Breaking News
recent

இந்தியாவில் இஸ்லாம்12,தோப்பில் முஹம்மது மீரான்


9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.
“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்தவரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் – ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு – கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பக்கம் 70)
“துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். “மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்” என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.
அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, ‘மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்’ என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)
சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.
சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் – பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, ‘மாத்தியமம்’ மலையாளம் ஆண்டு மலர் – 1988 பக்.62)
இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் – நவம்பர், 18 – 24, 2005
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.