Breaking News
recent

2030ல் தமிழக முஸ்லிம்கள்… CMN


உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய நிகழ்வுகளுக்கேற்ப இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பலவிதமான குளறுபடிகள் இருந்தாலும், நாட்டில் தொழில் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் பலதுறைகளிலும் பெருகி வருகின்றன என்பது உண்மை.
பெருகி வரும் தொழில், வணிக வாய்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய பொருளாதார நிலை, வரலாற்றில் அவர்களின் வியாபார வடிவங்கள், இனி உலகளாவிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆழமாக, நுணுக்கமாக வரலாற்றின் அடிப்படையில் அலச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இது நமது எதிர்கால தலைமுறையின் வாழ்வை வளப்படுத்திட உதவி செய்யும்.
அதே போல மற்றொரு வலிமையான மூலாதாரத் துறையான கல்வித்துறையை ஆளுமை செய்திடும் திறன் பெற்ற கல்வியாளர்களாக நமது பெண்களை உருவாக்கிட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
இன்று நம் நாட்டின் கல்வித்துறை உலகளாவிய அளவில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிகப்படியான அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கால்பதித்து வருகின்றன.
இந்தச் சூழலில் நமது பெண் சமூகத்தை கல்வித்துறையில் கோலோச்சும் அளவிற்கு கைதேர்ந்த கல்வியாளர்களாக மாற்ற வேண்டும். ஆரம்பப் பள்ளி முதல் உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரை கல்வியாளர்களாவும் கல்வி நிறுவனங்களை வழி நடத்தக்கூடியவர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும். நமது பெண்களை அவ்வகையில் உருவாக்குவது குறித்து விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். இந்த இதழில் ஆண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான விவரங்களை வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அலசுவோம்!
தொழில்துறை :
உலகில் ஏற்படும் எந்த முன்னேற்றத்திலும் முஸ்லிம் சமுதாயம் ஒருநாளும் பின்தங்கிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் வலியுறுத்தும் தலையாய கருத்து இதனடிப்படையில் உலக மாற்றங்களை உள்வாங்கி எல்லா துறைகளிலும் மிகைத்து நிற்கும் வண்ணம் துறை வாரியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவு ஜீவிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.
வரலாற்றில் முஸ்லிம்களின் வணிகம்
தமிழக முஸ்லிம்கள் பலரின் குடும்பப் பெயர்களையும் பட்டப் பெயர்களையும் வைத்தே வரலாற்றில் அவர்களது குடும்பம் எந்த தொழிலைச் சார்ந்து இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நில உடமை விவசாயிகளாகவும் ஒருசிலர் நெசவு சார்ந்த உற்பத்தி மற்றும் தொழிலாளர்களாகவும் இன்னும் சிலர் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் விற்பனை மற்றும் போக்குவரத்து (ஜிக்ஷீணீஸீsஜீஷீக்ஷீt) தொழில் செய்பவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
இதில் மிகப் பெரும்பான்மையாக தமிழக கடலோரம் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் சர்வதேச தொழில் செய்பவர்களாக வாழ்ந்துள்ளனர்.
நாட்டின் உட்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்து உலகின் பல பகுதிகளுக்கும் பாய்மரப் படகுகள் மூலம் பரம்பரை பரம்பரையாக ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர். இவை அல்லாமல் விவசாயம், தோல் பதனிடும் தொழில் என்று உழைத்து உண்ணும் உன்னதமான சமூகமாக வரலாறு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.
பழவேற்காடு, மைலாப்பூர், புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார், காரைக்கால், நாகை, அதிராம் பட்டிணம், மல்லிப் பட்டிணம், தொண்டி, வேதாளை, கீழக்கரை, உத்திர கோச மங்கை, பெரியபட்டிணம், காயல்பட்டிணம், குளச்சல், இவை அனைத்தும் சிறிய, பெரிய துறைமுகங்களாக உலகின் பல மார்க்கத்திற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகப் பட்டிணங்களாக உலகின் பலநாட்டு வணிகர்களும் வந்துபோகும் சர்வதேச நகரங்களாகவும் இருந்துள்ளன.
