
கட்டுரையாசிரியர் குறித்து :
கட்டுரையாசிரியர் தற்போது சூடானில் யுனிசெஃப் நிறுவனத்தில் சிறுவர் பாதுகாப்பு நிபுணராகக் கடமையாற்றி வருகிறார். அபிவிருத்திக் கற்கைகள் மற்றும் பொதுக் கொள்கை துறையில் முதுமாணிப் பட்டப் படிப்பையும்,ஆட்சி நிர்வாக முறைமையில் டிப்ளோமா தரத்தையும் பூர்த்தி செய்துள்ள இவர், இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனங்களது திட்டமிடல் மற்றும் நிறுவன அபிவிருத்தியை தனது சிறப்புத் துறையாகவும் கொண்டுள்ளார்.
தொடர்புக்காக: insafnizam@yahoo.co.uk
இங்கு குப்பை என்ற பிரயோகம் எமது வீடுகள், அலுவலகங்கள், கணினிகள், வாழ்வு என்பவற்றில் குவிந்து கிடக்கின்ற தேவையோ, பயனோ அற்ற அனைத்து அம்சங்களையும் குறிக்கும்.
சென்ற வருடம் எனது கணினியின் வன் வட்டு (Hard disk) பழுதடைந்து, அதில் நான் பதிவுசெய்து வைத்திருந்த எல்லா இலத்திரனி யல் ஆவணங்களும் (Documents) அழிந்து விட்டன.
அந்த வினாடியில் உலகமே அழிந்து விட்ட தாகப் பிரமை தட்டியது எனக்கு.
நான் மிகவும் விரக்தியடைந்து விட்டேன். சில நாட்களுக்கு என்னால் எதிலுமே ஊன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை.
பிறகுதான் சுனாமியால் எல்லா உடமைகளையும் இழந்து நிர்க்கதியானவர்கள் பற்றிய சிந்தனை எனக்குள் எழுந்தது. விமான விபத்துகளில் சிக்கி உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்தவர்கள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன்.
அவர்களுக்கெல்லாம் இரண்டு மாதங்களில் அல்லது இரண்டு வருடங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமென்றால், கணினியிலிருந்த ஆவணங்கள் அழிந்தபோது எனக்கேற்பட்ட விரக்தியை எப்படி நியாயப்படுத்த முடியும்!?
அல்ஹம்து லில்லாஹ் - தன்னம்பிக்கையும் உறுதியும் மீண்டும் எனக்குக் கிடைத்துவிட்டன.
அதேநேரம் கணினியிலிருந்த முக்கியமான தகவல்களை வேறோர் இடத்தில் மீள்பதிவு (Back up)செய்து வைக்காத எனது தவறை எதனாலும் நியாயப்படுத்திவிட முடியாது. ஒரு முஸ்லிம் எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவன் எடுத்திருக்க வேண்டும்.
வன்வட்டு சிதைவடைந்ததிலிருந்து நான் பெற்ற மிக முக்கியமான பாடம் என்னவெனில், அதில் நான் பதிந்து வைத்திருந்த தகவல்களில் பெரும்பாலானவை உண்மையில் பிரதானமான தகவல்களோ, அதிக முக்கியத்துவம் கொண்ட தகவல்களோ அல்ல என்பதுதான்.
80/20 கோட்பாடு:
மனித வாழ்வில் அவசியமற்ற குப்பைகளே நிறைந்திருக்கின்றன.
1906ஆம் ஆண்டு இத்தாலிய பொருளியலாளரான வில்ஃபிரேடோ பரேட்டோ என்பவர் தனது தேசத்தில் காணப்பட்ட சமமற்ற வளப் பங்கீட்டை விவரிப்பதற்கு கணிதவியல் சமன்பாடொன்றை உருவாக்கினார். தேசத்தின் எண்பது வீதமான (80%) செல்வத்தை இருபது வீதமான (20%) மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதே அவரது அவதானமாக இருந்தது.
