Breaking News
recent

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி!முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கடந்த 26.03.2011, சனிக்கிழமை கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறரோம்.

உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறரோம். குறிப்பாக அரபுஇஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இக்காலத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் இந்த மாநாடு நடைபெறுகிறது. இங்கு இந்த மாற்றங்கள் பற்றி சார்பாகவோ எதிராகவோ கருத்து கூற வரவில்லை ஆனால் மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் ஊடகவி யலாளர்களும் ஊடகங்களும்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவேதான் இன்று இந்த மாற்றங்களை ‘மீடியாப் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் சிலர் ‘பேஸ்புக் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் மற்றும் சிலர் ‘அல்ஜஸீரா புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள். சர்ச்சைக்குரிய ‘விக்கிலீக்ஸ்’ உரிமையாளர் ஜூலியன் அஸான்ஞ் “நான்தான் இந்த மாற்றங்களுக்கு வழிகோலியவன்’’ என்று பகிரங்கமாக உரிமை கோரியிருக்கிறார். இந்த மாற்றங்களின் சாதக, பாதகங்கள் எப்படி இருந்தாலும் உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னாலும் இந்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் ஊடகங்கள் இருக்கின்றன என்பது உண்மை.
இந்தவகையில்,இன்றைய உலகின் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் இந்த ஊடகவியலாளர்கள்தான்’’ என்று பல தசாப்தங்களுக்கு முன்னால் சமூகவியல் அறிஞர் ஒருவர் வர்ணித்தார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை கண்கூடாகக் கண்டு வருகிறரோம். ஊடகவியலாளர்கள் கருத்து உருவாக்குபவர்கள் என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்று  புரட்சியை உருவாக்குபவர்களாக மாறியி ருக்கிறார்கள். இது மிகப்பெரிய உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் ஆழமான கருத்தைச் சொல்லி யிருந்தார்.

“யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் 19ஆம் நூற் றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந் தார்கள் விமானப்படை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாக திகழ்ந்தார்கள் யாரிடம் ஊடக பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் சக்தியாக இருப்பார்கள்.”

இந்த உண்மையை இன்று நாங்கள் உலகில் காண்கிறரோம். உலக அரங்கிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் கூட முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஒரு தலைநிமிர்ந்த சமூக மாக மாற வேண்டும் என்றிருந்தால் இந்த சமூகம் அறிவூட்டப்பட வேண்டும் இந்த நாடு அறிவூட்டப்பட வேண்டும் சர்வதேசம் அறிவூட்டப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி சக்திவாய்ந்த மீடியாக்களின் சொந்தக்காரர்களாக நாங்கள் இருப்பதுதான்.

உண்மையை உரத்துச் சொல்கின்ற மீடி யாதான் இந்தக் காலத்தின் ஜிஹாத். இக் காலத்தில் நாங்களும் நீங்களும் சுமக்க வேண்டிய ஆயுதம் அதுதான். கத்தியில்லாத ரத்தமில்லாத யுத்தத்தை செய்பவர்கள் சாதகமாகவோ பாதகமாகவோ இந்த ஊடகவியலாளர்கள்தான். அவ்வளவு பெரிய சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற அறி ஞர்களுள் ஒருவர் பேராசிரியர் குர்ஷித் அஹ்மத். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரை நான் சந்தித்தபோது அவர் வலியு றுத்திச் சொன்ன ஒரு கருத்தை இங்கு முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

“இன்று இஸ்லாமிய உலகத்திற்கு மூன்று வகைகயான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். முதலாவது புத்திஜீவிகள் (Intellectuals), இரண்டாவது துறைசார் நிபுணர்கள்  (Professionals) மூன்றாவது ஊடகவியலாளர்கள்  (Media Persons)

எந்தளவு தூரம் உங்களுடைய பொறுப்பு மிக மகத்தானது என்பதை நினைத்துப் பாருங்கள். ஊடகத் துறை என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு  Mission  அல்லது ஒரு Noble Vision.

