Breaking News
recent

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய பார்வை!

உலகில் நீண்ட நெடும் காலமாக ஆணாதிக்கமே நிலவி வருகின்றது பெண்கள் மிக மோசமாக நசுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் அடிப்படை மனித உரிமைகள் கூட பல போது மறுக்கப்படுகின்றனளூ பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவமே பெரும்பாலான ஆண்களிடம் மிகைத்து காணப்படுகின்றது. இவை எல்லாம் பெண்களின் விடுதலைக்காக குரலெழுப்புவோரின் சில மனக் குமுறல்கள். இவை நியாயமான மனக்குறைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த பெண் விடுதலைப் போராளிகள் பெண்களின் அவல நிலைக்கு இஸ்லாமும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறுவதைத் தான் எங்களால் புரிய முடியாமல் இருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இஸ்லாத்தைக் குற்றஞ் சாற்றுவதற்கும் அதன் மீது சேறு பூசுவதற்கும் மூன்றில் ஒன்று காரணமாக அமையலாம் எனத் தோன்றுகின்றது. அவையாவன:

1. இஸ்லாம் பற்றிய அறியாமை
2. இஸ்லாத்தின் மீதுள்ள பகைமையும் காற்புணர்ச்சியும்
3. முஸ்லிம்களிற் சிலர் இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்து அதனை ஆணாதிக்க மதமாகக் கொண்டு சமுதாயத்தில் செயற்படுகின்றமை


இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அதன் வருகை முழுமனித சமுதாயத்திற்கும் ஓர் அருளாக அமைந்தது என்பதை மனித வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி பார்க்கின்ற எவரும் எளிதில் புரிந்து கொள்வார். இஸ்லாம் எல்லோருக்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும். ரஸுலுல்லாஹ்வின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார்.
அன்று பெண் என்பவள்,


1. ஆணின் அடிமை
2. அவனின் சிற்றின்பப் பொருள்
3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்
4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்
5. ஒரு தீமை, அத்;தியவசியத் தீமை
6. குடும்பத்தின் அவமானச் சின்னம்
7. ஒரு சுமை
8. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.


பெண்ணினம் இவ்வாறு மிக இழிவாக நோக்கப்பட்டும் கேவலமாக நடாத்தப்பட்டும் வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூது பொதுவாக மனித விடுதலையை இலக்காக கொண்டிருந்தது. குறிப்பாகவும் சிறப்பாகவும் பெண் விடுதலையை அது அடிநாதமாக கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஒரு பெண் விடுதலை மார்க்கம் என வர்ணித்தால் அது மிகையாகாது.


இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் ஒரு பெண் என்பதும் இஸ்லாத்திற்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு பெண் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.
இஸ்லாம்,

1. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு உயிர் கொடுத்து காத்த மார்க்கம்.
2. வாரிசுச் சொத்தில் பண்டத்துடன் பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டவளுக்கு பண்டத்தில் பங்கு பெற்றுக் கொடுத்த மார்க்கம்.
3. அவமானச் சின்னமாக கருதப்பட்டவளை சுவனத்து அரசியாக, தனது பெற்றோரை நரகம் செல்ல விடாமல் காக்கும் பெரும் பாக்கியமாக மாற்றிய மார்க்கம்.
4. அகதியின் நிலையில் இருந்தவளை அதிதியின் நிலைக்கு கொண்டு வந்த மார்க்கம்.
5. வெறும் சிற்றின்பப் பொருளாகக் கருதப்பட்டவளுக்கு சுவனத்திற்கான கடவுச்சீட்டை வழங்கும் தாய்மை என்ற உயர் அந்தஸ்த்தை வழங்கிய மார்க்கம்.இஸ்லாம் பெண்களை,

1. மனிதன்
2. குழந்தை
3. மகள்
4. சகோதரி
5. தாய்
6. பாட்டி

போன்ற பல நிலைகளில் வைத்து கௌரவித்திருக்கின்றது ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கான உரிமைகளையும் உத்தரவாதப் படுத்தியுள்ளது. பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)


பெண்களின் சமய உரிமைகள்

ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவரும் படைக்கப்பட்ட நாள் முதல் ஆண், பெண் இருபாலாரையும் அல்லாஹ் சரிசமமாகவே நடாத்தி வந்துள்ளான் என்பதை காணமுடிகின்றது. அவ்விருவரையும் அல்லாஹுத் தஆலா எத்தகைய பாகுபாடுமின்றி சமமாக நடாத்தினான் என்பதற்கு அல்குர்ஆன் சான்று பகர்கின்றது. உதாரணத்திற்காக பின்வரும் அல்குர்ஆன் வசனங்களை இங்கு குறிப்பிடலாம்.


