Breaking News
recent

வேங்கையே வெளியே வா! ஆளூர் ஷாநவாஸ்

[சமநிலைச் சமுதாயம் மே-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]


மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவமான மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம் தொகுதியில், 34 வயது இளைஞரான எம்.தமீமுன் அன்சாரி வேட்பாளராகக் களத்தில் நின்றிருக்கிறார்.அறிவுக் கூர்மையும், அரசியல் நேர்மையும் உடைய ஒரு இளைஞரை தம் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க தொண்டர்களுக்கு நமது மனம் நிறைந்த பாராட்டுகள்; நண்பர் அன்சாரிக்கு இதயப்பூர்வ வாழ்த்துகள்.

அன்சாரியை வேட்பாளராக அறிவித்த த.மு.மு.க தலைவர்களைப் பாராட்டாமல், அதன் தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடையாக இருக்கிறது, அன்சாரி வேட்பாளராக்கப்பட்ட விதமும், த.மு.மு.க தலைவர்களின் இறுகிய மனமும்.

த.மு.மு.க, திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, பின்னர் அதிமுக கூட்டணிக்கு வந்த போதும் சரி, தமுமுகவின் சார்பில் கூட்டணித் தலைமையைச் சந்திக்கச் செல்லும் குழுவில் அன்சாரிக்கு ஏனோ இடமளிக்கப்படவில்லை. தமுமுகவின் அரசியல் பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போதும் அதன் முக்கியப் பொறுப்பில் அன்சாரி அமர்த்தப்படவில்லை. ம.ம.க தொடங்கப் பட்டபோது தமுமுகவின் மாநிலச் செயலாளராக இருந்தார் அன்சாரி. அவரை, ம.ம.க வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

ம.ம.க வுக்கு திமுக கூட்டணியில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்தால், ஒன்றில் அன்சாரி வேட்பாளராக்கப் படுவார் என்று அடுத்த எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், கூட்டணியில் ம.ம.க வுக்கு தொகுதிகளும் கிடைக்கவில்லை; கிடைத்தாலும் அன்சாரிக்கு வாய்ப்பளிக்க தமுமுக தலைமைக்கு அப்போது விருப்பமில்லை. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நான்கு தொகுதிகளில் ம.ம.க தனித்துப் போட்டியிட்ட போதும் அன்சாரி வேட்பாளராக்கப் படவில்லை.

த.மு.மு.க வின் தொடக்க காலம் முதல் தீவிர களப்பணியாற்றி, படிப்படியாக வளர்ந்து, தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்ற ஒருவரை; பேச்சாற்றலும், எழுத்துத் திறனும், இலக்கிய வளமும் கொண்ட ஓர் இளைஞரை அடையாளப்படுத்துவதை கவனமாகத் தவிர்த்துவிட்டு, தமுமுக தலைமையின் ஏவல்களாகவும், கூவல்களாகவும் இருப்பவர்களை முன்னிலைப் படுத்தி வந்ததை தமுமுக தொண்டர்கள் எவரும் ரசிக்கவில்லை. 'முன்னொரு காலத்தில் ஆளுமைகளின் களமாக இருந்த தமுமுக, காலப்போக்கில் அடிமைகளின் கழகமாக மாறிக் கொண்டிருக்கிறதே' என்று அதன் தொண்டர்களிடையே எழுந்த ஆதங்கத்திற்கும் அளவில்லை.

அன்சாரியை ஏன் இப்படி புறந்தள்ள வேண்டும் என்கிற ரீதியில் கேள்விகளும் கலகக் குரல்களும் இயக்கத்திற்குள்ளே வலுவாகக் கிளம்பியதன் விளைவாக, வேறு வழியே இல்லாமல் ம.ம.க வின் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார், அன்சாரி. அப்போது கூட அவருக்கு துணை பொறுப்புதான் வழங்கப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்நிலையில் தான், 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அன்சாரி நிறுத்தப்பட்டார். 'இதற்கு மேலும் அன்சாரியைப் புறந்தள்ளினால், நிச்சயமாக இயக்கத்திற்குள் வேறுமாதிரியான அதிர்வுகள் ஏற்பட்டுவிடும்' என்கிற கூட்டல் கழித்தல் கணக்குகளின் வெளிப்பாடாகவே இப்போது அவருக்கு 'சீட்' வழங்கப் பட்டுள்ளது. எப்படியோ அன்சாரி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். தமுமுகவின் தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அன்சாரிக்கு 'புதிய வெளிச்சம்' கிடைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் 'தேர்தல் முடிவுகளுக்கு அப்பால் நின்று' அன்சாரிக்கு சில விசயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், த.மு.மு.க.வின் மீதான சமுதாயத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.

பிஜேயின் கொடும் பிடியிலிருந்து த.மு.மு.க வை மீட்கப் போராடிய ஆரம்பகால தொண்டர்களில் ஒருவன் என்ற உரிமையோடும், மார்க்க-மஸாயில் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காத அரசியல் பேரியக்கமாக தமுமுக வடிவம் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்போடும், களமாடிய எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து முதலில் தொடங்குகிறேன்.'பிஜே பேசுகிற தவ்ஹீத் கொள்கை, தமுமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது' என்கிற காரணத்தைச் சொல்லி அவரை வெளியேற்றிய அதே வேகத்தில், தவ்ஹீத் கொள்கையை பேசுகிற 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' எனும் கள்ளக் குழந்தையை தமுமுக பெற்றெடுத்ததும், அந்தக் குழந்தையின் செயல்பாடுகளுக்கு தமுமுக அலுவலகத்திலேயே களம் அமைத்துக் கொடுத்ததும்தான் தமுமுகவின் சறுக்கலுக்கு முழுமுதற் காரணம்.