உலகைச் சுற்றிய கடற்பயணி இப்னு பதூதா அவர்கள் இதுகுறித்து தனது பயணக் குறிப்பில் விவரித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகள் முழுவதிற்கும் தங்களது வணிகப் படகுகளை அனுப்பும் சர்வதேச வணிகர்களாக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது. அதனால்தான் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் கடலோரப் பகுதிகளிலேயே வாழ்ந்துள்ளனர். மீதமுள்ள மக்கள் கடலோரப் பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்புவதற்கு தமிழகத்தின் உட்புறத்தில் வாழ்ந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய ஐரோப்பியர்களால்தான் முஸ்லிம்களின் கடல் வாணிபம் சிதைவுற்றது. ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சியை வீழ்த்திய இரத்தக் கையோடு இந்தியாவை நோக்கி வெறிபிடித்து வந்த போர்ச்சுகீசியர்களின் அட்டூழியமும் அவர்களுக்குப் பின்னால் வந்த டச்சு, பிரான்சு மற்றும் பிரிட்டிஷாரின் வஞ்சம் நிறைந்த வக்கிர புத்தியும் சேர்ந்து முஸ்லிம்களின் வணிகத்தைப் பாழாக்கி வாழ்வதாரங்களைப் படுகுழியில் தள்ளியது.
சிலுவை யுத்தக்காரர்களின் வாரிசுகளான இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை அழிப்பதையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். இன்றுவரை அது தொடர்கிறது என்பதே அதற்கு சான்று.
இந்த வரலாற்றுப் பின்னணியை தமிழக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட  இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுக்கும் தமிழக கடலோரப் பட்டிணங்களுக்கும் இடையே செழித்து வளர்ந்திருந்த தொழில், வியாபார, கலாச்சார, திருமண உறவுகளினால் மேம்பட்டிருந்த தமிழக முஸ்லிம்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் 19 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த இந்த  ஐரோப்பிய படுபாவிகள் அழித்து நாசம் செய்தனர்.
இந்த நயவஞ்சக நாசகார கூட்டத்தின் சதித் திட்டங்களில் சிக்கி முஸ்லிம்களின் வியாபாரங்கள் நசிந்து போயின. இதனால் வணிகத்தை இழந்து பொருளாதாரத்தை இழந்து நின்ற முஸ்லிம் சமுதாயம் வேறுவழியின்றி 1900க்குப் பிறகு தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் கூலி வேலை செய்திடவும் அயல் நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடினர்.
1950க்குப் பிறகு அரபு மண்ணில் பீறிட்டுக் கிளம்பிய எண்ணெய் செல்வமும் அதனால் உருவான வேலை வாய்ப்புகளும் தமிழக முஸ்லிம்களை “வா, வா” என்று அழைத்தது.
1965லிருந்து அரபு நாடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் அடிமைகளாக ஓடத் துவங்கிய ஓட்டம் தற்போது உச்சநிலையை அடைந்து, வேறு வழியே கிடையாது, அரபு நாடுகள் சென்றால் தான் வாழ்வு என்ற சிந்தனையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயம்.
19 ஆம் நூற்றாண்டு வரை வரலாறு முழுவதும் வணிகர்களாக வாழ்வாங்கு வாழ்ந்தனர். அந்த வணிகத்தில் நேர்மையும் நீதியும் செலுத்தினர். இதனால் அவரவர் திறனுக்கேற்ப இறைவனுடைய அருளால் பலர் தொழில் அதிபர்களாக, மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறினர். மார்க்கப் பிடிப்பும் ஈகை குணமும் அவர்களை வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக மாற்றியது. மார்க்கத்திற்காக, மக்களுக்காக, அறப்பணிகள் தடையின்றி தொடர்ந்திட அள்ளி அள்ளிக் கொடுத்தனர். பரம்பரை சொத்துக்களை எல்லாம் வஃக்பு செய்து இறைவனின் அருளைப் பெற்றனர்.
வணிகர்கள் என்ற அடையாளம் மாறி மாத ஊதியத்திற்கு அரபு நாடுகளுக்குச் செல்லத் துவங்கியவுடன் வருமானம் சுருங்கியது. இப்போது அடிப்படைத் தேவைக்கே அதிக நேரம் உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. இந்த மாத ஊதிய மனப்பான்மை முஸ்லிம்களின் வருமானத்தையும் ஈகை குணத்தையும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விட்டது.
இன்றைக்கு இந்தியாவில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில சமுதாயத்தினரிடம் காணப்படும் செல்வச் செழிப்பு வியாபாரத்தை விட்டு மாத ஊதியத்திற்கு மாறிய முஸ்லிம்களிடம் இல்லை.
