Breaking News
recent

பாபர் மசூதி: இந்தியா என்ன செய்யப் போகிறது?

“பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான். அதில் பெருமைப்படுகிறோம் _ பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அமைப்புகள்தாம் மசூதியை இடித்-தோம். மக்கள் எழுச்சியின் விளைவு அது. என்ன தண்டனை தருவீர்கள்? எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால், தண்டித்துப் பாருங்கள். தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளோம்’’ என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வின் மக்களவைத் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். இதே தன்மையில்தான் உமாபாரதியும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற முன்னாள் பா.ஜ.க. உறுப்பி-னரும், ராமஜென்ம பூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தியும், சுஷ்மா சுவராஜைத் தாண்டி ஆவேசமாகப் பேசியுள்ளார். பாபர் மசூதி இடிப்பதை மேற்பார்வையிட்டவன் நான்தான். இடித்துத் தள்ளுங்கள் என்று கூறினேன். பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கும்வரை நான் அங்கு இருந்தேன் என்று இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

லிபரான் ஆணையம் என்ன சொல்லுகிறது? குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறதா? தண்டனை தரப் பரிந்துரை செய்துள்ளதா என்கிற கேள்விகளுக்கே இனி இடமில்லை.

லிபரான் ஆணையத்தை அவர்தான் எழுதி-னாரா அல்லது காங்கிரஸ் கட்சி எழுதியதா என்றெல்லாம் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார்.

இவ்வளவு நிர்வாணமாக உண்மையை ஒப்புக்-கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பேசிய பிறகும், அதுவும் நாடாளுமன்றத்தில் கூறிய பிறகும் குற்றவாளிகளைத் தண்டிக்க மத்திய அரசுக்குத் தயக்கம் ஏன்?

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், இவர்கள்மீது சட்டம் பாயாதது ஏன்? இந்தப் பேச்சுகளின் அடிப்படையிலேயே இதற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டாமா? இதற்கு மேலும் மத்திய அரசு குற்றவாளிகளின்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குமானால், இந்திய அரசின் நிருவாகம், சட்டம், நீதி இவை அனைத்தின் அடித்தளமும் நொறுக்கப்பட்டுவிட்டன என்று பொருள்; அன்று பாபர் மசூதியை அடித்து நொறுக்கினார்கள்; இன்று இந்திய அரசமைப்பு முறையையே அடித்து நொறுக்கிவிட்டார்கள் என்று உறுதியாகப் பொருள்பட்டுவிடும்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல்; அந்தக் கேடு கெட்ட செயலைச் செய்தவர்கள் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் கூட்டத்தினர்தாம் என்று நாடாளுமன்றத்தில் நறுக்குத் தெறித்ததுபோல பேசியுள்ளார்.

இப்பொழுது இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள அத்தனை நாடுகளின் கண்களும் இந்தியாவை உற்றுநோக்குகின்றன.

இந்தியா என்ன செய்யப் போகிறது? குறிப்பாக உள்துறையின் செயல்பாடு எந்தத் திசையில் இருக்கப் போகிறது? சட்டம் தன் கடமையைச் செய்யுமா? சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படுமா? என்ற வினாக்கள் செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மத்திய அரசு இதில் தயக்கமும், சுணக்கமும் காட்டுமேயானால், சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று பாமர மனிதனும் நினைக்கும், செயல்படும் ஒரு நிலையைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். இது கல்லின்மேல் பொறிக்கப்பட்ட அழிக்க முடியாத வாசகமாகும்.

சிறுபான்மை மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கண்டிப்பாக உணரும் ஒரு நிலையை உண்டாக்கிவிடும். இந்தியாவின் மதச் சார்பின்மை என்பது ‘இந்து’மாக்கடலில் தூக்கி எறியப்பட்டதாகவும் கருதப்படும்.

மிக முக்கியமான காலகட்டத்தில் மத்திய அரசு தன் கடமையைச் செய்யப் போகிறதா, இல்லையா? இதுதான் இன்றைய வினா!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.