பிஜே வெளியேறி விட்டாலும், தமுமுகவிலிருந்து 'பிஜேயிசம்' வெளியேறவில்லை என்ற சிந்தனை சமுதாய மக்களிடம் ஏற்படுவதற்கும், நிர்வாக ரீதியாகத்தான் பிஜேயிடமிருந்து தமுமுக பிரிந்திருக்கிறதே தவிர, கொள்கையளவில் தமுமுக தலைவர்களும் 'வஹாபிகளே' என்ற எண்ணம் முஸ்லிம் மஹல்லா ஜமாத்தார் மத்தியில் நிலைபெறுவதற்கும் தமுமுகவே வழியமைத்து விட்டது.

பிஜேயிடமிருந்து கொள்கை ரீதியாக முரண்படாமல், நிர்வாக ரீதியாக முரண்பட்டு தனி அமைப்பு நடத்துகின்ற; அதுவும் பிஜேயின் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்'தைப் போலவே தமது அமைப்புக்கும் 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத்' என்று பெயர் சூட்டியிருக்கின்ற எஸ்.எம்.பாக்கர் உடனான தமுமுகவின் வெளிப்படையான உறவு, முஸ்லிம் ஜமாத்துகளிடமிருந்து தமுமுக அந்நியப்படுவதற்கு இன்னொரு காரணமாக இருக்கின்றது. இந்தத் தேர்தலில் கூட வெகுஜன சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் அமைப்புகள் எதுவும் தமுமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை என்பதும், அதே சமயம் பாக்கரின் தவ்ஹீத் ஜமாஅத் தமுமுகவுக்கு ஆதரவளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

பிஜேயின் தவ்ஹீத் ஜமாஅத்தை முழு மூச்சாக எதிர்க்கும் தமுமுக மீது, திருவிடைச்சேரி நிகழ்வுக்குப் பிறகும் கூட ஏன் சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் பார்வை திரும்பவில்லை என்பது தீவிர ஆய்வுக்குரியது. பிஜேயை எதிர்க்கிறார்கள் என்பதற்காக பாக்கரையோ, தமுமுகவையோ ஏற்றுக்கொள்ள முஸ்லிம் ஜமாஅத்துகள் தயாரில்லை என்பதும், 'இவர்களெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்' என்ற எண்ணமே ஜமாஅத்துகள் மத்தியில் நிலவுகிறது என்பதும் எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

முஸ்லிம் முஹல்லாக்களையும், ஜமாஅத்துகளையும் வென்றெடுக்காமல், முஸ்லிம் அரசியலை வென்றெடுக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் கூட, தமுமுக இதுவரை ஜமாஅத்துகளுடனான உரையாடலைத் தொடங்கவில்லை. தன் மீது விழுந்திருக்கும் வஹாபியிசப் போர்வையைக் கிழித்தெறியவோ, குறைந்தபட்சம் அந்தப் படுதாவை விலக்கவோ கூட தமுமுக முயற்சிக்கவில்லை.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜமாஅத்துகளை சந்தித்து ஆதரவு கேட்ட தமுமுகவினர், அதன்பிறகு 2011 சட்டமன்ற தேர்தல் நேரத்தில்தான் மீண்டும் வந்து கதவைத் தட்டுகின்றனர். இடைப்பட்ட இந்த இரண்டாண்டு காலத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத்துகளைச் சந்திக்கவோ, முத்தவல்லிகள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளவோ, ஒவ்வொரு ஊரிலும் உள்ள மஹல்லாக்களில் நிரம்பி வாழும் வெகுஜன முஸ்லிம்களின் பேராதரவும் நன்மதிப்பும் பெற்று, அங்கெல்லாம் தமது கட்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.இத்தகைய நிலையில், தற்போது தமுமுகவில் அன்சாரிக்கு கிடைத்திருக்கும் புதிய வெளிச்சம் நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது. ஏனெனில், அன்சாரி வஹாபியிசக் கொள்கையில் ஆர்வம் இல்லாதவர். மார்க்க ரீதியாக எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், முஸ்லிம் அரசியலை வென்றெடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர். ஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத்தையும், ஜமாஅத்துகளைக் கூறுபோடாமல் முஸ்லிம் அரசியலை முன்னெடுத்த போராளித் தலைவர் பழனி பாபாவையும் ஆழமாக உள்வாங்கியவர். அப்படிப்பட்டவர் தமுமுகவை மாற்றியமைக்கவும், அனைத்துத் தரப்பு முஸ்லிம்களின் பேராதரவை வென்றெடுக்கவும் களம் அமைக்க வேண்டும்.

