Breaking News
recent

இதுவல்லவோ நல்லதொ(தெ)ரு விருந்தோம்பல்.

நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில் சவுதி நாட்டவர்களிடம் உள்ள சில நல்ல பழக்கங்களை நாம் தெரிந்து கொள்வோமா!

மாலை நேரம் நெருங்கியவுடன் வேலையின் காரணமாக பலருக்கும் குறித்த நேரத்தில் வீடு சென்று சேர இயலாது. எனவே காலையிலிருந்து பசித்து தாகித்திருந்த பலரும் நோன்பு திறக்கும் நேரத்தில் மிகுந்த சிரமம்எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு பல சவுதிகளும் தன் குழந்தைகளுடன் ஒவ்வொரு சிக்னலிலும் காத்திருப்பார்கள். ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு மோர் பாக்கெட், சில பேரித்தம் பழங்கள், ஒரு பாட்டில் பழ ரசம், ஒரு கேக் இத்தனையும் தங்களின் சொந்த செலவிலேயே வாங்கி நோன்பு திறக்கும் நேரத்தில் சிக்னலில் காத்திருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்பு சிக்னலில் நிற்கும் அத்தனை பேருக்கும் ஓடி ஓடி அந்த பைகளை கொடுக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்களும் பசியோடு சுறுசுறுப்பாக வேலை செய்வதை நாம் அனைவரும் பார்க்க முடியும். இதுவல்லவோ மனித நேயம்.

அதே போல் பல கோடீஸ்வரர்கள் மசூதிகளில் வரிந்து கட்டிக் கொண்டு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை தங்கள் செலவிலேயே செய்வதை பார்க்கிறோம். அதற்காக அவர்களின் உடல் உழைப்பையும் கொடுப்பதை நான் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். நோன்பையும் வைத்துக் கொண்டு 200, 300 பேருக்கு பரிமாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பசியே என்னவென்று பார்த்திராத சவுதிகள் செய்வதுதான் நமக்கு ஆச்சரியமாக படும்.

அடுத்து நோன்பு முடிந்து பெருநான் ஆரம்பமானவுடன் ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களை அவர்களுக்கு பிடித்தமானவைகளை சமைத்துக் கொண்டு பிள்ளைகள், மனைவி சகிதம் சென்று பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் அவர்களுக்கும் இந்த நல்ல நாளில் தன் குடும்பத்தவரைப் பார்ப்பதில் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். சவுதிகளின் பெரும்பாலான குடும்பங்கள் பெருநாளன்று மதியம் ஆஸ்பத்திரியில் காணக் கூடியதாக இருக்கும். முகமது நபியின் சொல்லுக்கும் இந்த மக்கள் எந்த அளவு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

அதே போல் நோன்பில் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாக பிஃத்ரா என்ற தர்மத்தை ஒவ்வொரு நபருக்கும் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு சென்றடையுமாறு முகமது நபி கட்டளையிட்டுள்ளார். அந்த ஒரு நாளாவது ஏழைகள் சற்று சுயமரியாதையோடு தங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடட்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. இதையும் சவுதிகள் கடை பிடிப்பதால் அன்று கையேந்துபவர்களை பார்ப்பது அரிதாக இருக்கும். கடந்த பத்து பதினைந்து வருடமாக நம் தமிழகத்திலும் இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்துள்ளனர். பெருநாளுக்கு முதல்நாள் ஒவ்வொரு ஏழைகளையும் ஊரில் கணக்கெடுத்து அவர்கள் வீடு தேடி சென்று இந்த தர்மத்தைக் கொடுக்கின்றனர். இதனால் பெருநாளன்று தற்காலங்களில் வறியவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. பல இலட்சங்களை தௌகீது ஜமாத், த.மு.மு.க போன்ற அமைப்புகள் வசூலித்து ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர்.

இது போன்று சவுதிகளின் மற்ற பழக்கங்களையும் பெருநாளன்று நம் மக்கள் கொண்ட வர பழக வேண்டும். இதற்கு மாற்றமாக புது துணிகளை உடுத்துவதாலோ, கும்பலாக சேர்ந்து சினிமா பார்ப்பதாலோ, பட்டாசு வெடிப்பதாலோ, வகையாக பிரியாணி சமைத்து சாப்பிடுவதாலோ மட்டும் நாம் பெருநாளைக் கொண்டாடியவர்களாக ஆக முடியாது. நம் பக்கத்தில் உள்ள வறியவர்கள், நம் ஊரில் உள்ள வறியவர்களை சாதி மத பேதம் பார்க்காமல் உதவ நாம் பழக வேண்டும்.

இந்த பெருநாளில் என் நாடும், என் மக்களும், உலக மக்களும் அமைதியான வாழ்வு வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.
-சுவனப்பிரியன்!.
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.