Breaking News
recent

ஏமாற்றும்(போலி மருத்துவன்) பிணிக்கு மருந்துண்டோ?

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. பொதுவாக நோயின்றி வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், இன்றைய நாகரிக உலகில், மாறி வரும் உணவுப் பழக்கங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்கு நோய்கள் உண்டாவது அதிகரித்து வருகிறது. அவ்வப்போது தோன்றும் புதுப் புது நோய்கள் மனித சமுதாயத்தையே அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றன.

அத்தகைய நோய்களுக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளும் வெவ்வேறு பெயர்களில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், "உணவே மருந்து' என்ற நம் ஆன்றோர்களின் நெறிமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாறி, பலரது வாழ்க்கையில் "மருந்தே உணவு' என்ற நிலைமை வந்துவிட்டதை நாம் இன்று கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையவர்களுக்கு உணவு (மருந்து) அளிக்கும் விதமாக மருந்துக் கடைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், நாள்பட்ட மற்றும் தீராத நோயால் அவதிப்படுபவர்களின் நிலைமை சொல்லி மாளாது. அவர்களில் உடனடி நிவாரணம் பெற விரும்புபவர்கள், ஆங்கில முறை (அலோபதி) மருத்துவம் செய்துகொள்கின்றனர். நிதானமாகவும், அதே நேரத்தில் சீராகவும் நோய் குணமானால் போதும் என்று எண்ணுபவர்கள் பாரம்பரிய முறைகளான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை நாடுகின்றனர்.

அவ்வாறு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், நோய் குணமாகவில்லை என்றும் பாரம்பரிய மருத்துவ முறை டாக்டர்கள் இருவர் மீது அண்மையில் புகார் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை மயிலாப்பூரில் "திருவிதாங்கூர் ராஜ வைத்தியசாலை' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் விஜயகுமார் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மான் கறி வைத்தியம், கோழிக் கறி வைத்தியம் செய்வதாகக் கூறி, நோயாளிகளிடம் பண மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக டாக்டர் விஜயகுமார் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரது மருத்துவமனை அலுவலகம், வீட்டில் நடைபெற்ற போலீஸ் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை தி.நகரில் 3 நட்சத்திர ஹோட்டல், மதுரையில் வீடு, பழத் தோட்டம் போன்ற சொத்துகளை அவர் வாங்கியிருப்பதாகவும், அந்தச் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு போலீஸôர் தெரிவித்திருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க, டாக்டர் விஜயகுமாரின் சகோதரர் ஜெயக்குமார், இரண்டு வாரங்களுக்கு முன் கோவையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். கோவைப்புதூரில் "ரோஸ் ஆயுர்வேதிக் டிரஸ்ட்' என்ற பெயரில் மன நல மருத்துவமனை நடத்தி வந்தவர் இவர். சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்தவர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞருக்கு தங்கபஸ்ப சிகிச்சை அளிப்பதாகக்கூறி ரூ.80 ஆயிரம் மோசடி செய்ததாக இவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை அவர் திரும்ப அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதே போல வேறு சிலர் கொடுத்த புகார்களின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவரது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

மேலே சொன்ன இந்த இரண்டு டாக்டர்களும் நோயாளிகளை ஏமாற்றி, பண மோசடி செய்ததாகப் புகார்களில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் நிலையில், ஏற்கெனவே அவதிப்படும் நோயாளிகளிடம் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த டாக்டர்களின் செயல்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல ஆகிவிடும்.

உயிர் காக்கும் உன்னத சேவையைச் செய்யும் டாக்டர்கள், தங்களுக்கு கடவுளாகவே காட்சியளிப்பதாக நோயாளிகள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு வருகிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு டாக்டர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய டாக்டர்களின் கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல், தரமான டாக்டர்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற நோயாளிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசும் முன்கூட்டியே கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், இது போன்ற மோசடிகளைத் தவிர்க்க முடியும்
crown

crown

1 கருத்து:

  1. ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வர். போலி மருத்துவர்களை இனங்கண்டு ஒதுக்க உங்களது பதிவு உதவும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.