எம்.எஸ். அப்துல் ஹமீது BE
மீடியா என்றால் உலகின் அனைத்துத் தரப்புச் செய்திகளும் அங்கே அங்கம் வகிக்க வேண்டும். எல்லோரது செய்திகளும் இடம் பெறவேண்டும். உலகின் நாலாபுறங்களிலிருந்தும் செய்திகள் பரிமாறப்படவேண்டும். அனைத்து மக்களின் கலாச்சாரங்களும் அதில் பிரதிபலிக்கவேண்டும். எல்லா மக்களின் இன்பங்களும், துன்பங்களும் அங்கே பரிசீலிக்கப்படவேண்டும். எல்லா மக்களுக்கும் உகந்த பார்வையில் செய்திகள் சொல்லப்பட வேண்டும். இதுதான் மீடியா தர்மம்.
ஆனால் அப்படி நடக்கிறதா? இன்று இந்திய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி… மீடியாவில் ஒரு குறிப்பிட்ட மக்களின் கலாச்சாரங்கள்தான் பிரதிபலிக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கஷ்ட, நஷ்டங்கள்தான் அலசப்படுகின்றன. வல்லரசு நாடுகளின் பார்வையில்தான் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அப்படியென்றால் அதனை மீடியா என்று சொல்ல முடியுமா?
உலக அளவில் எடுத்துக்கொண்டால் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செய்திகள் வருகின்றன. அவ்வளவுதான். அதாவது மேலை நாடுகள் என்ன எண்ணுகின்றனவோ, அவை எவைகளை செய்திகளாகக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனவோ அவை கீழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
ராய்ட்டர்ஸ் (Reuters), AFP (Agence France – Presse) ஆகிய செய்தி நிறுவனங்களைத் தவிர உலக அளவில் மிகப் பெரிய செய்தி நிறுவனங்கள் என்று பார்த்தீர்களானால் அனைத்தும் அமெரிக்காவைச் சார்ந்ததாகவே இருக்கும்.
ராய்ட்டர்ஸ் லண்டனிலிருந்து இயங்கும் உலகிலேயே மிகப் பழமையான செய்தி நிறுவனம். AFP ஃபிரான்ஸ் தலைநகரமான பாரிசிலிருந்து செயல்படும் மிகப் பெரிய செய்தி நிறுவனம்.
ஆனால் இந்த இரண்டு செய்தி நிறுவனங்களும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் என்ன செய்கின்றனவோ அதையேதான் செய்கின்றன. ஒரு வித்தியாசமும் இல்லை.
உலகிலேயே அதிக ஆங்கில நாளிதழ்களை வெளியிடும் நியூஸ் கார்ப்பரேஷன் பப்ளிஷர்ஸ் (News Corporation Publishers) ஃபிஜி நாட்டிலிருந்து இங்கிலாந்து வரை தன் கிளைகளைப் பரப்பியுள்ளது. இந்த நிறுவனம் 175க்கும் அதிகமாக நாளிதழ்களை வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 15,000 பேர் அங்கே வேலை செய்கிறார்கள்.
நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 20th Century Fox, Fox News ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனர் ருபர்ட் மர்டோக்தான் இந்த நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகமான பங்குகளுக்குச் சொந்தக்காரர். இவர் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர். இருந்தாலும் இவர் அதிக பங்குகளைக் கொண்ட நியூஸ் கார்ப்பரேஷனின் தயாரிப்புகளெல்லாம் அமெரிக்காவைச் சார்ந்ததாகவே இருக்கும்.
Fox News வெளியிடும் செய்திகள் அனைத்தும் சண்டையிடும் மனப்பாங்கைக் கொண்டதாகவே இருக்கும். உலக அரசியலில் அமெரிக்காவின் பங்கு குறித்த செய்திகளை அமெரிக்காவின் நவீன காலனியாதிக்கத்தின் அடிப்படையிலும், ஸியோனிஸப் பார்வையிலுமே அது வெளியிடும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
பயனுள்ள கட்டுரைத் தொடர். இந்தியாவில் உள்ள ஊடகங்கள் எப்படி முஸ்லிம்களை உருவகப்படுத்துகின்றன என்பது குறித்து நான் முன்பு எழுதியிருக்கிறேன். இப்படி முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துகிற உலகளாவிய முயற்சிளை அம்பலப்படுத்துவது முக்கியம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு