996 அக்., 1ல் பணியில்சேர்ந்தார். இஸ்மாயில் விரிவுரையாளராக 1978ல் கல்லூரியில் சேர்ந்தார். 1999ல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 2003ல் இஸ்மாயில் செக்ஸ் தொந்தரவு செய்வதாக ஷமீம்ராணி கல்லூரி நிர்வாகக் கமிட்டியிடம் புகார் செய்தார். 2003ல் கமிட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு இஸ்மாயில் அளித்த பதில் திருப்தியாக இல்லாததால் கமிட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழு விசாரணையில், இஸ்மாயில் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. 2003 ஜூலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு, அவரை பணியில் இருந்து நீக்க நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இந்நிலையில், கல்லூரியில் புதிதாக நிர்வாகத்தை ஏற்ற கமிட்டி, அவரை பணியில் மீண்டும் சேர்க்க முடிவு செய்து, 2006 மே 29ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மாணவர் அஸ்ரப் அலி பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
மேலும், இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்கும் நிர்வாக கமிட்டி முடிவை ரத்து செய்யக் கோரி பேராசிரியை ஷமீம்ராணி ஒரு மனு செய்தார். இம்மனுக்கள் தாக்கலானதையடுத்து நிர்வாகக் கமிட்டி, இஸ்மாயிலை பணி நீக்கம் செய்தது. இதனால், மீண்டும் தன்னை பணியில் சேர்க்கக் கோரி இஸ்மாயில் தனியாக ஒரு மனு செய்தார். இம்மனுக்கள், தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அஸ்ரப் அலி சார்பில் வக்கீல் சுப்பையா, ஷமீம்ராணி சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால், அரசு தரப்பில் ஜானகிராமுலு ஆஜராயினர்.
நீதிபதிகள் உத்தரவில், ""பேராசிரியைக்கு கல்லூரி முதல்வரே செக்ஸ் தொந்தரவு கொடுத்தது துரதிருஷ்டவசமானது. கல்லூரி நிறுவன முதல்வராக இருப்பவரிடம், இத்தகைய நடவடிக்கையை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தளவுக்கு முதல்வரை எதிர்த்து தைரியத்துடன் போராடிய ஷமீம்ராணியை கோர்ட் பாராட்டுகிறது. ஷமீம்ராணிக்கு, இஸ்மாயில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் (முரண்பாடான நடவடிக்கைகளுக்காக) ஷமீம்ராணிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இஸ்மாயில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என்றனர்.
நன்றி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்