இதனால் சமுதாயத்தில் தடையின்றி நடைபெற வேண்டிய சமூக நலப் பணிகள், வழிபாட்டுத் தளங்களின் விரிவாக்கங்கள் மற்றும் கல்விப் பணிகள் அனைத்தும் தேக்க நிலையிலேயே உள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தொலைநோக்கு செயல் திட்டத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமுதாயத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தொழில், வணிக ரீதியாக நாம் இழந்த இடத்தை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டும். நாம் நமது பாரம்பரியமான பொருளீட்டும் வழிமுறையை எந்தக் காரணத்திற்காகவும் விடக் கூடாது. மாத ஊதியத்திற்கு வேலைசெய்வது நமது பாரம்பரியத்தில் நடைபெறாத ஒன்று. நமக்கு உகந்த பாதையும் அல்ல. இதில் மாற்றம் ஏற்படுவதற்கு மீண்டும் தொழில் துறையை கைப்பற்றுவதற்கு அடிப்படையாக முதலில் நமது குழந்தைகளின் உயர்கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உயர்கல்வியில் மாற்றம் தேவை :
கடந்த 20 ஆண்டுகளாக நமது இளைய தலைமுறையின் உயர்கல்வியில் நமது பாரம்பர்யமான பொருளீட்டும் முறையான தொழில், வியாபாரம் குறித்த படிப்புகளுக்கு முதன்மை தந்து அவற்றில் இன்றைய நவீன வியாபார யுக்திகளை கற்றுத் தேறியவர்களாக உருவாக்காமல் பொறியியல் படித்து விட்டு ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதச் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தொடர்ச்சியாக இன்றும் பாரம்பரியமாக தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் கூட இப்படித் தான் அடிமைகளாக உருவாக்கப்படுகின்றனர். நமது முந்தைய தலைமுறையினர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். ஏராளமான சமூகப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போதைய தலைமுறையினர் அந்த பாரம்பரிய பாதையை விட்டு அகன்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கு பெற்றோரின் அலட்சியமும் நமது பாரம்பரிய வரலாறு குறித்த புரிதல் இன்மையுமே காரணம். தாங்கள் முதலாளிகள் என்ற அந்தஸ்தோடு வீற்றிருப்பது போல தங்களது குழந்தைகளையும் முதலாளிகளாக உருவாக்கிட இன்றைய முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.
சில்லரை வணிகமாக இருந்தாலும் மொத்த வணிகமாக இருந்தாலும் அவைகளை திறனோடு நிர்வகித்து தேர்ச்சி பெறும் ஆற்றல் முஸ்லிம் சமுதாயத்தின் இயல்பிலேயே ஊறிய குணங்கள். நாம் நம்முடைய வேர்களை விட்டு விடக் கூடாது. வியாபாரம் என்பது இறைவனுடைய அருள் நிறைந்த துறை. நேர்மையான வியாபாரம் என்பது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடு. அதில் இறைவன் தன்னுடைய பரக்கத்தை எல்லையின்றி வாரி வழங்குகின்றான்.
இன்று உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. பொருள் வாங்கிப் பொருள் விற்பதற்கான சந்தைக்களம் உலகளவில் பறந்து விரிந்த சந்தைக் களமாக மாறி விட்டது. எந்நாட்டவரும் உலகில் எந்த நாட்டிற்கும் பொருட்களை விற்கலாம் வாங்கலாம் தடையேதும் கிடையாது. அரசின் சட்ட திட்டங்களும் துறைசார்ந்த வழிகாட்டும் நெறிமுறைகளும் சர்வதேச வர்த்தகம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உதவிகளையும் செய்து வருகின்றன.
வியாபாரத்தில் முஸ்லிம்களின் இன்றைய நிலை :
இன்றைய முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டுள்ள தொழில்களான மளிகை, ஜவுளி, ரெடிமேட், தோல், ஃபேன்ஸி ஸ்டோர், காலனி கடைகள் போன்ற சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை நிதிப் பற்றாக்குறைதான். இதனால் சரக்கு கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் இலாபம் குறைவதோடு பலவிதமான சங்கடங்களும் ஏற்படுகிறன்றன. ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாத நிலை உருவாகிறது. இந்த முதலீடு பற்றாக்குறை நெருக்கடியால் பெட்டிக்கடை மனப்பான்மை நம் மனதில் குத்தகை எடுத்து குடியிருக்கிறது.
வியாபாரத்தில் நிதிப் பற்றாக்குறையைப் போக்க வேறு வழியில்லாமல் சிலர் வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். வங்கிகளில் தங்களது பரம்பரை வீடு, சொத்துக்கள், நகைகள் முதலானவற்றை அடகு வைத்துவிட்டு தற்காலிக கடன் என்ற ளிஞி வாங்குகின்றனர்.
