Breaking News
recent

இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களின் நேர்கணல்!




இலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள புத்திஜீவிகளுள் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் முக்கியமானவர். அவரது ஆளுமை இலங்கைக்கு வெளியி லும் அறிமுகமான ஒன்று. தனது கருத்துக்களை எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கும் ஷெய்க் அவர்கள், இஸ்லாத்தைக் கற்பிப்பதி லும் இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதிலும் சமூக மட்டத்தில் ஆலோசனைகள் வழங்குவதிலும் தனித்துவமான தகுதியைப் பெற்றவர்.


இஸ்லா மிய அழைப்புப் பணியில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற ஷெய்க் அகார் அவர்கள், இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனையைக் கடைபிடிப்ப தோடு பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகிறார். மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றைய முதன்மைப் பிரச்சினைகளாக எவற்றை அடையாளப்படுத்துகின்றீர்கள்?


எந்தவொரு சமூகத்தின் மேம்பாட்டுக்கும் தடையாக இருக்கும் அம்சங்களை சமூகவியல் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில், முத லாவது ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தடையாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதனை வறுமை என்றும் சொல்லலாம்.


இரண்டாவது சுகாதாரப் பிரச்சினை. நோய்கள் என்றும் சொல்லலாம். மூன்றா வது கல்விப் பிரச்சினை. இது தவிர இன்னொரு பிரச்சினையையும் இஸ்லா மிய நோக்கில் குறிப்பிடலாம். அதுதான் ஆன்மீக, தார்மீக, ஒழுக்கப் பண் பாட்டுத் துறையில் காணப்படுகின்ற வீழ்ச்சி. இவை ஒரு சமூகத்தின் முன் னேற்றத்திற்குத் தடையாக அமைகின்ற அம்சங்கள். இந்த எல்லாப் பிரச்சினை களும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.


இலங்கை முஸ்லிம்களில் 60 வீத மானோர் வறியவர்கள். 40 வீதத்துக்கு உட்பட்டோர் நடுத்தர வர்க்கத்தினர். ஒரு சிறிய தொகையினர்தான் செல் வந்தர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு காலத்தில் இந்த நாட்டின் பொரு ளாதாரத்தில் நாங்கள் பெரிய பங்களிப்புச் செய்த சமூகம்.

முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க ஒரு தடவை ‘இலங்கை முஸ்லிம் கள் இந்த நாட்டின் முதுகெலும்பு’ என்று சொன்னார். பொருளாதாத்தை வைத்துத் தான் அவர் அப்படிச் சொன்னார். ஏனெனில் அன்று ஏற்றுமதி-இறக் குமதி வியாபாரத்தின் ஏகபோக உரிமை முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்தது. இலங்கையில் வர்த்தகத்துறையின் ஜாம்பவான்களாக அவர்களே இருந்தார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாய் மாறியுள்ளது. எமது சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராக இருப்பது பொருளா தாரப் பிரச்சினைதான்.

சுகாதாரப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் ஒப்பீட்டு ரீதியில் அண்மைக் கால ஆய்வுகளின்படி நோய்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில்தான் அதிகமா கக் காணப்படுகின்றன. நீரிழிவு நோய், இருதய நோய் என்பன எமது சமூகத் தில் அதிகமாகக் காணப்படுகின்றது.


உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப் படையில் புற்றுநோயும் எமது சமூகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது எனத் தெரிய வருகின்றது. அண்மையில் பரவிய ‘சிக்குன் குன்யா’ என்ற நோய்க்கு ‘மரக்கல உன’ என்று சில வைத்தியர்கள் பெயர் வைத்தார்கள். அதுபோன்றுதான் டெங்குக் காய்ச்சலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிகமா கப் பரவியது. இது ஆழமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.



மூன்றாவதாக கல்விப் பிரச்சினையைச் சொல்லலாம். முதல் இரண்டு பிரச் சினைகளுக்கும் கூட இதுதான் அடிப்படைக் காரணம். இன்று அறிவுதான் மிகப் பெரிய உற்பத்திக் காரணி. இந்த நூற்றாண்டில் அறிவே Super Power. கல்வி நிலை சீராகுமாக இருந்தால் பொருளாதார, சுகாதார, ஆன்மீக நிலை களும் சீராகும்.


இஸ்லாத்தினுடைய செய்தியும் அதுதான். ஆயிரம் ஆயிரம் விடயங்க ளைப் பேச வந்த அல்குர்ஆன், முதலாவதாக கல்வியைப் பற்றியும் எழுத்தைப் பற்றியுமே பேசியது. எந்த இடத்தில் கல்வி இல்லையோ அங்கு பொருளாதா ரம், சுகாதாரம், பண் பாடு, ஒழுக்கம் என்ற எதுவுமே சீராக இருக்காது.



இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் இரண்டு விடயங் கள் தடையாக உள்ளன. அவையும் எமது சமூகத்தில் முதன்மைப் பிரச்சினை கள்தான். ஒன்று எமது சமூகத்திற்கு மத்தியில் உள்ள மார்க்க ரீதியான பிளவுகள். அடுத்தது அரசியல் களத்தில் காணப்படுகின்ற முரண்பாடுகள்.



சுருக்கமாகச் சொன்னால் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்பான ஒரு சமூகமாக எமது சமூகம் இல்லை. இதனால் சமூக மேம்பாட்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சித் திட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாமல் உள்ளது.



இந்தத் தடைகளை எப்படித் தாண்டிச் செல்வது? முதன்மைப் பிரச்சினைக்குரிய தீர்வுகளை எப்படி வரையறை செய்கின்றீர்கள்?



இலங்கை முஸ்லிம்களின் பிரச்சி னைகளைத் தீர்க்க வேண்டும் என்ப தில் முனைப்புடன் ஈடுபடுகின்ற இயக்கங்கள், நிறுவனங்கள் களத்தில் இருக்கின் றன. சுகாதாரப் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் என்று, பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று, ஆன்மீக, கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று இரவு பகலாக உழைப்பவர்கள் இருக்கிறார்கள்.



எத்த னையோ முயற்சிகள் எத்தனையோ மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு முயற்சி இல்லை. இந்த அமைப்புக்க ளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. மிக இலகுவாக இந்த அமைப்புக் களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருக் கின்றன. ஆனால் அது நடக்க வில்லை.



சமூக சீர்திருத்தம் பற்றிய முழுதளா விய (Holistic) பார்வை இல்லாமல் போயுள்ளது. ஒவ்வொரு வரும் தாம் அடை யாளப்படுத்திய பிரச்சினையை தீர்த்தால் சமூகப் பிரச்சினைத் தீர்ந்துவிடும் என்று நினைக்கின்றனர். எல்லா அணிகளுக்கும் இந்த Holistic பார்வையை கொடுப்பதுதான் இதற்குரிய முதற்தீர்வு என்று கருதுகின்றேன். ஏனெனில், எல்லோரும் ஒருபக்கப் பார்வையுடையவர்களாகவே இருக்கின்றார்கள்.



அடுத்து இந்த நாட்டில் இயங்குகின்ற அமைப்புகளுக்கிடையில் ஒருங் கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். நிறையப் பேர் இது முடியாது, சாத்திய மில்லை என்கிறார்கள். ஏன் முடியாது என்று நான் கேட்கிறேன். இலங்கை யைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பொது ஒருங்கிணைப் போடு இயங்குவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாகக் காணப்படுகின் றன. இதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறேன்.


பிரித்தானியாவில் –Muslim Council of Britain (MCB) என்ற ஒரு நிறுவனம் உள்ளது. சுமார் 400 அமைப்புக் கள் அதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பாராட்டும் படி உள்ளன.



அதேபோல அமெரிக்காவிலுள்ள CAIR என்ற நிறுவனத்தையும் இங்கு நினைவுபடுத்தலாம். இந்த இரண்டு நிறுவனங்களிலும் அந்நாடுகளில் வாழும் 50 அல்லது 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புகள் இணைந்து செயற்படுகின்றன.



இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரியள விற்கு இனவாதம், பிரதேசவாதம், மொழிவாதம் என்பன இல்லை. இனத்தால், பிரதே சத்தால், கலாசாரத் தால் நாம் மிக நெருக்கமானவர்கள். நாம் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தவர்கள். அத்தோடு இலங்கை யைப் பொறுத்த வரை ஏனைய நாடுகளைப் போல புவியியல் ரீதியில் மிகப் பெரிய இடைவெளி இல்லை.


சிறிய ஒரு சமூகம். எனவே ஒற்றுமைகள் அதிகம். எங்களால் இணைய முடியாவிட்டால் யாரால்தான் இணைய முடி யும். ஏனைய நாடுகளில் இருக்கின்ற இடர்பாடுகள் இலங்கைப் பூமியில் இல்லை. மனம் வைத்தால் இதனை சாத்தியப்படுத்தலாம்.



அடுத்து இந்த சமூகத்திற்கு எல்லோருமாகச் சேர்ந்து ஒரு Master plan தயாரிக்க வேண்டும். எங்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரு வேலையைப் பலர் செய்கிறார்கள். பல வேலைகளை எவரும் செய்யாமல் விட்டு விடுகி றார்கள். உதாரணமாக ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி சேவையை, வானொலி அலைவரிசையை உருவாக்க முடியாது. ஏன் எல்லா அமைப்புகளும் இணைந்து அல்குர்ஆனுக்கான ஒரு சிங்கள மொழிபெயர் ப்பை வெளிக்கொணர முடியாது?.



இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஜம்இய்யதுல் உலமா எத்தகைய பங்களிப்பை வழங்கியுள்ளது?


அல்லாஹ்வின் அருளால் இந்தப் பணியைச் செய்வதற்கு ஒப்பீட்டு ரீதியில் ஒரு தகைமையான அமைப்பாக ஜம்இய்யதுல் உலமாவை சிபாரிசு செய் யலாம். கடந்த 80 வருடகாலமாக இவ்வமைப்பு இலங்கையில் இயங்கி வரு கிறது. மக்கள் தங்களது அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருக்கிறார்கள். ஏனைய பல நாடுகளில் பல உலமா அமைப்புகள் காணப்படு வதை நாம் பார்க்கின்றோம்.



இலங்கையில் அப்படியில்லை. இது ஒரு சாதகமான நிலை. அனைத்து அமைப்புக்களையும் இணைக்கின்ற பாலமாக ஜம்இய்ய துல் உலமா காணப் படுகின்றது.


ஜம்இய்யதுல் உலமாவால் இதனைச் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல உதார ணம்தான் நாங்கள் அண்மையில் தோற்றுவித்த CCC என்ற அமைப்பு. அதா வது ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமையம். பேருவளையில் நடந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து அது தோற்றுவிக்கப்பட்டது. எதிர்காலத் தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.


பல்வேறு அணிகளுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் இவ்வமைப்பு தோற்றுவிக் கப்பட்டது. அத்தோடு –Muslim Council of Sri Lanka மேற்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காத்திரமான பங்களிப் பைச் செய்ய முடியும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.


இலங்கையில் இஸ்லாமிய நிதியியல் துறையின் வளர்ச்சி மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து...


இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதார மந்தம் நிலவுகின்றது. இதற்கு முக்கிய காரணம் முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்காகும். ஏலவே, கம்யூ னிஸ, சோஷலிஸ பொருளாதாரக் கொள்கை தோல்வி கண்டுவிட்டது. இப் போது முதலாளித்துவமும் தோல்வியடைந்து விட்டது என்பது நிரூபணமாகி விட்டது.



தற்போது முழு உலகத்திற்கும் ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கை தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் இஸ்லாமிய பொருளாதார ஒழுங்கு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 250க்கும் மேற் பட்ட நிதி நிறுவனங்கள் வெற்றிகரமாக செயற்பட் டுக் கொண்டு வருகின்றன.


பொருளாதார மந்தத்தினால் இஸ்லாமிய நிதித் துறை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. மறைமுகமாக ஓரளவு பாதிக்கப்பட் டமையை மறுப்பதற்கில்லை. இன்று பன்னிரண்டு ட்ரில்லியன் டொலர்கள் இஸ்லாமிய நிதித்துறையில் புழக்கத்தில் இருக்கின்றன.


முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தி யிலும் இஸ்லாமிய நிதித்துறை பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாக மாறியிருக் கின்றது. அத்தோடு இத்துறைசார் வளவாளர்களுள் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் இத்துறையில் நூல்களையும் எழுதியுள்ளனர்.



இந்தப் பின்புலத்தில் இஸ்லாமிய நிதியியல் என்பது உலகளவில் வளர்ந்து வருகின்றது. இலங்கையிலும் கடந்த இரண்டு தசாப்த காலங்களில் இஸ்லா மியப் பொருளாதார ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.


இலங்கையில் சுமார் 10 நிதி நிறுவனங்கள் இஸ்லாமிய நிதிச் சந்தையில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன. அதில் ஒன்று, அண்மையில் சிதைந்து போனது. இதனைத்தொடர்ந்து பலர் இஸ்லாமிய நிதி ஒழுங்கில் நம் பிக்கை இழந்து கதைத்து வருகின்றனர்.



இந்நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்த மக்கள் தற்போது பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர் களுள் பெரும்பாலானவர்கள் சாதா ரண மக்கள். ஜம்இய் யதுல் உலமா அது தொடர்பில் தற்பொழுது சில காத்திரமான முன்னெடுப்பு களை மேற்கொண்டுவருகின்றது. அந்த நிதி நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் கார ணம் இஸ்லாமிய நிதி ஒழுங்கிலுள்ள பிரச்சினை அல்ல.

அதற்கும் ஷரீஆ வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிதி நிறுவனத்தில் நிலவிய ஒழுங் கீனங்களும் அதன் ஏனைய கம்பனிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே இந்த வங்கு ரோத்து நிலைக்குக் காரணம்.


அந்த குறிப்பிட்ட நிதி நிறுவனத் தில் ஏற்பட்ட வீழ்ச்சியை வைத்து இஸ்லா மிய நிதி ஒழுங்கு தோல்வி கண்டு விட்டது என்ற கருத்தைப் பரப்பும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனைய நிதி நிறுவனங்களின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.



இந்த இடத்தில் இஸ்லாமிய நிதித்துறை தொடர்பான இரண்டு முக்கிய குறை பாடுகளை அடை யாளப்படுத்த வேண்டும்.


1. இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றிய போதிய அறிவு வாடிக்கையாளர்களுக்கு இல்லை.


2. உலகத்தில் பொதுவாகவும் இலங்கையில் குறிப்பாகவும் இஸ்லாமிய நிதித்துறையில் ஈடுபட்டுள்ள பலருக்கு இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றிய போதிய அறிவு இல்லை. அதாவது தகுதிவாய்ந்த இஸ்லாமிய வங்கியியலா ளர்கள், வளவாளர்கள் மிகவும் குறைவு.


அத்தோடு எந்தவொரு வியாபாரத்திற்கும் விளம்பரம் முக்கியம். ஆனால், இஸ்லாமிய நிதியொழுங்குகள் குறித்து பெருமளவிலான விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை. இது ஒரு குறைபாடுதான். பரந்தளவிலான விழிப்புணர்வும் விளம்பரமும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களால் அவசியம் மேற்கொள் ளப்பட வேண்டும். தற்போது இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு மிகவும் சார் பான முன்னெடுப்புக்களை மத்திய வங்கி மேற்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.


இலங்கைக்கு வெளியிலான உங்களது தஃவா அனுபவம் பற்றி...


வெளிநாட்டுப் பயணங்களினூடாக பல புதிய விடயங்களைப் பார்க்கவும் கேட்கவும் தேடவும் நான் தூண்டப்பட்டேன். உலகில் தமிழ் பேசும் 9 கோடி மக்கள் வாழ்கின்ற னர். தமிழ் நாட்டில் 7 கோடிப் பேர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் ஏனைய நாடுகளில் 2 கோடிப் பேர். இவர்கள் பெரிய தொரு சமூக மாகக் காணப்படுகின்றனர்.


இவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது. அறபு மொழியிலும் சரி, ஆங்கில மொழியிலும் சரி இஸ்லாமிய தஃவா பரந்த அளவில் நடைபெறு கிறது. ஆனால், இவர்களை யார் கவனிப்பது என்ற உணர்வையே வெளிநாட் டுப் பயணம் எனக்குள் ஏற்படுத்தியது.



அத்தோடு உலக தமிழ் முஸ்லிம் பேரவையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறேன். இதன் மூலம் இஸ்லாத்தின் செய்தியையும் ஏனைய விடயங்களையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல லாம். இந்தக் கருத்து குறித்து பலர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப் பதை என்னால் பார்க்க முடிகிறது.



முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவை எப்படிக் கட்டியெழுப்புவது? வர லாற்றுடனும் போருக்குப் பிந்திய இலங்கையுடனும் இதனைத் தொடர்பு படுத்தி விளக்குங்கள்.


உண்மையில் நாங்கள் பாக்கிய சாலிகள். இந்த நாட்டில் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக் கின்றது. இலங்கையில் 3000க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள், 800க்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள், 200க்கும் மேற்பட்ட அறபு மத்ரஸாக் கள், 2500 க்கும் மேற்பட்ட குர்ஆன் மத்ரஸாக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன.


பல்கலைக்கழகங்களிலும் கூட இஸ்லாமிய கற்கை நெறிக் கான பீடங்கள் இருக்கின்றன. அத்தோடு முஸ்லிம் தனியார் சட்டம் அமுலில் இருக்கின்றது. ஏனைய பல நாடுகளில் இப்படி எதனையும் முஸ் லிம் சிறுபான்மை சமூகங்களில் நாம் காணமுடியாது. இதனால்தான் இலங்கை முஸ்லிம்கள் பாக்கியசாலிகள் என்று சொன்னேன்.



நாங்கள் ஒரு கௌரவமான சமூகமாக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள் ளோம். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறை எல்லாக் காலமும் செய்துள் ளோம். அதுதான் எங்களை அடுத்த சமூகம் புரிந்துகொள்ளும்படி நாங்கள் எத னையுமே செய்யவில்லை. மிக அண்மைக் காலம் வரை அதற்குரிய எந்த வழிமுறையும் மேற்கொள் ளப்படவில்லை.



1000 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்த நாட்டில் வாழ்கிறோம். நாங்கள் கதீஜாக்கள், அபூபக்ர்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யத் தவறிவிட்டோம். குறைந்த பட்சம் நாங்கள் ஆயிரம் ஆயிரம் அபூ தாலிப்களையா வது உருவாக்கியிருக்க வேண்டும். எமக்கு வெளியிலிருக்கும் 92% குறித்து இன்னும் நாம் அதிகம் சிந்திக்க வில்லை.



இந்த நாட்டுக்கு நாங்கள் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளோம். போர்த் துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இந்நாட்டை ஆக்கிரமித்து இதன் வளங்களைச் சுரண்டிச் சென்றார்கள். ஆனால் எமது மூதாதையர்களோ அப் படிச் செய்ய வில்லை.


இந்த நாட்டின் விளை பொருட்களை வெளிநாடுக ளுக்கு அறிமுகம் செய்தார்கள். இந்த நாட் டின் தூதுவர்களாக செயற்பட்டார் கள். அரசமாளிகையில் சமையற் காரர்களாகவும் அரச சபையில் ஆலோ சகர்களாகவும் அமைச்சர்களாகவும் ராஜாங்க மருத்துவர்களாகவும் இருந்தார் கள்.



போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் முதலான ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக சுதேசிக ளோடு சேர்ந்து போராடினார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தமது பங்க ளிப்பைச் செய்தார்கள். மேலும் இந்த நாட்டின் இறைமைக்கோ ஒருமைப்பாட் டுக்கோ நாங்கள் என்றும் அச்சுறுத்த லாக இருந்ததில்லை. அதுபோல இந்த நாட்டுக்கு எந்த உபத்திரவமும் செய்ததில்லை. அதுவே மிகப் பெரிய உதவி தானே. அத்தோடு இராணுவ ரீதியான பங்களிப்பை நிறைய முஸ்லிம் குடும் பங்கள் செய்துள்ளன.



இந்நாட்டின் இறைமைக்காக தொடர்ந்தும் முஸ்லிம்கள் தம்மாலான பங்க ளிப்பை செய்து வந்துள் ளார்கள். ஆனால் இந்த உண்மைகள் இந்த நாட்டில் உரத்துப் பேசப்படுவதாகத் தெரியவில்லை. எங்களுக்கும் பிற சமூகங்களுக் கும் இடையில் ஒரு தொடர்பாடல் இடைவெளி இருக்கிறது. அது நீக்கப்படல் வேண்டும்.


அத்தோடு அடுத்த சமூகங்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொண்டு கிட்டிய எதிர்காலத்தில் இன ஐக்கிய மும் சமூக நல்லிணக்கமும் நிலவுகின்ற ஒரு நாட்டை நாம் கட்டி யெழுப்ப வேண் டும்.


ADRT நிறுவனம் பற்றிச் சொல்லுங்கள்...


முஸ்லிம் சமூகத்தின் திறன் விருத்தி (Capacity Building) மேம்பாட்டுக்கு வழி யமைக்கும் ஒரு முன்னோடி நிறுவனமாக விளங்கு வதுதான் ஜாமிஆ நளீ மிய்யாவின் அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்சிக்கான அகடமியின் இலக் காக இருக்கின்றது.


இன்றைய கால கட்டத்தில் அவசரமாக ஆளணி உருவாக்கம் இடம் பெற வேண்டும். இந்த வகையில் ADRT நிறுவனம் தனது பணிகளை முன்னெடுத் துச் செல்கின்றது. சமூகத் தலைவர்களை தகுதிப்படுத்தல், மத நல்லிணக்கம் மூலம் தேசிய நல்லிணக்கத்திற்கு வழியமைத்தல், வளவாளர் பற்றாக்கு றையை நிவர்த்தி செய்தல் போன்ற பல்வேறு இலக்குகளும் குறிக்கோள்க ளும் அதற்கு இருக்கின்றது.



ஸ்தாபிக்கப்பட்டு இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில் ADRT நிறுவனம் தனது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றது. குறிப்பாக இலங்கை அறபுக் கலாசாலைகளின் போதனாசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி நெறியை இந்த நிறுவனம் தற்போது மிக வெற்றிகர மாக மேற் கொண்டு வருகின்றது.



மத்ரஸா கல்விமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து...


இந்த நாட்டில் 200க்கும் மேற் பட்ட அறபு மத்ரஸாக்கள் இருக்கின் றன. 7000க்கும் மேற்பட்ட உலமாக்கள் இருக்கிறார்கள். 11000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்ரஸாக்க ளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்கள் அண்மைக் காலம் வரை பாரம்பரிய அமைப்பிலேயே இயங்கி வந்துள்ளன.

ஆனால் இளம் உலமாக்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக அண்மைக்காலமாக புதிய மாற்றங்களை மத்ரஸா கல்வி முறை யில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


ஆரம்ப கட்டமாக புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு பொதுக் கல்விக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இலங்கை அறபிக் கலாசாலை ஒன்றியம் என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப் புக்கு எல்லா மத்ரஸாக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.


கடந்த 40 வருடங்களாக மத்ரஸாக்களுக்கு ஒரு பொதுப் பாடத்திட்டம் உரு வாக வேண்டும் என்ற நோக்கோடு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது சாத்தியமாகவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

தற்பொழுது முஸ் லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒரு நிபுணத்துவ உலமா குழுவின் ஒத்து ழைப்போடு ஒரு பொதுப்பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. அதற்கு சகலதரப்பு உலமாக்களினதும் அங்கீகாரம் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.


இந்தப் பாடத்திட்டத்திற்கு அரச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் பரீட் சைகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திற்கூடாக நடத்தவும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சந்திப்பு: சிராஜ் மஷ்ஹூர், ஏ.ஸீ.எம். நதீர், இன்ஸாப் ஸலாஹுதீன்

நன்றி:மீள் பார்வை
Unknown

Unknown

1 கருத்து:

  1. இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களின் நேர்காணலை அதிரை போஸ்ட் மிகவும் பாக்கியமாக கருதுகிறது!

    நேர்காணலை நடாத்திய மீள் பார்வைக்கும் எமது நன்றி!!

    adiraipost

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.