உலகிலே சில துறைகள் இருக்கின்றன. அவை தொழிலும் அல்ல வருமானத்துக் கான வழியும் அல்ல. அவை புனிதமானவை அவற்றின் சேவைகள் மிக உயர்ந்தவை இஸ்லாமியக் கண்ணோட்டத்திலே இபா தத்தாக கருதப்படக் கூடியவை. அந்தவகை யிலே அரசியல் என்பது வருமானத்துக்கு வழிசெய்கின்ற ஒரு துறை அல்ல. அது ஒரு சேவை மிகப் புனிதமான சேவை. மருத்து வத் துறை என்பது வருமானம் பெறுகின்ற ஒரு துறை அல்ல. அது ஒரு சேவை புனித மான சேவை. கற்பித்தல் என்பது வருமானம் பெறுவதற்காக தொழில் அல்ல அது ஒரு சேவை புனிதமான சேவை.

அதேபோலத்தான் ஊடகத்துறை என்பதும் வருமானத்துக்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு துறை அல்ல. அது ஒரு சேவை புனித மான சேவை. குறிப்பாக முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இந்த ஊடகப் பணியை ஒரு தொழிலாக (Pசழகநளளழைn) அல்லாமல் ஒரு புனிதப் பணியாக (Noble Vision)  எடுத்துக் கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக நானும் நீங்களும் வாழும் இந்தக் காலத்தில் எல்லாமே வர்த்தகமயப்பட்டிருக்கிறது. புனிதமான துறைகள், சேவைகளும் வர்த்தகமயப்படுத்தப்பட்டிருக்கின்றன அவை வருமானத்துக்கு வழியமைத்துத் தருகின்ற துறைகளாக மாற்றியமைக் கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறரோம்.

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் இதனை ஒரு தொழிலாகக் கருதாமல் ஏனையவர்க ளுக்கு செய்யும் சேவையாகக் கருதுவார். முஸ்லிம் ஊடகவியலாளர் ஒர் இனவாதி அல்ல அவர் ஒரு கொள்கைவாதி. முஸ்லிம் எழுத்தாளர்கள் எந்த அளவு இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணி தமது எழுத்துக் களை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எல்லாம் அவர்கள் ஏற்று நம்பிய இந்த தீனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் அடிப்படையைப் பேணி நடக்கிறார்களா?

ஒரு முஸ்லிம் எழுத்தாளர் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர், கலைஞன், கவிஞன் பேணவேண்டிய சில அடிப்படையான தர்மங்கள் இருக்கின்றன. அவற்றைப் பேணி நடப்பதைத்தான் முஸ்லிம் என்ற அடை மொழியால் அழைக்கிறரோம்.

இந்த நாட்டில் வாழும் ஒரு சாரார் மொழியால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இன்னொரு சாரார் பிரதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்னுமொரு சாரார் இனத்தால் அடை யாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த நாட்டி லும் சரி, சர்வதேசத்திலும் சரி ஒரு கொள்கையால் அடையாளப்படுத்தப்படு கின்ற ஒரே சமூகம் முஸ்லிம்கள்தான்.

இந்த நாட்டில் சிங்கள சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் பௌத்தர்கள் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இனத்தால் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.  தமிழ் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியிலும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொழியால் அடையாளப்படுத்தப்படுகி றார்கள். முஸ்லிம்களாகிய நாம் பிரதேசத்தால், மொழியால் அல்லது இனத்தால் அடையாளப்படுத்தப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்ற பெயரால்தான் நாம் அனைவரும் அடையாளப்படுத்தப்படுகிறோம்.