ஒரு வளரும் அல்லது வளர்ந்த தொழிலை அழிப்பதற்கு வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. வங்கிகளில் (வட்டிக் கடைகளில்) OD வாங்கினாலே போதும். வெகு விரைவில் தொழில் அழிந்துவிடும். ளிஞி என்ற தற்காலிக கடனுக்கு 18 விழுக்காடு வட்டி போட்டு தீட்டுகின்றனர். இரவு பகல் பாராமல் இரத்தம் சிந்தி உழைத்து உண்டாக்கிய இலாபம் எல்லாவற்றையும் வங்கிகள் வாயில் போட்டுக் கொண்டால் தொழில் எப்படி செழிக்கும்? வங்கியில் ஓ.டி. வாங்கிய பிறகு அதை அடைத்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வட்டி புழக்கத்தில் உள்ள இடத்தில் வறுமையும், வெறுமையும் நிறைந்திருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை நினைவு கூற வேண்டும்.
இதற்கு இஸ்லாமிய அடிப்படையில் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
வரலாற்றில் ஐரோப்பியர்களிடம் முஸ்லிம்களின் வியாபார யுக்திகள் தோற்றுப் போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிபம் தொடர்பாக அவர்களின் வழிமுறைகள் மற்றும் அன்றைய முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருந்தது என்றால் ஒருவரிடம் 1 இலட்ச ரூபாய் முதலீடு இருந்தது என்றால் அந்த 1 இலட்ச ரூபாயை வைத்து வியாபாரம் செய்து சம்பாதித்து வந்தார். தன்னிடம் உள்ள முதலீடு, தான் செய்யும் வியாபாரம், அதன்மூலம் பெறுகின்ற இலாபம் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த குறுகிய சுயநல மனநிலைதான் பெருவாரியான முஸ்லிம் வணிகர்களிடம் இருந்தது. வியாபார ரீதியான வாய்ப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே இல்லாமல் போனது. (இன்றும் இதுதான் மிகப்பெரிய குறையாக உள்ளது).
அந்த நேரத்தில் வந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களின் இந்த குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் வியாபார முறைகளையும் ஒற்றுமை இல்லாத் தன்மையையும் பார்த்துவிட்டு குறிப்பாக பிரிட்டிஷார் லண்டனில் வைத்து ஒரு மிகப்பெரிய முதலீட்டு வணிக நிறுவனத்தை உருவாக்கினர். அதுதான் ணிகிஷிஜி மிழிஞிமிகி சிளிவிறிகிழிசீ உலகின் முதல் கார்ப்பரேட் நிறுவனம்.
சிறுமுதலீட்டாளர்கள் ஒன்று கூடி சிறிய சிறிய தொகைகளை ஒரே தொகையாக மாற்றி பெரும் தொகையுடன் கூடிய முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினர். அந்த பெரும் தொகையை இந்தியாவிற்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு யாரெல்லாம் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கினார்களோ அவர்களிடம் அந்த பெரும் தொகையை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்தனர். இதனால் முஸ்லிம்களுக்கு சரக்கு கிடைக்காமல் போய்விட்டது. பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான பணத்திற்கு முன்னால் முஸ்லிம்களின் தனிநபர் சிறிய தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகிப் போனது.
அந்த நேரத்தில் கூட பிரிட்டிஷாரைப் போல தாங்களும் ஒத்த கருத்துடைய வணிகர்கள் ஒன்று கூடி தனித்தனி முதலீடுகளை ஒரே முதலீடாக மாற்றி பெரிய அளவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாறி வருகின்ற வணிகமுறைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வரவில்லை. உலக வியாபார முறைகளின் மாற்றம் குறித்து விளங்கிக் கொள்ளாத தமிழக, இலங்கை முஸ்லிம்கள் குறுகிய காலத்திலேயே வியாபாரம் செய்வதற்கு சரக்கு கிடைக்காமல் சிக்கிக் கொண்டனர்.
17 ஆம் நூற்றாண்டில் EAST INDIA COMPANY இன் உருவாக்கத்தில் துவங்கிய கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இன்று உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.
இன்றைய முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அதிகப்படியான நிதியைத் திரட்ட வேண்டும். தற்போதுள்ள வியாபார நிறுவனங்களில் நிதிப் பற்றாக்குறையைக் களைய வேண்டும் என்றால் வட்டிக் கடைகளான வங்கிகளை நாடுவதை நிறுத்தி விட்டு கூட்டு முதலீடு என்கிற இஸ்லாம் வலியுறுத்தும் ஹலாலான வழிமுறைக்கு மாற வேண்டும்.
