மீள்பதிவு http://adiraipost.blogspot.in/2009/10/blog-post_15.html
உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கருத்தியல் யுத்தம் தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 'மக்கள் உரிமை'' சார்பில் நடிகர் கமலஹாசனை சந்தித்து இந்த படம் பற்றிய கண்டனத்தை தெரிவிக்க நாடினோம்.
இதற்காக கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரான திரைப்பட இயக்குநர் அமீரிடம் நமது கண்டனத்தைக் கூறி கமல்ஹாசனிடம் தெரிவிக்கக் கூறினோம். அதற்கவர் கமல்ஹாசன் இந்துத்வா சிந்தனை கொண்டவரில்லை. நீங்களே அவரை சந்தித்து விவாதியுங்கள் என்று கூறி கமல்ஹாசனுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் 09.10.2009 அன்று திரைப்பட விருது நிகழ்ச்சி, முதலமைச்சருடன் சந்திப்பு, மாலை அமெரிக்க பயணம், எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த நிலையிலும், நமக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒதுக்கித்தந்தார் கமல். வழக்குரைஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் ஜி.அத்தேஷுடன் 'முஸ்லிம் சமுதாயத்தின் மீதான ஊடக வன்முறை, உன்னைப் போல் ஒருவன் படம் தந்துள்ள பாதிப்பு'' ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...
கேள்வி: உள்நாட்டு அளவிலும், உலகளாவிய அளவிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாக வும், அமைதியைக் குலைப்பவர்களாகவும் சித்தரிக்கும் மதவாத செயல்கள் முழுவீச் சில் நடந்து வருகின்றன. திரைப்படத் துறையில் ஒரு மேதையாகவும், நியாய வானாகவும் அறியப்படுகின்ற நீங்கள் இந்த அநீதிக்குத்துணை போகலாமா?
கமல் : உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் முஸ்லிம்களை கொச்சைப் படுத்துவதோ, பயங்கரவாதத்தோடு அவர்களை மட்டும் சம்பந்தப்படுத்துவதோ என் உள்நோக்கம் அல்ல. நான் யாருக் கும் எதிரானவன் அல்ல. குறிப்பாக முஸ்லிம்களுக்கு நான் எதிரி அல்ல என்பதை என்னோடு பழகியவர்கள் அறிவார்கள்.
''வெட்னஸ் டே'' என்ற வெற்றிப்படத்தை தமிழில் தயாரித்தால் பெரும் வெற்றிபெறும் என்று என்னை அணுகினார்கள்.
வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் நஸ்ரூதீன் முஸ்லிம் என்பதாலும், ஆரிஃப் என்ற ஒரு நல்ல முஸ்லிம் அதிகாரி காட்டப்படுவதாலும், இந்திப்பட உலகில் இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை.
நான், ஆரிஃப் என்ற பாத்திரத்தை நல்லவராகக் காட்டுவது மட்டும் போதாது என்று மேலும் பல மாற்றங்களைச் செய்தேன். அதற்குப் பிறகும் கூட இது முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறுவது ஆச்சர்யம்தான்.
நான் 'ஹேராம்' படம் எடுத்தபோது முஸ்லிம்களின் தரப்பைக் கூறுவதற்கு ஏகப்பட்ட இடங்களைத் திட்டமிட்டு உருவாக்கினேன். திரைப்பட வர்த்தகர்கள் ஹேராமில் எத்தனைப் பாட்டு, எத்தனை சண்டை? என்று கேட்டபோது, காந்தியை இந்துத்துவ தீவிரவாதி சுட்டுக்கொல்வது தான் உச்சக்கட்ட சண்டை என்றேன்.
'ஹேராம்' முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்றார்கள் சிலர். ஆனால் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம். மறக்கடிக்கப்பட்ட மாபெரும் போராளியான யூசுப்கானின் வரலாற்றை 'மருதநாயகம்' என்ற பெயரில் படமாக எடுக்கத் துணிந்தவனும் நான்தான். முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது என் நோக்கமல்ல.
கேள்வி : நீங்கள் முஸ்லிம்களுக்கு இணக்கமானவர்தான். ஆனால் உங்கள் படம் காயப்படுத்தும் வகையில் தானே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டுவைப்பது போல் கூறியிருக்கிறீர்கள் இப்படி வரலாற்றைத் திரிப்பதால்தானே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. 2002ல் நடந்த சம்பவம் 1998ல் நடந்த சம்பவத்துக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?
கமல்: வரலாறு முன்பின்னாகத் திரிவடைந்து மொத்தமாகவே குழப்பி இருக்கிறது. நடந்ததை மட்டும் சொல்வது தான் வரலாறு. நடந்த சம்வத்தின் மீது தன் கருத்தையும், பார்வையையும் கூறுவது வரலாற்றாசிரியனின் வேலை அல்ல. அதனால் ஹிந்தியில் இதிலிஹாஸ் (இவ்வாறு நடந்தது) என்று குறிப்பிடுகிறார்கள்.
நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.
முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.
கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.
கமல் : நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார் கள். பிரசவத்திற்காக கோசலை படுத்தி ருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.
தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.
கேள்வி : அப்போது பிரதமர் நரசிம்மராவைக்கூட சந்தித்தீர்களே?
கமல் : பம்பாய் கலவரத்தின் (1993) கொடுமைகளை நேரில் பார்த்து என்னால் மனம்தாள முடியாமல் அங்கேயே அழுது விட்டேன். உடனே சென்று திரைப்படப் பிரமுகர்களுடன் பிரதமர் நரசிம்மராவை சந்தித்தேன். நடந்த சம்பவங்கள் குறித்துக் கேட்டேன். மஹா ஆரத்தி பற்றி எதுவுமே தெரியாது என்றார். என்னுடன் வந்த நண்பர் இதைக்கேட்டு கேலியாக சிரித்து விட்டார் (அவர் முஸ்லிம் நண்பர்) இதனால் அவருக்கு கொஞ்சம் கோபம்.
கலவரங்களின் போது மகாத்மா காந்தி வீதியில் இறங்கி நடந்துள்ளார். வாருங்கள், நாங்கள் உங்களோடு வருகிறோம். பம்பாய் வீதிகளில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம் என்றேன்.
அது எனக்குப் பாதுகாப்பானதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்றார்.
பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? என்றேன்.
சற்று கோபமாக முறைத்த நரசிம்மராவ் நினைத்த உடன் கிளம்புவதற்கு இது ஒன்றும் சினிமா 'ஷுட்டிங் இல்லை என்றார். நீங்கள் நினைப்பது போன்ற தல்ல சினிமா 'ஷுட்டிங். அதற்கும் ஏராளமான முன் திட்டங்கள் வேண்டும். மக்களைச் சந்திப்பதற்காக எங்களுடன் வரமுடியுமா? என்றேன்.
நிலைமையின் வளர்ச்சியைப் பார்த்து முடிவு செய்யலாம்'' என்றார்.
உடனே நான் இந்த நிலைமை மேலும் வளர அனுமதிக்கப் போகிறீர்களா?'' என்றேன்.
உடனே கோபமான அவர், எனக்கு நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறீர்களா?
Do you teach me english? என்றார். வேறெதுவும் கேட்க வேண்டுமா? என்று வேறுபக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.
பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு வெளியேறினோம். அப்போது ஆனந்த விகடன் இதழில் இச்சம்பவம் விரிவாக வந்திருந்தது.
கேள்வி : மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்தக் கலவரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அந்தப் படமும் முஸ்லிம்களை வன்முறையாளர் களாகத்தானே சித்தரித்தது?
கமல்: இதை நான் அப்போதே எதிர்த்தேன்.
(முஸ்லிம்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாக சித்தரிப்பது தவறானது மணிரத்னத்தின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பம்பாய் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்) இவ்வளவுக்கும் மணிரத்னம் எனது உறவுக்காரர். அவருக்கு எங்கள் பெண் ணைக் (மணிரத்தினம் மனைவி சுஹாசினி கமலின் அண்ணன் மகள்) கொடுத்திருக்கிறோம். அவர் எனக்கு மாப்பிள்ளை முறை, ஆனாலும் கூட நியாயத்தை நான் கூறினேன். அவரது படத்தின் விளைவாக எதாவது விபரீதம் நடந்திருந்தால், எங்கள் பெண்ணுக்குதானே பாதிப்பு...
கேள்வி : செப்-11, 2001 சம்பவத்திற்குப் பிறகு (அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தகர்ப்பு) ரஹழ் ர்ய் பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது உலகளாவிய அளவில் ஒடுக்கு முறை ஏவப்பட்டுள்ளது. நம் நாட்டில் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப்பிறகு வளர்ந்தோங்கிய மதவாதத் தால் பாதிக்கப்படுவர்களும் முஸ்லிம்கள்தான்.
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற கருத்து பரப்பப் படுகிறது. ஊடகங்களிலும் வலுவான குரலற்ற (Voiceless Community) சமுதாயமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சினிமா போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் மேலும் ஒடுக்குவது சரியா?
கேள்வி : பயங்கரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்?
கேள்வி : உன்னைப் போல் ஒருவன் உருவாக்கிய காயத்தை எப்படி ஆற்றப் போகிறீர்கள்?
போன்ற கேள்விகளுக்கு கமலின் பதில்கள் தொடரும்........
இன்ஷாஅல்லாஹ்.
நன்றி:'மக்கள் உரிமை''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்