Breaking News
recent

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 6

எம்.எஸ். அப்துல் ஹமீது BE 
ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம்.
அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். அவையாவன:
1.       1.  யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை என்ற அடிப்படையில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக தேடுதல்.
2.       2.  யூத ஸியோனிஸவாதிகள் ஃபலஸ்தீன மண்ணில் குடியேற்றங்களை நிறுவ அபரிமிதமான ஆதரவை அளித்தல்.
3.      3.  இராணுவத் தளவாட உற்பத்தியில் இலாப நோக்கு கொண்ட வக்கிரப் பார்வையுடன் காய்களை நகர்த்துதல்.
4.      4.  இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்களின் மடமைத்தனமான நம்பிக்கைகளைக் கடைப்பிடித்தல். அவர்கள் வலதுசாரிகளாக இருப்பார்கள். வன்முறை வெறிபிடித்தவர்களாக இருப்பார்கள்.
நாம் இத்தொடரில் கண்டு வரும் மேற்சொன்ன ஊடகக் கம்பெனிகள் மேலைநாடுகள் அல்லாத உலகுக்கு மழை போல் செய்திகளை அள்ளி அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றன.
மக்களின் மூளைகளைச் சலவை செய்து அமெரிக்க வாழ்க்கைப் பாணிக்கு அவர்களை அடிமைகளாக மாற்றும் விதத்திலேயே அவர்களின் செய்திகள் அமைந்திருக்கும்.
இந்தச் செய்திப் போக்கு என்பது ஒருவழிப் பாதைதான். அதாவது மேற்கிலிருந்து ஏனைய உலகுக்கு. ஏனைய உலகிலிருந்து மேற்குக்கு ஒருபொழுதும் செய்திகள் செல்லாது.
நமக்கு பஞ்சாபில் பட்டினிச் சாவுகள் பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நாம் செய்தித் தாள்களில் மங்கிக்கொண்டு வரும் ஹாலிவுட் நட்சத்திரம் ஒன்றின் 5வதோ, 15வதோ கல்யாணம் பற்றிய செய்தியைப் படித்துக்கொண்டிருப்போம்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி பற்றிய துல்லியமான விவரங்கள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரினா புயல் பற்றி வெள்ளம் போல் செய்திகள் வந்து கொண்டிருக்கும்.
மேலை நாடுகளின் தலைவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். சதா மகிழ்ச்சியுடன் காட்டப்படுவார்கள்.
ஆனால் அமெரிக்கா அல்லாத நாடுகளின் தலைவர்களோ, ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களோ எப்பொழுதும் இடுங்கிய, கடுகடுத்த முகத்துடன், கோபக் கனலுடன் காட்டப்படுவார்கள்.
ஊடகங்களைக் கட்டுப்படுத்த காலனியாதிக்கத்தின்போதுள்ள பழைய நடைமுறைகளையெல்லாம் அமெரிக்கர்கள் அழகாகப் பயன்படுத்துவார்கள்.
அமெரிக்காவால் ஒரு நாடு ஆக்கிரமிக்கப்படுகிறதென்றால் அதனை “அந்த நாடு சுதந்திரம் பெற்று விட்டது” என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிடும்.
ஆக்கிரமிப்பாளர்களைத் தீரத்துடன் எதிர்த்தும் போராடும் போராளிகளை அவர்கள் கொன்றொழித்து விட்டார்கள் என்றால் “பயங்கரவாதத்தின் வேரை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிந்து விட்டோம்” என்று செய்திகள் வரும்.
வியட்நாமிகள், ஆஃப்கன்வாசிகள், ஈராக்கியர்கள், வடகொரியாவினர், தென் அமெரிக்காவைச் சார்ந்தோர் ஆகியோர் எப்பொழுதும் ஐ.நா. சபையையே சுதந்திரத்திற்காகவும், வளத்திற்காகவும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.
ஆனால் அந்த நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆயுதங்களைத் தூக்கினால், அவர்கள் “நமது வாழ்க்கை வழிமுறைகளை வெறுக்கிறார்கள்” என்று அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வரும்.
2001 செப்டம்பர் 11க்குப் பிறகு, அமெரிக்க ஊடகங்களில் முஸ்லிம்களின் பங்கு என்பது “மோசம்” என்ற நிலையிலிருந்து “படுமோசம்” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
இது பழைய காலனியாதிக்க முறைகளையும், ஓரியண்டலிஸக் கொள்கைகளையும் ஒத்த அமெரிக்க நிலைப்பாடு.
கடவுள் அவர்களுக்கு மட்டும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அளித்துள்ளார் என்பது போலத்தான் செய்தி ஊடகங்களில் அவர்களைப் பற்றிய செய்திகளும், படங்களும் இடம் பெறும்.
அமெரிக்காவின் பெரும்பாலான பத்திரிகைகள் முஸ்லிம் பெண்களை அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவே காட்சிப்படுத்தும். அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாகக் காக்கப்படவேண்டும் என்றும், அவர்கள் “நவீன” மயப்படுத்தப்பட வேண்டும் என்றே செய்திகளை வெளியிடும்.
ஈராக்கிய ஆக்கிரமிப்பு அமெரிக்க கிறிஸ்தவப் படைவீரர்களுக்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை கிறிஸ்தவத்தின் பக்கம் மாற்றும் புனிதப் பணியாகவே புகட்டப்பட்டது.
நூல்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டேப்ளாய்ட் பத்திரிகைகள் அனைத்தும் இந்தப் புகட்டலை அழகுறச் செய்தன.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 1

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 2

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 3

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 4

மீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர் 5

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.