ஒரே அளவுள்ள ஓராயிரம் முதலீடுகளை ஒருங்கிணைத்து தொழில் தொடங்க வேண்டும். அதாவது இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் போல உருவாக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குகள் விற்பதிலும் வங்கிகளிடம் கடன் பெற்றும் முதலீடுகளை திரட்டுகின்றன. இதற்காக இந்திய அரசின் கார்ப்பரேட் சட்டமும் கம்பெனி சட்டமும் அவர்களை நெறிப்படுத்துகிறது. இதில் பல மறைமுகமான திட்டங்கள் உள்ளன. முஸ்லிம்கள் இதே வழிமுறையை கையாளுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. பிறகு என்ன செய்வது?
வர்த்தகக் கூட்டமைப்பு :
இன்றைய உலகிலும் இனிவரும் காலத்திலும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டு முதலீடு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தால் தான் முடியும். அடிப்படையில் தனித்தனி சிறுமுதலீடு என்ற மனப்பான்மையை விட்டு முஸ்லிம் சமூகம் வெளியே வரவேண்டும். சேர்ந்து முதலீடு செய்வது சேர்ந்து சம்பாதிப்பது இலாபத்தையும் நஷ்டத்தையும் சேர்ந்து பகிர்ந்து கொள்வது என்ற கொள்கை தான் இனி வெற்றி பெறும்.
இதற்கு மாநில அளவில் ஒரு தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனம் CHAMBER OF COMMERCE உண்டாக்கப்பட வேண்டும். அந்நிறுவனத்தின் மூலம் திறனான வல்லுனர்களை பணியமர்த்தி தொழில் மற்றும் முதலீட்டிற்கு வாய்ப்புள்ள துறைகள் எதுவென்று ஆராய வேண்டும். முதலீடு செய்வதற்கான திட்ட அறிக்கை, முதலீட்டாளர்கள், வரி விதிப்புகள், சந்தை வாய்ப்புகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு இந்த கூட்டமைப்பு நிறுவனம் வழிகாட்ட வேண்டும்.
மேலும் அப்படிப்பட்ட நிறுவனம் செயல்படுவதற்கு ISLAMIC COMPANY LAW இஸ்லாமிய நிறுவனச் சட்டம் குறித்து தெளிவுடைய அறிஞர்களின் வழிகாட்டுதல் தேவை.
சமுதாயப் பற்றுடைய பெரும் செல்வந்தர்கள் இப்படிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கிட முன்வந்தால் மாநில அளவில் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது! இல்லையென்றால் ஒவ்வொரு பகுதிகளிலும் கூட இந்த தொழில் கூட்டமைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தை உருவாக்கலாம்.
வாய்ப்புகளைக் கண்டறிதல்:
தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனுதினமும் உலக வர்த்தகம், அதன் போக்கு, இந்திய வர்த்தக வளர்ச்சி, விவசாயம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி, பிற நாடுகளின் தேவைகள், அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், பட்ஜெட் விவரங்கள், வரி விதிப்புகள் போன்ற அனைத்தையும் அங்குலம் அங்குலமாக கண்காணிக்க வேண்டும்.
அடுத்த 20 ஆண்டுகளில் வியாபார ரீதியாக வாய்ப்புகள் எந்தெந்த துறைகளில் பெருக உள்ளதோ அவற்றில் நாமும் பங்கு பெறுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அத்திட்டத்தில் முதன்மையானது அந்த துறைகளில் அறிவும் நுணுக்கமும் பெறுவதற்கான உயர்கல்வியை நமது குழந்தைகளுக்கு தொடர்ந்து புகட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இடைவெளி இல்லாத, தொடர்ச்சியாக நுண்ணறிவு பெற்ற வல்லுனர்களை, துறை வாரியாக ஒவ்வொரு காலத்திற்கும் உருவாக்கிடும் கல்வி அமைப்பு எந்தச் சமூகத்திடமோ நாட்டிடமோ இருக்கிறதோ அந்தச் சமூகமும் நாடும் உலகிற்கு வழிகாட்டிடும் முதன்மை இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளிடம் உள்ளது போன்ற அறிவு ஜீவிகள் பட்டாளம் துறை வாரியாக தொய்வில்லாமல் நமது தமிழக முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
இதில் தொய்வு ஏற்பட்டால், அலட்சியம் காட்டினால் உலக முன்னேற்றத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிப் போய்விடுவோம். இன்று அதுதான் நடந்துள்ளது. இனி அவ்வாறு நடைபெறுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட வேண்டிய சமூக மாற்றத்திற்கான “செயல்திட்டம்” தான் இந்தக்  குறுந்தொடர் கட்டுரை. இதில் சென்ற இதழில் தொழில் துறையை நமது பாரம்பரியத்திற்கேற்ப மீட்டெப்பதற்கான வழிமுறை குறித்து “ஆண்களுக்கு – தொழில்துறை” என்ற தலைப்பில் விரிவாக வரலாற்றுப் பின்புலத்தோடு பார்த்தோம். அடுத்ததாக “கல்வித்துறை – பெண்களுக்கு” என்ற இலக்கை நிர்ணயித்து நாம் பயணிக்க வேண்டிய கட்டாயம் குறித்துப் பார்ப்போம்.