1930-1940 களில் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த சிறந்த நிர்வாக முறைமை முன்னோடியான கலாநிதி ஜோஸஃப் ஜூரன் என்பவர் பரேட்டோவின் மேற்குறித்த கோட்பாட்டை நவீன நிர்வாகவியல் துறைக்குள் தத்தெடுத்து, "முக்கியமான சிலவும் முக்கியமற்ற பலவும்" (vital few and trivial many) (1) (பின்நாளில் ஜுரன் தனது கோட்பாட்டின் தலைப்பை "முக்கியமான சிலவும் பயனுள்ள பலவும்" (vital few and useful many) என மாற்றினார். எண்பது வீதமானவற்றில் பயனுள்ள அம்சங்களும் இருக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டவே அவர் இவ்வாறு மாற்றியமைத்தார்)
என்ற மற்றொரு கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இதுவே பின்னர் 80/20 கோட்பாடு எனப்பிரபலமடைந்தது. எந்த விடயத்திலும் சொற்ப அளவான பகுதியே (20 வீதம்) முக்கியமானதாக இருக்கும். அதிகளவான பகுதி (80 வீதம்) முக்கி யமற்றதாகத்தான் இருக்கும். இதுவே 80/20 கோட்பாட்டின் பொருள்.
"முக்கியமான சிலவும் முக்கியமற்ற பலவும்" என்ற இக்கோட்பாடு இஸ்லாத்தினுள்ளும் ஆழப்பதிந்து காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அல்-குர்ஆனும் ஸுன்னாவும் இக்கோட்பாட்டை தம்மகத்தே பொதிந்திருக்கும் அதேவேளை, சூழ்நிலைகளுக்கும் வேறு பல காரணிகளுக்கும் ஏற்ப வெவ்வேறு விகிதாசாரங்களில் அதனை எடுத்தாண்டுள்ளன.
நிராகரிப்பாளர்களுடனான ஜிஹாதின்போது பொறுமையும் உறுதியும்மிக்க இருபது முஸ்லிம்களது பலம் இருநூறு நிராகரிப்பாளர்களது பலத்தைவிட அதிகமானது என அல்-குர்ஆன் ஆரம்பத்தில் கணிப்பிட்டுக் கூறியது. எனினும் பிறகு சூழ்நிலைகள் படிப்படியாக மாற்றமடைந்தபோது 1:2 என்ற விகிதாசாரத்தில் அல்-குர்ஆன் மீள் கணிப்பீடொன்றை முன்வைத்தது. (அல்-அன்ஃபால்: 65-66)
இதேபோன்றுதான் ஒரு சமூகத்தினுள் காணப்படும் தலைமைத்துவப் பண்பு கொண்ட மனிதர்கள் நூறுபேருக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் காணப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
"மனிதர்கள் நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றுள் பயணத்துக்கு உகந்த (முன்னோடிப் பண்பு கொண்ட) ஓர் ஒட்டகத்தைக் காண்பது கூட கடினமானதுதான்."
ஆக, இங்கு விகிதாசாரங்கள் இருபது, பத்து, சிலபோது ஒன்று என்ற வகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
அப்படியென்றால் மீதி எண்பது வீதத்தின் நிலை என்ன?
அவற்றுள் பெரும் பகுதி குப்பைகள் என்றே நான் கூறுவேன்.
குப்பைகளா!?
ஆம், குப்பைகள்தான்! பௌதீகக் குப்பை, செயற்பாட்டுக் குப்பை, உணர்ச்சிக் குப்பை, சிந்தனைக் குப்பை. தற்காலத்தில் இலத்திரனியல் குப்பையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
எல்லாக் குப்பைகளும் சேர்ந்து நமது நேரத்திலும் வளங்களிலும் சக்தியிலும் எண்பது வீதத்தை விழுங்கிக் கொண்டு, நமது அடைவின் இருபது வீத்ததையே விளைவாகத் தருகின்றன.
தொடங்கி வைப்போம்:
வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தாக்கம் மிக்கதாகவும் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் குப்பைகள் அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இந்தக் குப்பைகளே நமது இயலுமை,தாக்கத்திறன், ஆக்கத்திறன், கவனம் என்பவற்றைச் சிதறடிக்கின்றன.