மேலும் நாம், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் குடியிருங்கள்ளூ நீங்கள் இருவரும் நாடியவாறு தாராளமாக இதிலிருந்து புசியுங்கள். ஆனால் இம்மரத்தை நீங்கள் இருவரும் நெருங்க வேண்டாம். அவ்வாறாயின் நீங்கள் இருவரும் அநியாயக் காரர்களில் ஆகிவிடுவீர்கள் என்று கூறினோம். (2:35)

'பின்னர் அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் ஊசாட்டத்தை உண்டாக்கினான். மேலும், (அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள் அல்லது நிரந்தரமாக இருப்பவர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே அன்றி வேறெதற்காகவும் உங்கள் இரட்சகன் அம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை| என்று கூறினான்.

' நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் ஒருவனாக இருக்கின்றேன்| என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்தான்.

'பின்னர் அவ்விருவரையும் ஏமாற்றி கீழே இறங்கச் செய்தான் எனவே அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைக்கவே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் அவ்விருவருக்கும் வெளியாயிற்று. சுவனத்தின் இலைகளைக் கொண்டு அவ்விருவரும் தங்களை மூடிக்கொள்ளலாயினர். அவ்வேளையில் அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரையும் அழைத்து இம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா?, நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்கள் இருவருக்கும் கூறவில்லையா?|(என்று கேட்டான்.) அதற்கு எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதம் இழைத்துக் கொண்டோம் நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிட்டால் நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களில் ஆகிவிடுவோம்.|என்று அவ்விருவரும் கூறினர்.(7:19-23)நற்காரியங்களுக்கான கூலியிலும் ஆண், பெண் இருபாலாரும் எத்தகைய பாகுபாடுமின்றி சமமாகவே நடாத்தப்படுவர் என்பதை அல்குர்ஆன் அழகாக விளக்குகின்றது. இந்தவகையில் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.


அவர்களுடைய இரட்சகன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தான். உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் நன்மை செய்த போதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கி விட மாட்டேன். ஏனெனில், (ஆணோ, பெண்ணோ) உங்களில் ஒரு சாரார் மற்ற சாராரை சார்ந்தவராவர்| என்று கூறினான்... (3:195)


'ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் எவர் உண்மையாகவே விசுவாசம் கொண்டவராக இருக்கும் நிலையில் நற்கருமங்களை செய்கின்றாரோ அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பர்ளூ அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (4:124)

நபி (ஸல்) அவர்கள் முதலாம் இரண்டாம் அகபா உடன்படிக்கைகளின் போதும் ஆண்களிடம் பைஅத் பெற்றது போலவே பெண்களிடமும் பைஅத் பெற்றார்கள். இது பற்றி ஸூறா அல்மும்தஹினாவின் 12ஆம் வசனம் பின்வருமாறு விளக்குகின்றது.


நபியே! அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை என்றும் திருடுவதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் பிள்ளைகளை கொலைச் செய்வதில்லை என்றும் அபாண்டங்களை இட்டுக்கட்டிச் சொல்வதில்லை என்றும் நன்மையான விடயத்தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும் உம்மிடம் வாக்குறுதியளிப்பதற்காக முஃமினான பெண்கள் உம்மிடம் வந்தாள் அவர்களுடன் நீர் வாக்குறுதி செய்துகொள்வீராக.

மேலும் நீர் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கிருபையுடையவன். (60:11)


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய உரிமைகள்


இல்லற வாழ்வில் பெண்ணுக்குரிய அனைத்த உரிமைகளையும் இஸ்லாம் நிறைவாக வழங்கியுள்ளது. ஆரம்பமாக தனது வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையை அது பெண்ணுக்கு வழங்கியுள்ளது.


ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும்.

