Breaking News
recent

பெருநாள் சுற்றுலா: அதிரை டூ கோடியக்கரை!

நேற்று(07/11/2011) பிற்பகல் அதிரையிலிருந்து கோடியக்கரைக்கு ’திடீர்’ சுற்றுலா சென்றோம். இந்த கோடியக்கரை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி.இங்குள்ள சதுப்புநிலக் காடுகள்,வேதாரண்யம் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன,கிழக்கு தக்காணத்தின் உலர்பசுமை காடுகளில் எஞ்சியிருப்பதாகும். கோடிக்கரை சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக கொண்டுள்ளது.


ஜூன் 13, 1967ஆம் ஆண்டு 24.17 சதுர கிமீ பரப்பில்  கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் (நமதூர் அருகில்)  உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது. இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன.


இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.செங்கால் நாரை, கூழைகிடா, சிறவி, உள்ளான், கடல் ஆலா உள்ளிட்ட 40 வகையான பறவைகள் வந்து மரங்களில் கூடுகட்டி உள்ளன. ரஷ்யாவிலிருந்து கண்ணாடி மூக்கு உள்ளான் பறவை 9 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து வந்துள்ளது.


கோடியக்கரையில் பறவைகள் வந்து தங்கிச் செல்வதற்கான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. அவை உண்பதற்கான சிறு மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாலும், கடல்நீருடன் நன்னீர் கலக்கும் முகத்துவாரங்கள் அதிகம் உள்ளதாலும் பறவைகள் இங்கு அதிகம் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன.


அக்டோபர் முதல் மார்ச் வரையும் டிசம்பர், ஜனவரி இங்கு சீசன் காலமாகும். இந்த காலத்தில் லட்சக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து நாடு திரும்பும்.


தற்போது, தொடர்ந்து பெய்த்துவரும் கனமழையால் ஏரிகளில் தண்ணீர் அதிகம் இருப்பதால் பறவைகள் அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்ற போதும் முழு ஏமாற்றம் இல்லை.பறவைகளையும் மான்களையும் சுட்டுவந்தோம் (புகைப்படங்களாக மட்டும்).
1000 ஆண்டுகளுக்குப் பழமையான சோழர் காலத்து கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.2004ஆம் ஆண்டு சுனாமியின்போது சிதைந்தது.



நமதூரிலிருந்து காரில் ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம். வன விலங்குகள் சரணாலயத்தின் உள்ளே மாலை 5மணிவரைதான் இருக்க முடியும்.இந்த இடத்தை சுற்றிபார்க்க குறைந்தது 4மணி நேரம் தேவை.வன விலங்கு சரணாலயத்தை பார்பதற்கு முன்னதாகவே பறவைகள் சரணாலயத்தை பார்த்துவிடவேண்டும்.
பறவைகள் சரணாலயம்,வன விலங்குகள் சரணாலயம்,கடல் இவை மூன்றும் ஒன்றிணைந்ததாக உள்ளது.புகைப்பட கருவிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.உணவு கடைகள் எதுவும் இல்லை.உணவுகளை கொண்டு செல்வது நல்லது. அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ற இடங்கள் நிறைய உள்ளன.பைக்கில் செல்வதை முற்றிலுமாக தவிற்கவும்.கார்,வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வது நல்லது.





























கட்டுரை.படங்கள்: 
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.