நபி நூஹ் (அலை) தொடக்கம் ஹூத் (அலை) மற்றும் மூஸா (அலை) வரை பாரிய பல சமுதாயக் குப்பைகளை இவர்களைக் கொண்டு அல்லாஹ் அகற்றி வந்திருக்கிறான். தனது சிருஷ்டிகளில் காணப்படும் சீர்கெட்ட கூறொன்று ஏனைய நல்ல கூறுகளைப் பாதித்து விடாதிருப்பதற்காகவே அவன் அவ்வாறு செய்தான்.
விசுவாசிகளிடமிருந்து ஸகாத்தைப் பெறுமாறு நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் பணித்தபோது,அது அவர்களது செல்வங்களைத் தூய்மைப் படுத்தும் என்று கூறினான். (அத்தவ்பா:103) முஸ்லிமின் செல்வத்தில் சந்தேகத்துக்கிடமான பல அம்சங்கள் கலந்து காலப்போக்கில் அதனை மாசுபடுத்திவிட முடியும் என்பதே இதன் பொருளாகும்.
ஐவேளைத் தொழுகைகள்கூட ஆன்மாவின் அழுக்குகளைத் தூய்மைப்படுத்துவதாகக் குறிப்பிட்ட நபியவர்கள், ஒரு மனிதன் தனது வீட்டின் முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஐவேளை குளித்து உடலைச் சுத்தப்படுத்திக் கொள்வது போன்றதே அது என உவமித்தார்கள்.
ஜப்பானிய நிர்வாகத்துறை முன்னோடிகள் இதனை ‘ஸெய்ஸோ’ (அதாவது சுத்தம் செய்தல் அல்லது பெருக்குதல்) என அழைப்பர்.
இந்தவகையில், எந்தெந்த அம்சங்கள் நமது வாழ்வைக் குப்பையாக்குகின்றன என்பதை அறிந்து அவற்றை அகற்றுவது அடிப்படைக் கடமையாகிறது.
பௌதீகக் குப்பை:
குப்பைகள் பலவகை. முதலில் பௌதீகக் குப்பைகளை இங்கு நோக்குவோம்.
நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் உபயோகிக்கப்படாத அல்லது உபயோகத்துக்குத் தகாத பொருட்கள், உடைந்த தளபாடங்கள், வாசிக்க முடியாத நூல்கள், பழுதடைந்த இலத்திரனியல் உபகரணங்கள் என பல பொருட்கள் நிறைந்திருக்கும்.
நமக்கு அவை என்றாவது அவசியப்படலாம் என்ற எண்ணத்தில், அல்லது நாம் மதிக்கின்ற அல்லது நேசிக்கின்ற ஒருவர் சிறிது காலத்துக்கு முன்னர் அவற்றை வைத்திருந்த காரணத்தினால் அவற்றை நாம் சேகரித்து வைக்கிறோம். எந்தக் காரணமும் இல்லாமல்கூட அவற்றை நாம் சிலபோது வைத்திருக்கிறோம்.
இறுதியில் இவையனைத்தும் நமது இடத்தை நிரப்பி நமது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றை விடச் சிறந்த பொருட்களைப் புதிதாக வாங்க விடாமலும் தடுக்கின்றன. அவற்றைப் பழுது பார்க்கும் பயனற்ற முயற்சியில் நமது நேரமும் சக்தியும் அதிகம் விரயமாகி விடுகின்றன.
இவ்வாறான குப்பைகளை அகற்றிவிடுவதே இப்பிரச்சினைகளுக்கான மிகச் சரியான தீர்வாகும். வீட்டின் ஏதாவதோர் இடத்திலிருந்து அதனை நீங்கள் ஆரம்பிக்க முடியும். இதன் போது பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
"இப்பொருளை நான் கடைசியாக எப்போது பயன்படுத்தினேன்?"
"இனி எப்போது அதனைப் பயன்படுத்துவேன்?"
ஆகிய இரு கேள்விகளையும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
"கடந்த ஒரு வருட காலமாக அதனை நான் பயன்படுத்தவில்லை அடுத்து வரும் ஒரு வருடத்தில் எப்போது அதனைப் பயன்படுத்துவேன் என்றும் எனக்குத் தெரியாது" என்பதுதான் நமது பதிலாக இருக்குமானால் பெரும்பாலும் அது நமக்குத் தேவையற்ற பொருளாகவே இருக்கும். அப்படித்தான் அது எப்போதாவது தேவைப்படுவதாக இருந்தாலும் உரிய வேளை வரும்போது அதனை எங்கே வைத்தோம் என்பது மறந்து போயிருக்கும். இறுதியில், புதிதாக ஒன்றை வாங்கும் முடிவுக்கே நாம் வந்து சேருவோம்.
ஒரு பொருளை நாம் குப்பைகளின் பட்டியலில் சேர்த்து விட்டால் அதன் பிறகு அதனை அழிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்த முடியுமான எவருக்காவது கொடுத்து விடவோ முடியும். பயன்படுத்தக் கூடிய எவரும் நமது சிந்தனைக்குத் தட்டுப்படவில்லையெனில், நிச்சயமாக அது குப்பைக்குச் சேரவேண்டிய பொருள்தான் என்பது உறுதியாகிவிடும்.
இவ்வாறு நம்மிடம் சேர்ந்திருக்கும் பொருட்களை அகற்றுதல் என்பது சற்று வேதனையானதுதான். ஆயினும் வெற்றியடைய நீங்கள் விரும்பினால் அது தவிர்க்க முடியாதது. உடலில் வளரும் புற்றுநோய்க் கூறொன்றை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதைப் போன்றதே இது. சத்திர சிகிச்சை வேதனைக்குரியது. ஆனாலும் அதனால் ஏற்படும் பயன் அந்த வேதனையை விட மிக அதிகமானது.
அதேவேளை, இங்கு நாம் நமது இயல்பறிவை (common sense) பாவிக்க மறந்து விடக்கூடாது. அந்தவகையில், சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவமும் சட்டப்பெறுமானமும் கொண்ட பொருட்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
செயற்பாட்டுக் குப்பை:
செயற்பாடு சார்ந்த குப்பையை அகற்றுவது ஓரளவு கடினமானது. ஏனெனில் அது நமக்கு நாமே விடும் சவால்.
உங்களிடம் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்ற செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அத்தோடு பின்வரும் வினாக்களை நுணுக்கமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் எழுப்புங்கள்:
* குறித்த செயற்பாடு அடிப்படையில் தேவையானதுதானா?
* தேவையானதாயின் அதற்காக நான் செலவிடும் நேரத்தின் அளவு சரியானதா?
* அவ்வாறெனில், குறித்த செயற்பாட்டின் அதேவிளைவைப் பெறுவதற்கு அல்லது அச்செயற்பாட்டை இன்னும் சிறப்பாக மேற்கொள்வதற்கு வேறு வழிகள் உள்ளனவா?
இப்பயிற்சியை நீங்கள் செய்து பார்த்தால், உங்களது பல செயற்பாடுகளும் நடத்தைகளும் மிகக் குறைந்தளவே உங்களுக்குப் பயன் தருவதையும், அவை உடனடியாகக் கைவிடத்தக்கவை என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.
ஆனால், ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
பௌதீகக் குப்பைகளை அகற்றிய பிறகு இடத்தைக் காலியாக வைத்திருக்க முடிவது போன்று செயற்பாடு சார்ந்த குப்பைகளை அகற்றி விட்டு அவை பிடித்துக் கொண்டிருந்த நேரத்தை வெறுமையாக வைத்திருக்க முடியாது. ஏனெனில் ‘நேரம்’ விரைவிலேயே தானாக நிரம்பிக் கொள்ளக் கூடியது.
அந்தவகையில், கைவிடப்படும் செயற்பாட்டுக்குப் பதிலாக அதனை விடப் பயன் கூடிய ஆக்கபூர்வமான மற்றொரு செயற்பாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
நடத்தை சார்ந்த குப்பையை அகற்றுவதற்கு மிகச் சிறந்த வழி, உங்களுக்கென்று விரிவான செயல்திட்டமொன்று காணப்படுவதும், முடிந்த வரை அத்திட்டத்திலிருந்து பிசகாமல் செயற்படுவதுமே.
உணர்ச்சிக் குப்பை:
உணர்ச்சிக் குப்பை என்பது கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் பெற்ற மோசமான அனுபவங்களின் படிவுகளாகும். தொடர்ச்சியாக உங்களை நெருக்கடியில் ஆழ்த்தக்கூடிய சிந்தனைகள் உங்களிடம் காணப்படலாம்.
எவராவது உங்களை இழிவுபடுத்தி அதற்குத்தக்க பதில் தர உங்களால் முடியாது போயிருக்கலாம். ஒருவரது ரகசியங்களை அம்பலப்படுத்தியதற்காக இப்போது நீங்கள் வருந்தலாம். உண்மையாகவே நேசித்த ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
இத்தகைய சிந்தனைகளால் உருவாகும் உணர்ச்சிகள் (emotions) அடிக்கடி மேலெழுந்து உங்களை அலைக்கழிக்க முடியும், அசௌகரியத்துக்கு உள்ளாக்கி உங்கள் தூக்கத்தைக் கெடுக்க முடியும். குறித்த பிரச்சினை தொடர்பாக என்ன செய்திருக்கலாம் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என தொடர்ந்து நீங்கள் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
இந்த எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு அவற்றை நமது உள்ளத்திலிருந்து தூக்கி வீசி விடுவதுதான்.
கடந்த காலம் திரும்பி வரப் போவதில்லை. வரலாற்றை மீள எழுதவும் வழியில்லை.
எனவே, இன்றையப் பொழுதில் கவனத்தைக் குவித்து நாளைக்காகத் தயாராகுங்கள்.
"அல்லாஹ்வின் உண்மையான நேசர்கள் (எதிர் காலம் குறித்து) அஞ்சுவதுமில்லை. (கடந்த காலம் குறித்து) வருந்துவதுமில்லை." (பகறா: 277)
உணர்ச்சி சார்ந்த குப்பைகளை அகற்றி விடுதல் என்பது ஈமானின் அடையாளம், சுவனத்துக்கான வழி.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை சுவனவாசிகளுள் ஒருவராக தோழர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டினார்கள். அப்படி அந்த மனிதரிடம் என்ன நற்செயல்கள் குவிந்திருக்கின்றன என்று அறிய ஆவல் கொண்ட அப்துல்லாஹ் பின் அம்ரிப்னுல் ஆஸ் (றழி) அவரது வீட்டுக்குச் சென்று மூன்று நாட்கள் விருந்தாளியாகத் தங்கினார். எனினும் வழக்கத்துக்கு மாறான எதுவும் அம்மனிதரிடம் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. இறுதியில், அவர் ஏதாவது ரகசியமான இபாதாவில் ஈடுபட்டு வருகிறாரா என்று அவரிடமே விசாரித்தறிய வேண்டிய நிர்ப்பந்தம் அப்துல்லாஹ் (றழி) க்கு ஏற்பட்டுவிட்டது. அதற்கு அம்மனிதர், "அப்படி விஷேடமான எதுவும் என்னிடமில்லை. ஆனால் தினமும் நான் எல்லா விதமான கெட்ட எண்ணங்களையும், பிற மனிதர்கள் மீதான காழ்ப்புணர்வுகளையும் விட்டு எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றேன்" எனப் பதிலளித்தார். (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்,ஆதாரம்: அஹ்மத்)
உணர்ச்சி சார்ந்த குப்பைகளை அகற்றி விடுவதற்காக வழங்கப்படும் வெகுமதி எவ்வளவு அற்புதமானது பார்த்தீர்களா!
சிந்தனைக் குப்பை:
சரியானவை என நீங்கள் திடமாக நம்புகின்ற தகவல்கள், சிந்தனைகள், அபிப்பிராயங்கள்,கருத்துகள், பிறர் பற்றிய மனப்பதிவுகள் என்பவற்றையே இது குறிக்கிறது. உங்களுக்குள் ஆழப்பதிந்திருக்கும் இவ்வம்சங்கள் அவற்றுக்கு மாற்றமான புதிய அம்சங்களை ஏற்கவிடாமல் உங்கள் மூளைக்கு முட்டுக்கட்டை இடுகின்றன. நிச்சயமாக இவற்றை இனங்காண்பதும்,வேண்டாதவற்றை விலக்குவதும் சிரமமானது. ஏனெனில் இவை நமக்குள் மறைந்திருக்கின்றன. மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளும் போதுதான் இவை வெளியே வருகின்றன.