இன்று எமது தனித்துவத்தைப் பாது காப்பது நாம் ஏற்றிருக்கின்ற இந்தக் கொள் கையே இனமல்ல மொழி அல்ல பிரதேசம் அல்ல. இந்த அடைமொழியை எடுத்துவிட்டால் இந்நாட்டில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இருக்காது. முஸ்லிம் என்ற இந்த அடையாளமும் அடைமொழியும்தான் எமது அறிமுகமும் நாம் எதிர்கொள்கின்ற எல்லா வகையான சவால்களுக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கிறது. இன்று முஸ்லிம் ஊடகவிய லாளர்களாக இருக்கட்டும் முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கட்டும், முஸ்லிம் புத்திஜீவியாக இருக்கட்டும் இவர்கள் அனைவரும் ஒரு கொள்கையால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஊடகத்துறைக்கு என்ன நடந்திருக்கிறது? ஊடகத்துறை ஒரு சாபக் கேடாக மாறியிருக்கிறது. மனித சமுதாயத்தை வளப்படுத்த வேண்டிய ஊடகத்துறை, மனித விழுமியங்களை வளப்படுத்த வேண்டிய ஊடகத்துறை இன்று எவ்வளவு தூரம் மனித, சமுதாய சீரழிவுகளுக்கு, ஒழுக்கம் சீர்கெடு வதற்கு, அநாச்சாரம் பரவுவதற்கு காரணமாக மாறியிருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் விளங்க வேண்டியதில்லை.

இன்றைய ஊடகங்களில் சமூக சார்பெண்ணங்கள் மிகைத்திருப்பதைப் பார்க்கிறரோம். விடயங்கள் மிகைப்படுத்தி சொல்லப்படு கின்றன. சிலவேளை அவை குறைமதிப்பு செய்யப்படுகின்ற நிலைமையைப் பார்க்கிரோம். முழு ஊடகத்திலும் மேற்குலகின் ஆதிக்கம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக யூத ஆதிக்கம் ஊடகத் துறையில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது. அத்துடன் ஊடகம் என்பது மதசார்பற்ற ஒன்றாக மாறி, மேற்கத்தேய மயப்படுத்தப்பட்ட, சடவாத மயப்படுத்தப்பட்ட, சமய சார்பற்ற போக்கைக் கொண்டதாக இன்று மாறியி ருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையை நாம் பார்க்கிறறோம்.

ஊடகங்களிலே மதத்துக்கு சில பக்கங்களை ஒதுக்குகிறார்கள். ஒழுக்கங் கெட்ட விடயங்களுக்கும் சில பக்கங்களை ஒதுக்கிறார்கள். மார்க்கமும் மதமும் பண்பாடும் சுருங்கியிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான நிலையை நாம் பார்க்கிறறோம். முஸ்லிம் ஊடகவியலாளர்களாகிய எமக்கு முன்னா  இருக்கின்ற மிகப் பெரிய சவால் இது. மனித விழுமியங்களை (Human Values), மீடியாக்களுக்குரிய தர்மங்களை (Media Ethics) நெறிமுறைகளை, விதிமுறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பது எப்படி? இது விடயத்தில் எமக்கு ஒரு பொறுப்பு இருக்கி றது. ஒரு கொள்கைவழிச் சமூகம் என்ற வகையில் ஒரு கொள்கைக்காக குரல் எழுப்பக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

மீடியா என்பது உண்மை, நம்பகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டி ருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது பேச்சு, எமது எழுத்து, எமது கருத்து உண்மைக்குப் புறம்பானதாக, சத்தியத்துக் குப் புறம்பானதாக இருக்கக் கூடாது. பொதுவாக உலகில் கடைபிடிக்க வேண் டிய விதிகள் இருக்கின்றன. அவற்றை எழுதப்படாத (Unwritten) விதிகள் என்று சொல்லலாம்.  எமது இலக்குகள் புனிதமா னவை எமது இலக்குகளை அடையக் கூடிய வழியும் கண்டிப்பாக தூய்மையாக இருக்க வேண்டும்.

எமது இலக்குகள் புனிதமானவை இலட்சியங்கள் புனிதமானவை. அவற்றை அடையும் வழிமுறைகள் அனைத்தும் தூய்மையாக, புனிதமாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கின்ற ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் நாங்கள்.