தமுமுகவின் சேவைகளாலும், சமுதாயப் பணிகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள் கூட அந்த இயக்கத்தை கண்டு எரிச்சல் அடைவதற்கு மிக முக்கிய காரணம், தமுமுக தலைவர்களின் 'பில்டப் பாலிடிக்ஸ்' ஆகும். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவதிலும், சிறிய வரவேற்பைக் கூட பெரிய அளவில் வியந்து பேசுவதிலும், நாங்கள் தான் பெரிய இயக்கம் என தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், பொய்யான தகவல்களைப் பரப்பி தொண்டர்களை உசுப்பேற்றுவதிலும், கொஞ்சம் அதிகமாகக் கூட்டம் கூடிவிட்டால் இறுமாப்பு அடைவதிலும் தமுமுக தலைவர்களுக்கு ஈடு இணையே இல்லை என்று சமுதாயம் முகம் சுழிக்கிறது. தமுமுக தலைமையின் இத்தகைய தவறான அணுகுமுறையால்தான் அந்த இயக்கம் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியாமல் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.

தமுமுகவால் ஒரு திடலில் ஒரு லட்சம் மக்களை கூட்டிவிட முடியும்; ஆனால், ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளை வென்றெடுக்க முடியாது. மக்களைக் கூட்டுவது என்பது எழுச்சி; வாக்குகளை வென்றெடுப்பதுதான் வளர்ச்சி. ஆக தமுமுக இப்போது எழுச்சி பெற்றுக்கிறதே தவிர, வளர்ச்சியடையவில்லை. எழுச்சி வேறு, வளர்ச்சி வேறு என்ற அடிப்படையை தமுமுகவினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எழுச்சியையெல்லாம் வளர்ச்சி என்று கருதி 'பெரும் பேச்சு' பேசியதால்தான் தமுமுக தலைவர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. எனவே, அன்சாரியைப் போன்ற இளைய தலைவர்கள் இவ்விசயத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

தமது வலிமைக்கேற்றவாறு கருத்துக்களை வெளிப்படுத்தவும், தம்மைப் பற்றிய 'அதீத' மதிப்பீடுகளை குறைத்துக் கொள்ளவும், உள்ளதை உள்ளபடிச் சொல்லி தொண்டர்களைப் பக்குவப்படுத்தவும், வெற்றிகள் வரும்போது பணிவைக் கடைபிடிக்கவும், தோல்விகளைச் சந்திக்கும் போது மனவலிமை பெறவும் தமுமுகவினர் பழகிக் கொள்ள வேண்டும்.

தமுமுக தலைவர்களின் மீதான சமூக ஆர்வலர்களின் மிக முக்கியமான விமர்சனம், 'அவர்கள் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்பதுதான். தமுமுக தலைவர்கள் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது, அவற்றிலுள்ள குறைகளைச் சுட்டிக் காட்டவும், தீர்வுகளைச் சொல்லி தட்டிக் கொடுக்கவும், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது சரியான திசையில் அடையாளம் காட்டவும் ஒரு பலம் பொருந்திய சிந்தனையாளர் பின்புலம் [Intellectual Team] தமுமுகவுக்கு இல்லை. அப்படியொரு பின்புலத்தை தமுமுக தலைவர்கள் விரும்பவுமில்லை. வெளியேயிருந்து விமர்சனங்களை முன்வைப்பவர்களையும், தமுமுகவினர் விட்டு வைப்பதுமில்லை.

தமுமுக தலைவர்களின் தவறான முடிவுகளை, யாராவது விமர்சித்து விட்டால் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, மூஞ்சியில் பாய்ந்து பிராண்டுவது, குறுந்தகவல் மூலம் விமர்சகர்களைப் பற்றி அவதூறு பரப்புவது, எடிட்டோரியல் ரூமில் ஒன்று கூடி விமர்சகர்களை கழுவிக் குடிப்பது என தமுமுகவினரின் அணுகுமுறை தாறுமாறாக வடிவமெடுக்கும்.

இத்தகைய இறுகிய மனநிலையிலிருந்து தமுமுக தலைமை விடுபட வேண்டும். தமக்கு சாதகமாக கருத்துச் சொல்பவர்கள்; எப்போதும் சுற்றியிருந்து ஜால்ரா அடிப்பவர்கள்; முகஸ்துதி பாடுபவர்களை மட்டுமே அருகில் வைத்துக் கொள்ளாமல், யார் ஆரோக்கியமாக விமர்சிக்கிறார்களோ; யார் யார் கருத்து முரண்படுகிறார்களோ அவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும் ஜனநாயகத் தன்மைக்கு தமுமுக தலைமை வரவேண்டும். எது அவதூறு, எது விமர்சனம் என்பதைப் பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை தமுமுக தலைமை பெற வேண்டும்.

ஓர் இயக்கத்தையோ, கட்சியையோ மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மிக முக்கியமான கருவியாக இன்று ஊடகம் திகழ்கிறது. அத்தகைய ஊடகத் துரையில் தமுமுகவின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரைமணி நேர நிகழ்ச்சி வழங்கும் தமுமுக, அந்த நிகழ்ச்சியில் அரசியல் விழிப்புணர்வு கருத்துகளை வழங்காமல், மார்க்க விசயங்களைப் பரப்புவதற்கே முன்னுரிமை தருகின்றது. ஓர் அரசியல் கட்சிக்கு எதற்கு மார்க்கப் பிரச்சார வேலை என்று முஸ்லிம்கள் யாராவது கேள்வி கேட்டால், அவர்களை இஸ்லாத்தை விட்டே இவர்கள் நீக்கிவிடுவார்கள்.

மார்க்கப் பிரச்சாரம் செய்வதற்கென்றே தமிழகத்தில் ஏராளமான அமைப்புகள் இருக்கின்றபோது, அரசியல் கடமையாற்ற வேண்டிய தமுமுகவும் அதில் நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி.

தமுமுகவின் ஊடகப் பிரிவுக்கு பிஜேயின் பட்டறையில் வார்க்கப்பட்ட ஒரு வஹாபியிச மவ்லவியே தலைமை தாங்குகிறார். அவர் இதழியல் கற்றவருமில்லை; காட்சி ஊடகத்தைப் பற்றிய தெளிவான புரிதல் உடையவருமில்லை. அவரது பொறுப்பின் கீழ் இயங்கும் ஊடகப் பிரிவு எப்படி இருக்கும்? இங்குள்ள மார்க்க அறிஞர்கள் போதாதென்று இலங்கையிலுள்ள 'ஸலபி' முல்லாக்களை இறக்குமதி செய்து புரட்சி செய்ததுதான் தமுமுகவின் ஒரே ஊடக சாதனை.

இந்த அவல நிலையை மாற்றுவதற்கு அன்சாரி முயற்சி செய்ய வேண்டும். மாணவப் பருவத்திலிருந்தே சிறந்த ஊடகவியலாளராக அறியப்பட்ட அவர், தமுமுகவின் ஊடகப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பை இனியாவது ஏற்க வேண்டும். அதை முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பும் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஓர் அரசியல் கட்சிக்கு ஊடகம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கலை வடிவமும் முக்கியம். ஆனால், அந்த முக்கியத்துவம் உணராத இயக்கமாக தமுமுக உள்ளது. தமிழகத்திலேயே தமக்கென ஒரு கலைக்குழு இல்லாத ஒரே அரசியல் கட்சி தமுமுகவின் 'மனிதநேய மக்கள் கட்சி' மட்டும் தான். இஸ்லாம் தடுக்காததை எல்லாம் பிஜேயின் வழியில் நின்று இவர்களாகவே தடுத்துக் கொண்டு, 'அது கூடாது; இது கூடாது' என்று சகட்டு மேனிக்கு பத்வாக்களைக் கொடுத்து, ஒரு வட்டத்துக்குள்ளேயே தங்களை சுருக்கிக் கொள்கின்றனர். கலை இலக்கிய வடிவங்களைப் பற்றிய அறிதலோ, அதன் அவசியத்தைப் பற்றிய புரிதலோ இன்றி, தேர்தல் களத்திற்குச் சென்று திணறுகின்றனர்.

எளிய மக்களுக்கு அரிய கருத்துக்களை எளிதில் சொல்ல வேண்டுமெனில் அது கலைகளின் மூலமே சாத்தியம். ஒரு கலைஞனால் மிக எளிதாக மக்களை வென்றெடுத்து விட முடியும். இடதுசாரி இயக்கங்களின் கலைக்குழுக்கள் அந்தக் கட்சிகளின் வளர்ச்சியில் அளப்பெரும் பங்களிப்பு செலுத்தி வருவதை ஆய்வு செய்தால், அதன் முக்கியத்துவம் விளங்கும். எனவே, அன்சாரியைப் போன்ற கலை இலக்கிய ஆர்வலர்கள் தமுமுகவில் கலைக்குழுக்களை உருவாக்குவதற்கு முயல வேண்டும்.

இன்றைய தமிழக அரசியல், சில முகங்களை மைய்யப்படுத்தியே சுழல்கிறது. கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், விஜயகாந்த், ராமதாஸ் என முக்கியத் தலைவர்களின் புகைப் படத்தை எடுத்துக் கொண்டு ஒரு கிராமத்துச் சிறுவனிடம் காட்டினால் கூட அவன் இன்னார்தான் என்று 'சட்டெனச்' சொல்லி விடுவான்.அந்த அளவுக்கு அந்தத் தலைவர்கள் மக்களிடம் சென்றடைந்திருக்கிறார்கள்.

ஆனால், தமுமுக தலைவர்களைக் காட்டினால் சிறுவர்களுக்கு அல்ல; தமிழகத்துப் பெரியவர்களுக்கே யாரென்று தெரியாது. தமுமுக தலைவர்கள் மக்களிடம் சென்றடைவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் முஸ்லிம்களிடமாவது முழு அளவில் சென்றடைந்திருக்கிறார்களா என்றால், கேள்விக் குறியே அதற்கு விடையாகக் கிடைக்கும்.

தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு, தலைவர் இல்லை; பொதுச் செயலாளர்தான் இருக்கிறார். மமக பொதுச் செயலாளரான அப்துல் சமதுவை எத்தனை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்? அப்துல் சமது என்றால், இன்றைக்கும் கூட 12 ஆண்டுகளுக்கு முன் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் 'சிராஜுல் மில்லத்'அப்துல் சமது தானே சமுதாயத்தின் நினைவுக்கு வருகிறார். இந்த நிலை ஏன் மமகவுக்கு வந்தது என்பதை தமுமுகவினர் ஆய்வு செய்ய வேண்டும்.

