Breaking News
recent

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்.

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

ரியாதில் எமது சிறப்பு செய்தியாளருக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அளித்த பேட்டியை இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணைத்தளத்தில் பார்க்கலாம்.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

1 கருத்து:

 1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

  30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

  எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

  நன்றி! வஸ்ஸலாம்.

  அன்புடன்....

  பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
  அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
  பொதுச் செயலாளர்
  மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
  குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
  துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
  மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
  இணையதளம்: www.k-tic.com
  யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
  கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.