‘உண்மை’ என்பதற்கான வரைவிலக்கணம் குறித்து நமது சிந்தனையில் புரட்சிகரமான மாற்றமொன்றைக் கொண்டு வருவதனூடாகவே இத்தகைய குப்பைகளை இனங்காணவும் அகற்றவும் முடியும்.
மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞரான இமாம் ஷாஃபிஈ (றஹ்) தனது நிலைப்பாடுகள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
"எனது அபிப்பிராயம் சரியானது. சில வேளை, அது தவறாகவும் இருக்கலாம். பிறரது அபிப்பிராயம் தவறானது. சிலவேளை, அது சரியாகவும் இருக்கலாம்."
அல்லாஹ்வைத் தவிர இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை. அல்லாஹ் கூறியிருக்கும் உண்மைகளைத்தவிர வேறெதுவும் நிரந்தரமான விஞ்ஞான உண்மையுமில்லை.
எனவே, அறிவு விடயத்தில் உங்கள் சிந்தனையை எப்போதும் திறந்து வையுங்கள். அந்த அறிவு விஞ்ஞான உண்மை என்ற பெயரில் நீங்கள் பெற்றிருக்கும் அறிவாகவும் இருக்கலாம். பிறர் பற்றிய அபிப்பிராயங்களாகவும் இருக்கலாம்.
இலத்திரனியல் குப்பை:
இலத்திரனியல் உபகரணங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்கள் தமது செயற்பாடுகளை பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள விரும்புவதாயின் இக்குப்பையை அகற்றுவது கட்டாயமானது.
நம்மில் எத்தனையோ பேர் வாசிக்கப்படாத ஈ-மெயில்களால் நிரம்பிய in-box வைத்திருக்கிறோம். மேலதிக வாசிப்புக்காக சேமித்து (saved) வைக்கப்பட்ட, ஆனால் என்றுமே வாசிக் கப்படாத ஆவணங்களை (documents) வைத்திருக்கிறோம். ஒருமுறையேனும் பார்க்கப்படாத புகைப்படங்கள்,பதிவு நாடாக்கள், இறுவட்டுகள் (CDs), குறுந்தகவல்கள் (sms), எவரென நினைவுக்கு வராத நபர்களது தொலைபேசி எண்களால் நிறைந்த இலத்திரனியல் கையேடுகள் என ஒரு பட்டியலை அடுக்கிச் செல்ல முடியும்.
பிற வகையான குப்பைகள் தொடர்பாக நாம் மேலே குறிப்பிட்ட விடயங்கள் இங்கேயும் பொருந்தும்.
முடிவுரை:
அனைத்துக்கும் மேலாக, மறுமையில் நமக்காகத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அம்சங்களோடு ஒப்பிட்டால் இந்த உலகமும் ஒரு குப்பைதான்.
இவ்வுலகில் காணப்படுகின்ற மிக முக்கியமான பொருட்கள் கூட, அல்லாஹ்வுக்கு அஞ்சி மறுமைக்காகத் தயாராகும் மனிதனுக்கு வெறும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவைதான். (அன்ஆம்:32) அப்படியிருக்கும்போது உலகத்திலேயே குப்பையாகக் கருதப்படும் பொருட்களுக்கு என்ன பெறுமானம் இருக்கப் போகிறது?
எனவே அவற்றை அகற்றி விடுவதுதான் சாலப் பொருத்தமானது.
இத்தகைய குப்பைகளற்ற வாழ்வே நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, தாக்கம் நிறைந்த, வெற்றி கரமான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக இருக்கும்.
ஒரு முஸ்லிமிடம் வேண்டப்படும் வாழ்வும் அதுதான்.
நன்றி:மீள்பார்வை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்