Breaking News
recent

உனக்கென்ன மனக் கவலை ? -”முதுவைக்கவிஞர் “அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற
முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற
அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே
அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை ?

கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன்
கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு
சால்மிகுந்த சங்கைநபி வாழ்வுமுறை உனக்கிருக்க
சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை ?

பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும்
புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும்
கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும்
கருணை நபி ஹதீஸ்இருக்க உனக்கென்ன மனக்கவலை ?

துன்பத்தில் துயரத்தில் இன்பத்தில் இலட்சியத்தில்
தொடராக விளைகின்ற சோதனையில் வேதனையில்
புண்பட்ட மனத்தவரும் பண்பட்டு நடை பயில
புகழ்ஸஹாபி வாழ்விருக்க உனக்கென்ன மனக்கவலை ?

உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைகட்கும்
இன்னதுதான் ஆகுமென்றும் இதுவெல்லாம் ஆகாதென்றும்
கண்ணியமாய்ப் பிரித்தெடுத்து சட்டங்கள் சமைத்தெடுக்கும்
ஷரீஅத்தின் தெளிவிருக்க உனக்கென்ன மனக்கவலை ?

இருளுக்கு ஒளிவிளக்கு ! இல்லார்க்கு அருள்விளக்கு !
இம்மைக்குச் சுடர்விளக்கு ! மறுமைக்குத் தொடர்விளக்கு !
அருளுக்கு அருளான இஸ்லாமே இருக்கையிலே
அல்லாஹ்வின் அடியானே ! உனக்கென்ன மனக்கவலை ?


நன்றி : குர்ஆனின் குரல் ( நவம்பர் 2010 )
muslimmalar

muslimmalar

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.