பிளக்ஸ் பேனரில் படம் போடக் கூடாது; பத்திரிக்கையில் போட்டோ போடக் கூடாது; போஸ்டரில் முகம் வரக் கூடாது என்றெல்லாம் என்றைக்கோ பிஜே வகுத்து வைத்துச் சென்ற உளுத்துப்போன மூடக் கட்டுப்பாடுகளைத் தமுமுக தலைவர்கள் பிசகின்றி பின்பற்றியதன் விளைவே, மக்கள் மத்தியில் அவர்கள் அறிமுகமாகாமல் போனதற்கு மிகமுக்கிய காரணமாகும். இத்தனை கட்டுப்பாடுகளையும் வகுத்து வைத்து விட்டுப் போன பிஜே மட்டும் தினமும் டிவியில் தோன்றி மக்கள் மத்தியில் 'போஸ்' கொடுத்து வருகிறார் என்பது தனிக் கதை. ஆகவே, அத்தகைய கட்டுப்பாடுகளை உடைத்து, எளிய உத்திகளின் மூலம் மக்களைச் சென்றடைய தமுமுக தலைவர்கள் வழிதேடிக் கொள்ள வேண்டும்.

மமக தொடங்கப்பட்ட உடனேயே சறுக்கி விழுந்ததற்கு அன்சாரியைப் போன்ற ஒரு சிலரின் ஆக்ரோசமான பேச்சுகளே மிகமுக்கிய காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. தொண்டர்களைத் தற்காலிக மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கும், அவர்களின் கைத்தட்டுகளைப் பெறுவதற்கும் வரைமுறை இல்லாமலும் முன்னெச்சரிக்கை இன்றியும் பேசுவதால் அது அரசியல் களத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமுமுகவினர் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள்.

குறிப்பாக, அன்சாரியைப் போன்றவர்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தமுமுகவில் மக்களை ஈர்க்கும் படியான வசீகரமான பேச்சாளர்கள் யாரும் இல்லை. இருக்கிற ஒரு சிலரும் பேசத் தெரியாமல், பேசி வினைகளை வளர்த்தால் அது இயக்கத்திற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே, பேச்சில் நிதானத்தையும், நளினத்தையும், அறிவு நுட்பத்தையும் கடைபிடிக்க தமுமுகவினர் பழகிக்கொள்ள வேண்டும்.

தமிழருவி மணியன், பெரியார் தாசன் போன்ற பேச்சுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து பேச்சுப் பயிற்சி முகாம்களை நடத்துவதன் மூலம், தமுமுகவில் வலிமையான பேச்சாளர்களை உருவாக்க முடியும். அத்தகைய முகாம்களை மாவட்டம்தோறும் நடத்துவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.

தமிழக முஸ்லிம் அரசியலின் தோற்றுவாயாக விளங்கும் காயிதே மில்லத்தின் வரலாற்றைக் கற்காமல் தமிழக முஸ்லிம் அரசியலை முன்னெடுக்கவே முடியாது. ஆனால், இன்றைய தமிழக முஸ்லிம் அரசியலில் மாற்றத்தை நிகழ்த்துவதற்கு புறப்பட்டிருப்பதாகச் சொல்லும் தமுமுக தலைவர்களில் பலருக்கும் காயிதே மில்லத்தின் வரலாறே தெரியாது. தலைவர்களுக்கே தெரியாது என்றால்; தொண்டர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். முந்தைய அரசியலை உள்வாங்காதவர்களால் எப்படி இன்றைய அரசியலை முன்னெடுக்க முடியும் என்று கேட்டால் மெளனமே பதிலாகக் கிடைக்கிறது.பெரும்பாலும் தமுமுகவினர் ஆழ்ந்த வாசிப்பு இல்லாதவர்களாகவும், நுனிப்புல் மேய்பவர்களாகவுமே உள்ளனர். காயிதே மில்லத்தின் வரலாறு மட்டுமல்ல; எந்த அரசியல் வரலாறும் தெரியாத தலைமுறைகளாக அவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். எங்கெல்லாம் தமுமுகவுக்கு கிளைகள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் ஒரு நூலகமும், படிப்பகமும் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சி என்றாலே, பச்சைக்கொடி என்பது போல வரையப் பட்டிருந்த சித்திரத்தை மாற்றியமைத்த பெருமை தமுமுகவையே சாரும். அதுபோல முஸ்லிம் கட்சி அலுவலகம் என்றாலே மண்ணடி தான் என்று எழுதப்படாத ஒரு விதி உருவாகியுள்ளது. தயவு செய்து கொஞ்சம் இடத்தை மாத்துங்கள். அண்ணா சாலைக்கோ, ராயப் பேட்டைக்கோ, அல்லது எழும்பூருக்கோ புலம் பெயர்ந்து வர தமுமுகவினர் முயற்சி எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும், பொது மக்களும் எளிதில் வந்து செல்லும் வகையில் அலுவலகம் அமைய வேண்டும். அலுவலகம் நல்ல காற்றோட்டமான சூழலிலும், அலுவலகத்தின் உள்கட்டமைப்பு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது இது அனைத்து மக்களுக்குமான கட்சி என்று அறிவிப்பு செய்தனர். ஆனால் அறிவிப்பு செய்ததோடு சரி. அதை செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் எதையும் தமுமுகவினர் எடுத்ததாகத் தெரியவில்லை. அனைத்து மக்களுக்குமான கட்சியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாகவாவது அடையாளப் படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை.