நமது பெண் சமுதாயத்தை இந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் ஆண் சமுதாயத்திற்கு, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு இருக்கிறது.
மனித இனத்தைப் படைத்த இறைவன் ஆண்/பெண் இருபாலரையும் சமநீதியுடன் சரிசமமாகத் தான் படைத்துள்ளான். ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்திப் படைப்பவன் அல்ல இறைவன். “அல்லாஹ் நீதி செலுத்துபவன்” என்பதை அல்குர் ஆனில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறான். ஆனால் இந்த பூமியில் மனித இனம் படைக்கப்பட்டதற்கான காரணங்களில் ஆண் / பெண் இருபாலருக்கும் வேறுபட்ட செயல்திட்டங்களை நிறைவேற்றச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். முதலில் ஆணைப் படைத்து பிறகு ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து இந்த இருவருக்குமான செயல்திட்டத்தைக் கொடுத்து அந்தச் செயல் திட்டத்திற்கு ஏற்ப அவர்களின் உடற் கூறுகளையும் உள்ளங்களையும் படைத்துள்ளான்.
இருபாலருக்குமான செயல்திட்டங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றாக  இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு காலத்திற்கும் வேறுவேறு வடிவங்களாக இருந்து வருகிறது. அறிவும் தொழில் நுட்பமும் மிகைத்திருக்கும் இன்றைய காலத்தில் பெண்களின் உடற்கூறு தன்மைக்கு ஏற்ப அறிவுத் துறையான கல்வித் துறையில் அல்லாஹ்வுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது.
எந்த ஒரு சமுதாயத்தில் பெண்கள் அறிவும் பண்பாடும் நிறைந்தவர்களாக விளங்குகிறார்களோ அந்தச் சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது உறுதி. காரணம் எல்லா தன்மைகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெண்களிடமே இடம் பெற்றுள்ளது. அதனால் தான் மனித குலத்தைப் படைத்த இறைவன் பெண் இனத்தை “விளை நிலங்கள்” என்று அழகாகக் குறிப்பிடுகின்றான்.
ஆண் பெறுகின்ற கல்வி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த தன்மைகளுக்கு பல்கிப் பெருக்குகின்ற ஆற்றல் கிடையாது. அது அவனோடு மட்டுமே நிறுத்தப்படுகிறது. ஆனால் பெண் பெறுகின்ற கல்வியின் மூலம் எல்லாவிதமான கலாச்சாரத் தன்மைகளையும் பலவாறாகப் பெருக்குகின்ற ஆற்றலை இறைவன் பெண்களுக்கு வழங்கி இருக்கின்றான்.
குழந்தைகளிடம் தகப்பனுடைய சிந்தனையின் தாக்கத்தைக் காட்டிலும் தாயுடைய சிந்தனையின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு சாட்சி. ஆக ஒரு சமூகத்தைச் சிறந்த சமூகமாகக் கட்டி எழுப்புகின்ற ஆற்றல் அனைத்தும் பெண்களிடமே இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் பொருத்தப்பட்டுள்ள பெண் சமுதாயத்தை அல்லாஹ்வும் அவனது து£தர் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த இஸ்லாமிய வழிமுறையில் இன்றைய நவீன காலத்திற்கேற்ப வளர்த்தெடுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி வளர்த்தெடுப்பதற்கும் அனைத்து விதமான மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது கல்வி தான். அந்தக் கல்வித் துறையைத் தங்களுக்கான வாழ்வியல் துறையாகத் தேர்வு செய்யும் ஆர்வத்தை வளருகின்ற போதே பெண் குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும். இன்று தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்விமுறை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து பாதை மாறிச் செல்லும் மக்களை உருவாக்கும் கல்வியாகவும் கல்வி முறையாகவும் இருக்கிறது.
