எம்.எஸ். அப்துல் ஹமீது BE
கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம்.
ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன.
காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய பகைமையுணர்ச்சிகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. புதிய உறவுகள் பூத்தன. நட்பு என்னும் நறுமணப் பூ நாடுகளெங்கும் மணக்கத் தொடங்கியது.
ஆனால் சிலுவைப் போர்கள் ஆயுதங்களால் செய்வது மட்டும்தான் ஒழிந்தது. அறிவால் செய்யப்படும் போர் தொடர்கின்றது.
இஸ்லாமைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்கின்றது. அந்த விஷம் கிறிஸ்தவ தலைமைப் பீடங்களால் இன்னும் ஐரோப்பிய மக்களுக்குப் புகட்டப்படுகிறது. அது ஐரோப்பியர்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.
ஆக, பகைமையின் விதை எப்பொழுதோ தூவப்பட்டு விட்டது. அதன் பலன்களைத்தான் முஸ்லிம் உலகம் அன்றிலிருந்து இன்று வரை அனுபவித்து வருகின்றது. அதனால்தான் கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். முஸ்லிம் ஸ்பெயின் என்பது அழிக்கப்பட்டது. அங்கே ஆட்சி புரிந்து வந்த கிரனடா பேரரசு 1492ம் ஆண்டு கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்டது.
மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் உள்ள உறவு அடுத்ததாகப் பாதிக்கப்பட்டது துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபோது நடந்தது.
இப்படி மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் நடந்த போர்கள் கலாச்சார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் நிரந்தரமான பகையை நிலைநிறுத்தியது. ஆனால் இந்தச் சண்டைகளில் லாபம் அடைந்தது ஐரோப்பாதான். அது எப்படி என்று பார்ப்போம்.
இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்து, குறிப்பாக அரேபியர்களிடமிருந்து ‘காப்பி’ அடித்துத்தான் ஐரோப்பாவின் கலைகளும், விஞ்ஞானமும் வளர்ந்தன. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என்பது முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் பெற்றதுதான்.
ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களிடையே பல பிரிவுகள் தோன்றின. அவர்களுக்குள் அடித்துக்கொண்டனர். ஆனால் இஸ்லாம் மீது அவர்கள் கொண்ட பகை மட்டும் அப்படியே நிலைத்து நின்றது.
இப்பொழுது ஒரு சந்தேகம் ஏற்படலாம். எப்பொழுதோ மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விஷமப் பிரச்சாரம், எப்பொழுதோ நடந்த சிலுவைப் போர்கள், எப்பொழுதோ விதைக்கப்பட்ட பகையுணர்ச்சி இன்னுமா அங்கே நிலவுகிறது? இப்பொழுது அங்கே மத உணர்வு எல்லாம் மங்கிப் போய்க் கிடக்கின்றது. இந்தச் சூழ்நிலையிலும் அங்கே அதே பகைமையுணர்ச்சி இருக்கும் என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்?
இப்படி சில கேள்விகள் நம் மனங்களில் எழலாம்.
இவை நியாயமான சந்தேகங்களே. ஆனால் நவீன மனோதத்துவவியலாளர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு அவனது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் மத நம்பிக்கைகளை அவன் முழுவதுமாக இழந்து விடலாம். ஆனால் அந்த மதத்துடன் சம்பந்தப்பட்ட சில மூடநம்பிக்கைகள் அவனது உள்ளத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதன் ஆழ, அகலம் வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் ஒரு மேலைநாட்டவனை எடுத்துக்கொண்டால் அவனிடம் இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையே மேலோங்கி நிற்கும்.
மேற்குலகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள், இன்னபிற ஊடக வெளியீடுகளில் அவர்கள் இஸ்லாத்தை போர் வெறி பிடித்த மார்க்கமாகவும், முஸ்லிம்களை இரத்த வெறி பிடித்த காட்டேறிகளாகவுமே சித்தரிக்கின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
இஸ்லாமை பல்வேறு வகைகளாக அவர்கள் கூறு போடுகின்றனர். ‘வன்முறை இஸ்லாம்’, ‘அரசியல் இஸ்லாம்’, ‘தீவிரவாத இஸ்லாம்’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் இஸ்லாமை வகை பிரிக்கின்றனர்.
இன்று அதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஜிஹாதி இஸ்லாம்’ என்று ஒரு புதிய இஸ்லாமைச் சொல்கின்றனர்.
அவர்களிடமுள்ள சக்திவாய்ந்த மீடியாவைப் பயன்படுத்தி இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்றும் பெரும்பாலான மக்களை நம்ப வைத்துள்ளனர்.
இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் இவர்களது பொய்ப் பிரச்சாரத்தில் முஸ்லிம்களும் வீழ்ந்ததுதாம்.
ஆம்! இன்று முஸ்லிம்களும் இஸ்லாத்தில் வன்முறை உள்ளது என்று கருதுகிறார்கள். பேசுகிறார்கள். அதற்கேற்றாற்போல் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் மேற்குலகுக்குக் கிடைத்துள்ளனர். அவர்களை வைத்து இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் அவர்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்கின்றனர்.
ஆக, மொத்த மீடியாவில் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான். இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நன்றாகப் புரியும்.
சிலுவைகள் பற்றியும், அவை ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிய விரும்புவோர் முஹம்மத் அஸத் (Muhammad Asad) எழுதிய Islam at the Cross Roads என்ற நூலைப் படிக்கவும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Good article ... kalakku machan.
பதிலளிநீக்குCourtesy: www.thoothuonline.com
பதிலளிநீக்கு