மமகவின் தலைமை நிர்வாக அமைப்பில் தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர்கூட இல்லை. பிற்படுத்தப் பட்ட சமூகத்தவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் மமகவுக்கு கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றிலாவது ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தமுமுகவை நோக்கித் திரும்பியிருக்கும். 'எத்தனை முஸ்லிம்களை நிறுத்துவார்கள்? என்று விடுதலைச் சிறுத்தைகளைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த தமுமுகவினரால், 'எங்களுக்கு பத்து தொகுதிகள் கிடைத்தால், நாங்கள் இத்தனை தலித்துகளை நிறுத்துவோம்' என்று வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லை.

முஸ்லிம்களிடமும் முழுமையாக கட்சியை கொண்டு செல்லாமல், மற்ற சமூக மக்களையும் வென்றெடுக்காமல், 'இருக்கிற தொண்டர்களை வைத்துக் கொண்டு இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம்' என்ற வகையிலேயே தமுமுக தலைவர்களின் அணுகுமுறை அமைந்துள்ளது. இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாமல், மமகவால் எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

எல்லா கட்சிகளையும் போலவே தமுமுகவிலும் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக தகவல்கள் வருகின்றன. தமுமுக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா தலைமையில் ஓர் அணியும், பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் ஓர் அணியும் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது.
ஹைதர் அலி வக்பு வாரியத் தலைவராக இருந்தபோது, ஒரு அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தோடு, சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் அவர் சுற்றி வந்தது தமுமுகவிலேயே பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரை எப்படியாவது பதவியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதற்காகவே 'உள்குத்து' வேலைகள் தமுமுகவில் நடைபெற்றதாகவும் தகவல்கள் உலவுகின்றன. திமுக கூட்டணியிலிருந்து தமுமுக வெளியேறி, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சரிவைச் சந்தித்த போது, இயக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்காக வருந்தியவர்களை விட, ஹைதர் அலியிடமிருந்து வாரியப் பதவி போனதற்காக மகிழ்ந்தவர்களே தமுமுகவில் அதிகம் என்றும் ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.

அருவருப்பூட்டும் இத்தகைய தகவல்களை பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாத படி தமுமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. அண்மையில் இயக்க நிகழ்ச்சிக்காக கன்னியா குமரி மாவட்டத்திற்கு ஹைதர் அலி சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை வரவேற்கவோ, அவரது பயணத்தில் உடனிருந்து செயலாற்றவோ குமரிமாவட்ட தமுமுக நிர்வாகிகள் எவரும் வரவில்லையாம். மாவட்ட நிர்வாகிகள் அவரைப் புறக்கணித்ததற்கு, 'அவர்கள் ஹைதர் அலியின் எதிர்ப்பு அணியைச் சார்ந்தவர்கள்' என்று காரணம் சொல்லப்படுகிறது.

இயக்கத்தின் வளர்ச்சியை குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய குழு அரசியலை, முளையிலேயே கிள்ளி எறிய தமுமுக தொண்டர்கள் தயாராக வேண்டும். தமுமுகவின் இன்றைய தலைவர்களிடையே நிலவுவதாகச் சொல்லப்படும் 'குழு மோதல்', அடுத்தக்கட்ட தலைவர்களிடமும் வேரூன்றி விடாமல் தடுக்க தமுமுகவினர் முனைப்போடு செயலாற்ற வேண்டும். தொண்டர்களின் உழைப்பாலும், வியர்வையாலும் வளர்ந்த மாபெரும் இயக்கங்களெல்லாம், தலைவர்களிடையே ஏற்பட்ட குழு மோதல்களால் உடைந்து சிதறிய நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய இருக்கின்றன. தமுமுகவும் அந்த வரலாற்றில் இடம் பெற்று விடாமல் இருக்க தமுமுக தொண்டர்கள் விழிப்புடன் இயங்க வேண்டும்.

2009 இல் தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த அரசியல் பணிகள் என்னென்ன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. ம.ம.க ஒரு பொது அரசியல் கட்சியாக மக்களிடம் அடையாளப்பட வேண்டுமெனில், அதற்கென சில வழிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். தமிழகத்தின் தலையாய பிரச்சனையாகிய காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சனைகளில் மமக தனது பங்களிப்பை செலுத்தியிருக்க வேண்டும். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கொண்டு அறிக்கைகள் மூலம் அரசியல் செய்வது போல, ம.ம.க.வும் வட மரைக்காயர் தெருவிலிருந்து கடந்த இரண்டு வருடமாக அறிக்கைகள் மூலமே அரசியல் செய்திருக்கிறது.ம.ம.க தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் வரை அக்கட்சி முன்னெடுத்த ஒரே ஓர் அரசியல் நடவடிக்கை மதுக்கடை மறியலாகும். அதைத் தாண்டி எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும் ம.ம.க தீவிரமாக களமிறங்கியதாகத் தெரியவில்லை. இடையில் அன்சாரி மட்டும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக ஒரு நடை பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

எந்த ஒரு செயலையுமே தொடர்ச்சியாகச் செய்வதன் மூலமே வெகுமக்களின் நன்மதிப்பை பெற முடியும். அதை விடுத்து, திடீரென்று ஒரு பிரச்சனையில் மூக்கை நுழைப்பதும், வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுவதும் அரசியல் பின்னடைவுக்கே வழிவகுக்கும். அது ஈழப் பிரச்சனைக்காக கலைஞர் உண்ணாவிரதம் இருந்த கதைபோல் ஆகிவிடும்.

