Breaking News
recent

முடங்கிப்போன "முஸ்லீம்களின் பொருளாதாரம்"

முடங்கிப்போன "முஸ்லீம்களின் பொருளாதாரம்"

இந்த பகிர்வை எழுத தூண்டுகோலாக இருந்த சகோதரர் யாசிர் அவர்களுக்கு நன்றி.

சரி விசயத்துக்கு வருவோம்

இதன் ஆச்சர்யம் எது என்று ஆராய்ந்தால் வரதட்சணையை அறிமுகப்படுத்திய முதல் துரோகியும் ..அதை ஒரு வேதவாக்குமாதிரி காப்பாற்றி வரும் சில "பெருசுங்க'ளும்தான். இந்த நடைமுறையில் அழிந்தது சில இளைஞர்களும்தான் என்றால் அது மிகை இல்லை. வரதட்சணை வாங்கியதன் மூலம் படிக்காமலும் , சம்பாதிக்காமலும்ஊர் சுற்றும் சில வெறும்பயல்கள் தனக்கு ஏதோ ஓரு திறமை இருக்கிறது என்பது போல் ஊரில் நடமாடுவது பிறகு பிழைக்கபோகும் நாட்டில் உண்மை உச்சந்தலையில் அடித்த மாதிரி பாடம் நடத்தும்போது தடுமாறுவதும் உள்ளங்கை நெல்லிக்கனி [ என்னா உதாரணம் இது ...வேறு கனி வைத்தால் கண்ணுக்கு தெரியாதா?]

முதலில் ஒரு 20 வருட வரதட்சணையின் பரிணாமத்தை பார்ப்போம்.
நிச்சய தார்த்தம் என 10 பேரை கூப்பிட்டு கேசரி / கொஞ்சம் மணிக்காரபூந்தி +டீ என இருந்த விசயம் இப்போது அரசியல் கட்சிக்கு ஆள் சேர்ப்பதை விட மோசமாகி 100 பேரை கூப்பிடுகிறேன் 200 பேரை கூப்பிடுகிறேன் மோட்டோர் சைக்கிள் / லேப் டாப் கம்ப்யூட்டர் [VCD/DVD ஓடுமா காக்கா என அப்ரானியா கேட்கும் மாப்பிள்ளைகளுக்கும்] / பால்குடம் / 10, 15 சகன் அல்வா / செப்புக்குடம் , சில்வர்குடம் / அமுல்ஸ்ப்ரே , பூஸ்ட், சீனி/ வாசிங் மெசின், பவுன் நகை , மணைக்கட்டு....இப்போது சொல்லுங்கள் இது எல்லாம் வரதட்சணையின் புதிய பரிணாமம் எப்படி முஸ்லிம்களிடம் ஒரு வைரஸ் மாதிரி நுழைந்திருக்கிறது???.

நிச்சயதார்த்ததுக்கும் இவ்வளவு பில்டப்பா என கேட்டால் நம்மை ஏதோ தொண்டி,நம்புதாலையிலிருந்து பிழைக்க வந்தவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

ஒரு மனிதனின் மொத்த உழைப்பை ஒரே ஒரு நாளில் களவாட கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வரதட்சனை. இதற்கு பெயர் வேண்டுமானால் வட்டார வழக்குபடி பெயர் வைத்துக்கொள்ளலாம்..மொத்தத்தில் இது ஒரு நவீன திருட்டு.சமிபத்திய இஸ்லாமிய புரிந்துணர்வில் முன்பு வரதட்சினை வாங்கியவர்கள அதை திருப்பி கொடுக்கும் அல்லது கொடுக்க நினைக்கும் நிலை கண்டு சந்தோசம்.

நம் ஊர்ப்பக்கம் ஏன் முஸ்லீம்கள் தொடர்ந்தாற்போல் வசதியாக இல்லை.?

பெண்களுக்கு வீடு என்ற சிஸ்டம் பெண்ணை பெற்றவர்களின் பொருளாதார விசயத்தில் ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது.

ஆனால் அந்த வீட்டை கட்ட ஒரு பொறுப்புள்ள தகப்பனின் பல கால உழைப்பும் வருமானமும் அதற்காகவே செலவாகிறது.வீடு என்பது வருமானம் தரும் சொத்தல்ல என்று தெரிந்தும் அதற்காக பெரும்பணம் / வங்கியில் நகைக்கடன் / உறவினர்களிடம் கைமாத்து [ ஆயிரக்கணக்கில்] செலவழிப்பது ஏன் என்பது தெரியவில்லை.வசதியாக வீடு கட்டி வாழ்வதில் தவறில்லை...ஆனால் வீட்டில் உசுப்பேத்தும் பெண்களின் ஆசைக்காக கடனாளியாகி பிறகு கடனை அடைக்க உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்..அதற்க்கு பதில் உங்கள் வருமானத்தை பெருக்கும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.

கல்யாணம் என்ற பெயரில் பெண்ணை பெற்ற தகப்பனை 'ஸ்பெசல் மொட்டை" அடிக்க நிறைய சம்பிரதாயங்களை நம் ஊரில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.அதற்க்கக கல்யாணங்களை ஏதோ மகிழ்ச்சி இல்லாத விசயம் மாதிரி ஒரு விமரிசை இல்லாமல் நடத்தவும் என நான் பாடம் எடுக்கவில்லை. மாப்பிள்ளையை பெற்றவர்கள் கொஞ்சம் பெண்ணை பெற்றவர்களையும் நினைத்துப்பார்க்க சொல்கிறேன்

"எங்களுக்கா கேட்கிறோம் அவ்வ மவளுக்காதானே எல்லாம்" என்று தத்துவம் பேசும் ஞானிகளே ...எங்கே இருந்து வந்தது இந்த பெண்ணுக்கு வக்காலத்து..எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு வருசமாய்?

வரதட்சணை வாங்குவது தவறு எனும் விழிப்புணர்வு வர முக்கியம் நாம் செய்ய வேண்டியது வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த மாப்பிள்ளையின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் ஜும்மா பிரசங்கத்தின் போது ஒரு சிறு அறிவிப்பாக செய்யலாம். ஆடித்தள்ளுபடியையும் , நகைக்கடை/ புடவைக்கடை விளம்பரங்களையும் காது கொடுத்து கேட்கும் நம் ஊர்சனம் நிச்சயம் இதையும் கேட்கும்.

பெண்ணுக்கு வீடு என்பதால் நம் ஊரில் நிறைய புது வீடு இருக்கிறது, ஆனால் அதன் அஸ்திவாரத்துக்குள் கருங்கல்லும் சிமண்ட்டும் போடுவதற்க்கு பதில் நம் ஊர் ஆண்களின் வாழவேண்டிய இளமைக்காலமும் கனவுகளும் மொத்தமாக புதைக்கப்பட்டிருக்கிறது.

வரதட்சணை கேட்பதற்க்கு எதிர்காலத்தின் பொருளாதார சவால்களின் மீதான பயம் தான் காரணமா?..

நீங்கள் இந்த உலகத்தின் காற்றை சுவாசிக்குமுன் உங்களுக்கான தாய்ப்பாலை உருவாக்கி வைத்து இருக்கும் இறைவன் எப்படி உங்களை ஏமாற்றுவான்????

ZAKIR HUSSAIN
Zakir Hussain

Zakir Hussain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.