Breaking News
recent

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
கீழக்கரை  அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று 26/12/2010 காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலிகாப்டரும்,அதிநவீனஹோவர்கிராப்ட்படகும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது.      
 
மீட்பில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
 
அவர்களுடன் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தொண்டர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்று களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 20பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரியபட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.
Unknown

Unknown

3 கருத்துகள்:

 1. இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

  அல்லாஹ் உறவுகளை இழந்த குடும்பத்திற்கு பொறுமையை தந்தருள துஆ செய்வோம்.

  அனுமதி இல்லாத படகுகளில் பயனிப்பது ஆபத்து என்பதை இன்னும் அறியாத மக்களாக இருக்கிறார்களே. விழிப்புணர்வு அவசியம்.

  பதிலளிநீக்கு
 2. இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

  பதிலளிநீக்கு
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன், படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இன்னும் விழிப்புனர்வுஇல்லாமலே இருக்கின்றார்கள் என்பது வேதனையான விஷயம் அதிலும் ஆண்கள் ஒரு படகிலும் பெண்கள் குழந்தைகள் ஒரு படகிலும் சென்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பது வியப்பே பாதுகாப்பு விசயத்தில் அவர்கள் எதையும் கவனிக்கவில்லை என்பது செய்திகள்மூலம் தெளிவாகத்தெரிகிறது எது எப்படியோ உயிரிழந்தவர்களின் பாவங்களை இறைவண் மண்ணித்து அவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக என நாம் அனைவரும் அவர்களுக்காக துஆ செ;யவோமாக.

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.