இன்று, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்த வைகோ, அந்தப் பிரச்சனைகளுக்காக போராடும் குரலாக மக்களிடம் அடையாளப் பட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுவதன் மூலம், அந்த நதியே அழிந்து போகும் அபாயம் இருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டிய தோழர் நல்லகண்ணு, தாமிரபரணி நாயகனாக மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

அதேபோல், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தபடுவதற்கும் கொல்லப்படுவதற்கும் எதிராக தொடர் நடவடிக்கைகளில் இறங்கிய சீமான், மீனவர்களின் காவலனாக காட்சியளிக்கிறார். மதுக்கடைகளுக்கு எதிராக இடையறாது போராடியதன் மூலம், சமூகத் தீமைகளுக்கு எதிரான சிம்ம சொப்பனமாக மருத்துவர் ராமதாஸ் பேசப்படுகிறார். இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் படி ஏதாவது ஓர் அடையாளம் ம.ம.க தலைவர்களுக்கு இருக்கிறதா என்பதை அக்கட்சியினர் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், அத்தகைய அடையாளத்தைப் பெறுவதற்கு தமது தலைவர்களைத் தூண்ட வேண்டும்.

எப்படி முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று குரல் கொடுக்காத தலைவர்களை, முஸ்லிம்கள் நம்புவதில்லையோ; அதைப் போலவே தங்களின் பிரச்சனைகளுக்காக களமிறங்காத தலைவர்களை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்; நெசவாளர்கள் ஏற்க மாட்டார்கள்; தொழிலாளர்கள் நெருங்கி வர மாட்டார்கள்; அடித்தட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். விவசாயிகளையும், நெசவாளர்களையும், தொழிலாளர்களையும், வாழ வழியற்ற அடித்தட்டு மக்களையும் ஈர்க்காமல், மமகவால் எப்படி ஒரு வெற்றிகரமான அரசியலை முன்னெடுக்க முடியும்?

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மமக போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றான ஆம்பூர் தொகுதியில், மமக வலுவாக உள்ள ஒரே ஒரு கிராமம் கூட இல்லையாம். நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் பத்துக்கும் குறைவான இடங்களிலேயே மமகவுக்கென்று கிளை நிர்வாகங்கள் உள்ளனவாம். ஆம்பூரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இன்றைக்கு மமகவின் நிலை இதுதான். அப்படியிருந்தும் ஆம்பூரில் மமக வென்றுவிடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

எல்லா கணிப்புகளிலுமே 'எதிர் வேட்பாளர்களின் பலவீனங்களாலும், கூட்டணியின் பலத்தாலுமே மமக வெற்றி பெறும்' என்று கூறப் படுகிறது. இராமநாதபுரத்திலும் எதிர் வேட்பாளரின் பலவீனத்தால் மமக வெல்லும் எனச் சொல்லப் படுகிறது. இப்படியான வாய்ப்புகள் அரசியலில் எல்லா நேரமும் வாய்க்காது என்பதை மமகவினர் உணர வேண்டும். கூட்டணியைத் துணைக்கு அழைக்கலாமே தவிர, அதை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது. எனவே, அனைத்துக் கிராமங்களிலும் வேர் பரப்பவும், கட்சியின் கிளைகளை விரிக்கவும் ம.ம.க.வினர் உழைக்க வேண்டும்.

ம.ம.க.வில் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் தீவிர செயலாற்றிக் கொண்டிருக்கும் தொண்டர்களின் நிலைமை மிகப் பரிதாபமாகவே உள்ளது. கடும் உழைப்பைக் கொட்டி தம் கட்சியின் வளர்ச்சிக்காக களமாடிக் கொண்டிருக்கும் தொண்டர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கிறது. அன்றாட குடும்பச் செலவுகளுக்குக் கூட வழியற்றவர்களாய் அவர்கள் திண்டாடுகின்றனர். அப்படிப் பட்டவர்களின் உழைப்பை உறுஞ்சும் இயக்கங்களும், கட்சிகளும் அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழியமைத்துத் தருவதில்லை.

தமுமுகவுக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கிளைகள் தோறும் ஆம்புலன்சுகள் இருக்கின்றன. ஆம்புலன்சுகளை வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், கிளைகள் தோறும் ஆம்புலன்சுகளை வாங்க ஆர்வம் காட்டியவர்கள், மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக் கூடம் என்ற அளவில் நிறுவி, குறைந்தபட்சம் அதில் தம் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியிருந்தால், தமுமுகவும், மமகவும் ஒரு முன்மாதிரி இயக்கமாகவும், கட்சியாகவும் பரிணாமம் பெற்றிருக்கும். தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்று அவை மேலும் வளர்ந்திருக்கும். இனிவரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்கள் குறித்தும் தமுமுகவினர் யோசிக்க வேண்டும்.

இன்னும் இதுபோல ஆயிரம் சிந்தனைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அதனை உள்வாங்காத வரை, அது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் முடியும். விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துக்களையும் உள்வாங்கி ஓரளவுக்காவது தமுமுகவில் மாற்றங்களை உருவாக்குவார் என்று நாம் எதிர்பார்க்கிற அன்சாரி, இந்தக் கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளட்டும்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கும், பின்னடைவுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தமுமுக மற்றும் மமகவின் இன்றைய முக்கிய தலைவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு செய்யாத அவர்கள் இப்போதும் கூட பதவி நீட்டிப்புச் செய்து பொறுப்பில் தொடர்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் அடுத்த தலைமுறைக்கு வழிவிடவும், இளைய தலைவர்களுக்கு வழிகாட்டவும் அவர்கள் தயாராக வேண்டும்.