இதனால் அதனைக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டுப் பாதை மாறிச் செல்கின்றனர். மனிதன் இந்த பூமியில் படைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தைக் கூட விளங்காமல் வளர்க்கப்படுகின்றனர்.
முஸ்லிம்களை இஸ்லாத்தில் பிடிப்புள்ள மக்களாக மாற்ற வேண்டும். அதற்கு முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முழுவதும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்.
12 ஆம் வகுப்பு முடிக்கும் போதே ஆண் பெண் இருபாலரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும்  இஸ்லாமியப் பண்பாடுகளையும் பேணுபவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இன்னும் 20 ஆண்டுகளில் இப்படி கல்வி பயிலும் நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதற்கு இஸ்லாத்தை விளங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியைகள் தேவை. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி ஸ்கூல் மற்றும் இருபாலருக்கும் தனித்தனியே ஆன உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் தேவை.
இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்று படித்து வரும் பெண்களை கல்வியாளர்களாக உயர்கல்வியில் ஆசிரியைப் பணியை இலக்காக வைத்து உருவாக்கினால் தான் சாத்தியமாகும். ஆண்கள் தொழில் துறையில் ஈட்டுகின்ற பொருளாதாரமும் அவரது மனைவி, மகள், மருமகள் ஆகியோரின் கல்விப் பணியும் ஒரு சேர கூடினால் முஸ்லிம் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
மனமாற்றம் தேவை :
மேலும் இதற்கெல்லாம் அடிப்படையாக இன்றைய ஆண்களிடம் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் தன்மையுடையது என்பதை நாம் அறிந்துள்ளோம். ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தார் போல இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வியல் வழிமுறைகள் மூலம் பொருத்த வேண்டிய பொறுப்பை முஸ்லிம்களிடம் இறைவன் அமானிதமாகக் கொடுத்துள்ளான்.
விஞ்ஞானமும் நவீன தொழில் நுட்பமும் மிகைத்து நிற்கும் இன்றைய உலகில், அறிவால் உலகை வெல்லும் வாய்ப்புகள் நிறைந்த இன்றைய உலகில் முஸ்லிம் சமுதாயத்தின் ஆணும் பெண்ணும் அந்த அறிவாற்றலில் மிகைத்தவர்களாக – அதையே எதிர்கால தலைமுறைக்கு போதித்து உருவாக்குபவர்களாக – அதன் மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகின் தலைசிறந்த மார்க்கமாக, சமூகமாக நிலை நிறுத்துபவர்களாக தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பவியலிலும் மாற்றம் தேவை :
பெண்களின் வாழ்வாதாரம், உரிமைகள் தொடர்பாக இஸ்லாம் காட்டாத கட்டுப்பாடுகள், இல்லாத சமூக வாழ்க்கை முறை, குடும்பவியல் பழக்க வழக்கங்கள் பல தலைமுறைகளாக அறியாமையின் காரணமாக முஸ்லிம்களிடம் குத்தகை எடுத்துக் குடி கொண்டிருந்தது. அதனாலேயே இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பன போன்ற குற்றச் சாட்டுகள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது ஈட்டிகளாய் குத்துகின்றன.
முஸ்லிம்களின் அறியாமை மற்றும் மார்க்கத்தை விளங்காத நடவடிக்கைகளால் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தற்போது முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது குறிப்பாக பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் கூட ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே ஆனந்தம் அடைந்த ஆண்கள் மற்றும் அவர்களின் இன்றைய வாரிசுகள் இன்றும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை. இஸ்லாத்தின் சட்ட திட்டங்களையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) வழிகாட்டு தலையும் பெண்களின் உரிமைகள் என்று வருகிற போது மட்டும் வசதியாக ஒதுக்கி வைக்கின்றனர்.