“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சி, பயந்து கொள்ளுங்கள். உண்மை பேசுபவர்களோடு இருங்கள்.” (அல்குர்ஆன்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு வினவப்பட்டது: “ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது இருக்கலாம். ஒரு முஃமின் உலோபியாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது உலோபியாகவும் இருப்பான். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா என்று கேட்கப்பட்டபோது ஒரு முஃமின் ஒருபோதும் பொய் சொல்பவனாக இருக்கவே மாட்டான். என நபியவர்கள் சொன்னார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: “ஒரு முஃமினிடத்தில் எல்லா கெட்ட பண்புகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பொய் அவனை அணுகவே மாட்டாது.”

இந்த அடிப்படையை நாம் உறுதியாகக் கடைபிடிக்க முடியும் என்றிருந்தால், முஸ்லிம் மீடியா போரத்தின் 15வது வருடாந்தப் பொதுக்கூட்டத்திலே அப்படியொரு தீர்மானத்தை, ஒரு சத்தியப் பிரமாணத்தை (பைஅத்) எடுக்க முடியுமென்றிருந்தால், எங்களது எழுத்தில், பேச்சில், அறிக்கையிடலில் மற்றும் எந்த சந்தர்ப்பத்திலும் உண்மைக்கு மாற்றமாக நடந்து கொள்ள மாட்டோம். நூறு வீதம் உண்மையைக் கடைபிடிப்போம். அது எமக்கு சார்பாக இருந்தாலும் சரி, அது எமக்கு எதிராக இருந்தாலும் சரி. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியுமாக இருந்தால் இது முஸ்லிம் மீடியா போரமாக தொடர்ந்தும் இருப்பதற்குரிய தகுதியைப் பெறும். இவ் அமைப்பு நிலைத்திருப்பதை அது நியாயப்படுத்துவதாக அமையும் என  நான் கருதுகிறேன்.

எமது எழுத்தும் பேச்சும் எப்போதும் (Objective) ஆக அமைய வேண்டும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் எந்த நிலையிலும் எமது ஊடக வாழ்க்கையில் வெளிப்படக் கூடாது. சுயம் எந்த நிலையிலும் குறுக்கிடக் கூடாது. சமுக சார்பெண்ணங்களுக்கும் பக்கச்சார்பான கருத்துக்களுக்கும் நாம் இடமளிக்கக் கூடாது. இலங்கை போன்ற பல்லினங்கள் வாழ்கின்ற நாட்டிலே, இயல்பாகவே இனவாதம் தலைதூக்கும் வாய்ப்புள்ளது. அந்த இனவாத அறியாமைக்கு (ஜாஹிலிய்யத்) நாம் உட்படலாம். ஆனால், எந்தளவு தூரம் நாம் இந்த இனவாதப் போக்கிலிருந்து விடுபடுகின்றறோமோ அந்தளவு தூரம் நாம் மார்க்கத்தின் கொள்கைவாதிகள் என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்.

“ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பானது அவர்கள் மீது நீங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது நீங்கள் நீதியாக நடந்து கொள்ளுங்கள் அதுவே தக்வாவுக்கு மிகவும் நெருக்கமான நிலையாகும்”  என்று அல்குர்ஆன் சொல்வதை நாங்கள் பார்க்கிறோம்.
எங்களது அறிக்கையிடல்  (Reporting)  மிகத் தூய்மையாக, நடுநிலையாக, உண்மையை அடிப்படையாக் கொண்டதாக அமைய வேண்டும். அதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது. அதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு இஸ்லாமிய பண்பாடு. இவற்றைப் பேணுகின்ற ஒருவர்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படலாம்.