அடுத்தத் தலைமுறையின் அடையாளமாக இருக்கும் அன்சாரி தலைவர் ஆவாரா? அல்லது இப்போதைய தலைவர்களின் துணையாகவே இருப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இது போன்ற கருத்துக்கள் பொது ஊடகங்களில் பரவிய போது, அன்சாரி அவசர அவசரமாக அதை மறுத்து ஓர் அறிக்கை கொடுத்தார்.'நான் தலைவராவதற்கான தகுதியை இன்னும் பெறவில்லை' என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.தலைவருக்கான தகுதியை அவர் பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமுமுக தொண்டர்களே தவிர, அன்சாரி அல்ல. தமுமுகவின் அமைப்புத் தேர்தலில் எப்போதுமே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மாநிலச் செயலாளராக முதலிடம் பிடிக்கும் அன்சாரி, தமது தகுதி குறித்து தயங்க வேண்டியதில்லை.

ஏனெனில், மாநிலச் செயலாளர் தேர்தலில் தோற்றுப் போனவர்கள் கூட இப்போது மமகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள். தொண்டர்களால் தோற்கடிக்கப்பட்ட அவர்களுக்கே தலைமைப் பொறுப்பேற்கும் அளவுக்கு மனத்துணிவு இருக்கும் போது, தொண்டர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற அன்சாரி, எது குறித்தும் கலங்க வேண்டியதில்லை.


2004 இல் பிஜேயிடமிருந்து தமுமுக விடுபடுவதற்கு முன், சமநிலைச் சமுதாயத்தில் வெளியான ஒரு கட்டுரைக்கு 'வேங்கையே வெளியே வா!' என்று தலைப்பிடப் பட்டிருந்தது. இப்போது 'பிஜேயிச'த்திடமிருந்து தமுமுக விடுபடுவதற்கும் அதே வார்த்தைகளால் அழைப்பு விடுக்கிறோம்.
'வேங்கையே வெளியே வா!'

நன்றி:  Aloor Shanavas

Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    சகோ.ஆலூர் சா.நவாஸ் அவர்களின் அருமையான கருத்துக்கள் இது குறித்து
    த.த.மு.க. சிந்திது செயல்படுவது தான் சிறந்தவை அருமை சகோதரர் அவர்களின் கருதை நான் வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. சமுதாயத்திற்காக 20 ஆண்டு காலம் உழைத்த ஒரு இளைஞன்....
    இளமை துடிப்பில் சமுதாய பாசத்தில் முதிர்ச்சி இல்லாமல் செய்த
    செயலுக்காக அந்த சமுதாய அமைப்பினாலேயே அவனது உழைப்பும்
    தியாகமும் அலட்சியப்படுதப்படுவது ஆபத்தானது.

    சமூக அரசியல் தளத்தில் சேவையாற்ற துடிக்கும் இளைஞர்களை
    வராதே என்று துரத்தி அடிக்கும் செயல்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரரின் பல கருத்துக்கள் ஏற்புடையது என்றாலும் த.மு.முக வின் அடிப்படை கொள்கையே தவ்ஹீதுதான் அதை வஹாபிசம் எனவும் அதை உதரி தள்ளினாள்தான் அரசியலில் நிளைக்கமுடியும் என உளறுகிறார்

    பதிலளிநீக்கு
  4. சகோதரர் ஆளூர் ஷநவாஸ் இன்றைக்கும் இஸ்லாத்தை உதறிவிட்டு வெற்று அரசியல் செய்யும் மனநிலையில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை.

    ஒருவேளை இன்னும் அதே கருத்தில் இருப்பாரேயானால், பல விஷயங்களை கற்றுக் கொள்ளச் சொல்லி வகுப்பெடுக்கும் ஷநவாஸ் முதலில் இஸ்லாமிய அரசியலை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து படிக்கட்டும். தூய இஸ்லாத்தை 'பீஜேயிசம்' என விளங்காமல் கொச்சைப்படுத்த வேண்டாம். அதேபோல் பீஜே என்பவரும் தற்போது ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து இஸ்லாத்திலிருந்து வெளியேறிக் கொண்டுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

    என்னுடைய எதிர்கருத்து அவர் கட்டூரையின் மையப்பொருளான தமுமுக, மமக மற்றும் அன்சாரி குறித்தல்ல மாறாக ஷநவாஸ் இஸ்லாமியனாக இருந்து கொண்டே மறுமை பயன்படாத இந்த உலகாதய அரசியலில் சாதிக்க குர்ஆன் ஹதீஸ் எனும் அற்புத வழிகாட்டிகளை புறந்தள்ள வேண்டும் என அவர் புரிந்து கொள்ளாமல் எழுதியிருப்பதையே.

    ஒருவேளை பீஜே என்கிற தனிமனிதரை பிடிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது குராஃபத் கொள்கை தான் அவருக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவோ தவ்ஹீத் எனும் உயரிய கொள்கையை மட்டம் தட்டுவதை ஏற்க இயலாது. ஏனெனனில், தவ்ஹீத் என்பது இயக்கமல்ல இஸ்லாத்தின் உயிர்நாடி கொள்கை என்பதை புரிந்து கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.