Breaking News
recent

பட்டாசினால் கரியாய் போன உயிர்கள்.

பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டில் முறையாக அனுமதி பெறாமல், பட்டாசுக் கிடங்கில் விற்பனை நடந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலையில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அதன் பின்புறம் உள்ள கிடங்கில், பண்டிகைக் காலங்களில் பட்டாசுக் கடை இயங்குவது வழக்கம்.
பள்ளிப்பட்டைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் இந்தக் கடையை நடத்திவருகிறார். கிடங்கு போன்று ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ள இந்த இடத்தில் பட்டாசுக் கடைக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பது கேள்விக்குறி. இங்கு 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தீபாவளிப் பண்டிகைக்காக 40க்கும் மேற்பட்டோர் பட்டாசுகளை வாங்க குவிந்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுக் கடையில் தீப்பற்றி, புகை மண்டலமாக மாறியது. சிலர் தப்பிச் செல்ல பலரும் உள்ளே மாட்டிக் கொண்டனர். இந்த தகவலை அறிந்து, பள்ளிப்பட்டு மற்றும் சோளிங்கரில் இருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்தன. விரைந்து தீயை அணைத்த போதிலும், பட்டாசுக் கடை என்பதால் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஒரு வழிப் பாதை மற்றும் கரும்புகை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில், 32 பேரது உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன. இறந்த 32 பேர்களில் 18 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களில் 14 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சம்பவ இடத்தை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ., திருவள்ளூர் கலெக்டர், காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் இந்த பட்டாசு கடையில் தீவிபத்து தொடர்பாக குடோன் உரிமையாளர் ஜெய்சங்கர் மற்றும் கடை நடத்தி வந்த ஆனந்த்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இறந்தவர்களை தவிர 12 பேர் காணவில்லை என பொது மக்கள் புகார் கூறினர். இதனை தொடர்ந்து இன்று காலை குடோனில் போலீசார் தேடுதல் பணியை மீண்டும் துவக்கியுள்ளனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் போலீசார் குவிப்பு : பள்ளிப்பட்டு பட்டாசு குடோனில் நடந்த தீவிபத்தில் பலியான 32 பேரது உடல்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டன. அங்கு போதிய இடவசதி இல்லாததால் உடல்கள் மருத்துவமனை வளாகத்தில் தரையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்ப்தற்க்காக பொது மக்களும், இறந்தவர்களின் உறவினர்களும் உள்ளே வருவதற்கு முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(ஒரு சிலரின் அலட்சியத்தால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியாகும் கொடூரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பொது மக்களுக்கும் அலட்சியம்,அதிகாரிகளும் அலட்சியம். நம் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை சொல்லிக்கொடுக்க நாம் தயாராக வேண்டும். சுற்றுச்சூழல் காக்கப்படல் வேண்டும்.தவறு செய்பவர் மீது நடவடிக்கை கோரி மனு செய்தால் புகார் அளிப்பவரையே குற்றவாளியைப்போல் நடத்துவதும் நம் நாட்டில்தான் சாத்தியம். அதிகார வர்க்கம் நிறைய மாற வேண்டும். இந்த மாதிரி செயல்படும் கடைகளை காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒவ்வொரு வருடமும் நாம் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழக்க வேண்டியதிருக்கும். மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படாமலும், எஞ்சியவர்களை பத்திரமாக மீட்கவும் துரித நடவடிக்கை எடுத்து பெரும் விபத்துக்கு காரணமானவர்களை உடனே தண்டிக்க வேண்டும். தயவு செய்து காசு வாங்கிகினு லைசென்ஸ் கொடுகாதிங்க)
crown.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.