எமது எழுத்திலும் பேச்சிலும் பண்பாடுகள் வெளிப்பட வேண்டும் மனிதர்களின் சுய கௌரவம் பேணப்படல் வேண்டும். ஒருவருடைய மானத்தில் கைவைப்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மிகப் பயங்கரமான குற்றமாகும். ஏசுவது, திட்டுவது, தூற்றுவது, இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது, அவமானப்படுத்துவது, அவதூறுகளைச் சொல்வது, உளவு பார்த்துத் திரிவது... இவையெல்லாம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பயங்கரமான குற்றங்களாக நோக்கப்படுகின்றன. ஸூரதுல் ஹுஜுராத்தைப் படிக்கின்ற ஒருவர் இந்த அடிப்படையான பண்புகளைப் புரிந்து கொள்ளலாம்.

மட்டுமன்றி, வார்த்தைகளில் நாகரிகம் பேணப்படல் வேண்டும். ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் குறித்த செய்தியை அறிக்கையிடும்போது விரசமான வார்த்தைகளை முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக வகைகூறுதல், பொறுப்புணர்வு (Accountability, Responsibility)  என்ற அமானிதம் பேணப்படுகின்றபோது எல்லா விடயங்களும் சீராகிவிடும்.

இவ் விடயங்கள் பேணப்பட்டதாக எங்களது ஊடகப் பணி அமைகின்றபோது, நிச்சயமாக எமது இந்தப் பணி தொழிலாக அன்றி, புனிதப் பணியாக (Noble Vision) இஸ்லாமிய நோக்கிலே வணக்கமாக (இபாதத்) மாறிவிடுகிறது. ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் இந்தப் பண்புகளைப் பெற்றிருக்கின்றபோது உலகமே அவரை அரவணைக்கும் அவரை மதிக்கும். அவரை ஒருபோதும் இனவாதியாகப் பார்க்காது. அவரை மனிதாபிமானமுள்ள உயர்ந்த மனிதராகப் பார்க்கும்.
இந்தப் பண்பாடுகள் விடயத்தில் மீக்கரிசனை செலுத்த வேண்டிய ஒரு காலத்தில் நாம் இருக்கிறறோம்.

மீடியா போரம் அண்மையில் சந்தித்த இடையூறுகள் கூட இத்தகைய இஸ்லாமிய அடிப்படைகள் பேணப்படாத காரணத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
இஸ்லாம் சொல்கின்ற உயர்ந்த பண்பாடுகள் எமக்கு மத்தியில் பேணப்பட வேண்டும். நாம் இந்த நாட்டினதும் உலகத்தினதும் பேசுபொருளாக மாற வேண்டும். முஸ்லிம்களின் பண்பாட்டைப் பாருங்கள்.  முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒழுக்கங்களைப் பாருங்கள். அவர்களுடைய எழுத்து, அவர்களுடைய பேச்சு, அவர்களுடைய குணவொழுக்கங்களைப் பாருங்கள் என்று புகழ்ந்து பேசப்படும் அளவுக்கு முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்.

இப்படி ஒவ்வொரு துறையிலிருப்பவர்களும் இந்த மார்க்கத்துக்கு, குர்ஆனுக்கு, நபியவர்களின் வாழ்க்கைக்கு சொல்லால் மட்டுமல்ல செயலாலும் சான்று பகர வேண்டியவர்களாக மாற வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு இருக்கிறது. அங்குதான் ‘முஸ்லிம் அரசியல்’  ‘முஸ்லிம் ஊடகம்’ ‘முஸ்லிம் தொழில்சார் நிபுணர்’ என்ற அடைமொழியோடு நாங்கள் அடையாளம் காணப்படுவது பொருத்தமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.

ஏனெனில், நாங்கள் ஒரு கொள்கைவழிச் சமூகம் எமது கொள்கையின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் அமைத்துக் கொள்கின்றபோது அல்லாஹ்வின் அருளினால் இந்த தீனுக்கு சான்று பகர்பவர்களாக நாம் மாற முடியும்.

எல்லோருமாக இணைந்து இந்தப் பணியைச் செய்ய அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!


நன்றி: எங்கள் தேசம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.