தனது மனைவி படித்தவள். அவளுக்கு சுயஅறிவு, சுயசிந்தனை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஒருசில ஆண்களுக்குத் தான் இருக்கிறது. ஒருசில கருத்துக்கள் சொன்னால் அல்லது கணவனின் தவறுகளை சுட்டிக் காட்டினால் “இவள் படித்த திமிரில் பேசுகிறாள்” என்ற வார்த்தை தான் கணவனிடமிருந்து வருகிறது. ஆணுக்கு பெண் அடிமை என்கிற சிந்தனை பிற மதக்கோட்பாட்டுச் சிந்தனையாகும். அது இஸ்லாமிய சிந்தனை அல்ல. ஆனால் முஸ்லிம்களிடம் குடி கொண்டுள்ளது. கல்வியும் அறிவும் உலகை ஆளும் துறைகளாக மாறியுள்ள இன்றைய நிலைக்கு தகுந்தாற் போல ஆண் இனமும் தங்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கான இஸ்லாமியப் பொறுப்புகளை உணர வேண்டும்.
அதேபோல இஸ்லாம் இல்லாத இன்றைய வறண்டு போன கல்விமுறை பெண்களையும் தங்களுக்கான எல்லை எது என்று தெரியாமல் ஆக்கியுள்ளது. ஆண் செய்கின்ற எதுவும் பெண்ணுக்கும் பொருந்தும் என்ற இயற்கைக்கு ஒவ்வாத இஸ்லாம் காட்டாத எண்ணம் ஏற்பட்டு வருகிறது.
பெண்கள் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்களை  பெண்கள் முழுமையாக தெரிந்து கொள்கின்ற போது தான், அவற்றைப் பின்பற்றுகின்ற போதுதான் முரண்பாடுகளும் எல்லை மீறல்களும் நடைபெறாமல் பாதுகாக்க இயலும். குடும்ப வாழ்வும் வெற்றி பெறும்.
இன்றைய பி.ஏ. அல்லது பி.ஈ. பட்டதாரிப் பெண்ணிடம் தனக்கான கணவர் தன்னை விட கூடுதலாகப் படித்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை பெருகி இருக்கிறது. டாக்டருக்குப் படித்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற மனநிலையில் மாப்பிள்ளை தேடும் படலம் நடக்கிறது.
இது இன்றைய நவீன பெண்ணடிமைத் தனம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இன்றைய கல்வி முறையின் மிக மோசமான விளைவுகள் தான் இவை. ஒரு மார்க்கம் படித்த பெண் ஆலிமா தனக்கான கணவனை தேடும்போது அவன் முதலில் ஆண் மகனாக, நல்லவனாக, வணக்க வழிபாடுகள் செய்பவனாக, உழைப்பவனாக, கல்வி அறிவு பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறாள்.
வெறுமனே பட்டங்கள் பெறுவதால் மட்டும் வாழ்வில் உண்மையான விழுமங்கள் விளங்கி விடும் என்பதும் அர்த்தமல்ல. இஸ்லாமிய அடிப்படையில் சீர்து£க்கிப் பார்த்து அவற்றின் குறைகளை இன்றைய எதார்த்த வாழ்வின் இந்தத் தடைகளைக் களைந்து இனி எதிர்காலத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வண்ணம் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையை முழுமையாக ஆளுமை செய்திட தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று படித்துக் கொண்டிருக்கும் பெண்களை உயர்கல்வியில் கம்ப்யூட்டர் படிப்பைத் தவிர்த்துவிட்டு வேறு எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதை ஆய்வு நிலை வரை றிலீபீ படிக்க வைக்க வேண்டும். கூடவே இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்து சட்டதிட்டங்களையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை.
இஸ்லாம் இல்லாத பெண்ணால் வாழ்விலும் கல்வியிலும் வெற்றி பெறவே இயலாது. அத்தகைய பெண்களால் இம்மையிலும் சரி மறுமையிலும் சரி வெற்றி பெறவே இயலாது. உயர்கல்வியில் இஸ்லாமியப் படிப்புகளை தேர்வு செய்தால் அது  இன்னும் நமது இலக்கை வேகமாக அடைய பேருதவி புரியும்.
கல்வியாளர்களாக உருவாக வேண்டும் என்ற வேட்கையோடு ஆசிரியர் பணியை தேர்வு செய்யும் பெண்களையும் பள்ளிக் கூடங்களை உருவாக்கி அவற்றை நிர்வாகம் செய்திடும் துறையை நோக்கி முன்னேறும் பெண்களையும் கண்டறிந்து  சமுதாயத்தில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான பள்ளிகளைத் துவங்கிட முன்வர வேண்டும்.
அதற்கு அந்தப் பெண்களுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். பெண் வீட்டிற்
குள்ளே பூட்டப்பட வேண்டியவள் என்றசிந்தனை சிறிது இருந்தாலும் அது சமுதாய முன்னேற்றதிற்கு தடையாகவே அமையும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.