என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள் (புகாரி, அஹ்மத்)
'ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும் (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்;திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க ஷவலி| முனைகின்ற போது அதனை மறுக்கின்ற நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது வலி| ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும். பொருள் விடயத்திலேயே ஷரீஅத் இத்தகைய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதாக இருந்தால் முழு வாழ்வுடனும் தொடர்பான திருமண விடயத்தில் எவ்வாறு வலி| தான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையைப் பெறுவார்?! உயிர், பொருளை விட மேலானது. திருப்தியில்லாத நிலையில் துவங்கும் குடும்ப வாழ்வினால் விளையும் கேடுகளுக்கு முன்னால் பொருள் நஷ்டம் அலட்டிக் கொள்ளத்தக்கதல்ல.


ஆயினும் ஒரு யுவதி அனுபவ குறைவினாலும் முதிர்ச்சியின்மைக் காரணமாகவும் சிலபோது தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்வதில் தவறு இழைத்து விட வாய்ப்புண்டு. இதனால் ஷரீஅத், தனது பொறுப்பில் இருக்கும் யுவதிக்கான கணவனைத் தெரிவு செய்து மணமுடித்து வைக்கும் பொறுப்பை தந்தை முதலான வலிகளுக்கு வழங்கியுள்ளதோடு தனது வலி| யின் தெரிவை ஏற்கும் உரிமையையும் மறுக்கும் உரிமையையும் அந்தப் பெண்ணுக்கு அளித்துள்ளது. அவ்வாறே தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவனை தனது பொறுப்பில் உள்ள பெண் தெரிவு செய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வலி| க்கு வழங்கியுள்ளது.ஆயினும் இன்று நடைமுறையில் ஒரு பெண் தனக்குரிய கணவனை சுதந்திரமாக தெரிவு செய்யும் உரிமையை பல போது இழந்து விடுகின்றாள். அவளது விருப்பு, வெறுப்பை விட தாய், தந்தையின் விருப்பு, வெறுப்பே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. தான் விரும்பாத போதும் தந்தையின் விருப்பம், தாயின் தெரிவு என்பதற்காக ஒருவருக்கு வாழ்க்கைப்படும் நிலை பெண்களில் பலருக்கு ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்றோர் இது விடயத்தில் மிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

ஒரு தகப்பனோ அல்லது வலி| ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு வலியாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும் இல்லாத போது செல்லுபடியாகாது. இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும்.ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான வலிமாரே தீர்மானிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்கு தகுதியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்கு தகப்பன் முதலான ஷவலி| மாருக்கு உரிமையுண்டு என்பதை இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


இஸ்லாம் பெண்ணுக்கு தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்கியிருப்பது போல மஹர் பெறல் நபகா வாழ்க்கைச் செலவைப் பெறல் முதலான மற்றும் பல உரிமைகளையும் வழங்கியுள்ளது.


பொருளாதார உரிமைகள்

ஆண்களைப் போலவே பெண்களும் இஸ்லாத்தில் பல்வேறு பொருளாதாரம் சார்ந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

1. சொத்துரிமை
2. விற்றல், வாங்கல்
3. வாடகைக்கு விடுதல்
4. இரவல் கொடுத்தல்
5. ஈடுவைத்தல்
6. வக்பு செய்தல்
7. வாரிசுச் சொத்தில் பங்கு பெறல் முதலான எல்லாவகையான கொடுக்கல் வாங்கல், தொழிற்சார் நடவடிக்கைகளிலும் பொருளாதார விவகாரங்களிலும் ஈடுபடும் பூரண உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பெண்களின் சொத்துரிமையைப் பற்றி அல்குர்ஆன் இரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது.'ஆண்கள் சம்பாதித்தது ஆண்களுக்குரியதாகும், பெண்கள் சம்பாதித்தது பெண்களுக்குரியதாகும். (4:32)

பெண்களுக்கான உரிமைகளை உத்தரவாதப் படுத்தியுள்ள இஸ்லாம் அவர்களின் கடமைகளைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது. ஒரு முஸ்லிம் பெண்,

1. தன் பால்
2. தனது பெற்றேரின் பால்
3. தனது கணவனின் பால்
4. தனது குழந்தைகளின் பால்
5. தனது சமூகத்தின் பால்


நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு என இஸ்லாம் கூறுகின்றது. பெண்கள் தமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வது போலவே தமது கடமைகளையும் அறிந்து நிறைவேற்றல் வேண்டும்.


ஆண், பெண் இருபாலாரையும் படைத்த அல்லாஹ் அவர்களின் இயல்பு, சுபாவம், உடல், உள வேறுபாடுகள் முதலானவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டே அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துள்ளான் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்


நன்றி:அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.