சமூகத்தில் அவ்வப்போது சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தாம் ஏதோவொரு உதிப்பையோ ஞானத்தையோ கராமத்தையோ பெற்றதாக மக்களை நம்பவைக்கிறார்கள். அவ்வாறு தாம் பெற்றுள்ளதை பிறர் நம்பும் வகையிலான கதைகள்﹐ சம்பவங்கள் போன்றவற்றையும் கூறுகிறார்கள்.
இத்தகைய கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் குர்ஆன்﹐ ஸுன்னாவுக்கு இல்லாத மரியாதையும் மதிப்பும் மக்களிடம் கிடைத்து விடுகின்றது. அதன் பின்னர் இவர்கள் கூறுவதெல்லாம் மக்களிடம் மார்க்கமாகி விடுகின்றன. இனி அவர்களைப் பின்பற்றவென ஒரு கூட்டமும் உருவாகி விடுகின்றது. நாளடைவில் இவ்வாறானவர்கள் பெரும் மகான்களாக மாறிவிடுகின்றனர். அவர்களது பேச்சை மறுத்துப் பேச யாரும் துணிவதில்லை. அவர்கள் சொன்னவை வேத வாக்குகளாகி விடுகின்றன. அவர்கள் தடுத்தவை மீறக்கூடாத வரம்புகளாகி விடுகின்றன. அவற்றுக்கும் குர்ஆன்﹐ஸுன்னாவிற்கும் எத்துணை இடைவெளி அல்லது முரண்பாடுகள் இருந்தபோதிலும் சரியே.
பொதுவாக இவ்வாறுதான் மதங்களின் பெயரால் தங்களைச் சூழ ஒரு மதிப்புத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு மகான்களாகவும் சாமியார்களாகவும் பக்தர்களாகவும் மக்கள் மத்தியில் சிலர் இடம்பிடித்து விடுகின்றனர். அவர்களது திறமைகளுக்கும் கைவரிசைகளுக்குமேற்ப சிலர் நீண்டகாலம் தங்கள் மீதுள்ள மதிப்புத் தோற்றத்தைப் பாதுகாத்துவருகின்றனர். சாணக்கியம் குறைந்தவர்கள் அந்த மதிப்புத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடம் புரண்டு தங்களது போலி முகத்தை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் நீண்ட காலம் நின்றுபிடித்தார்களோ இல்லையோ. இத்தகையவர்களால் காலத்துக்குக் காலம் மக்கள் கூட்டமொன்று தவறான வழியில் சென்று விடுகின்றது. அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் முன்னரே அவர்கள் வெகுதூரம் சென்று விடுகின்றனர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய உதாரணம் இந்த உண்மைக்கு சாலப் பொருந்துவதாக உள்ளது.
விளக்கில் முட்டி நெருப்பில் கரிந்து சாவைத் தழுவும் வீட்டில் பூச்சிகள்தான் அந்த உதாரணம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். ''நான் முடியுமானவரை அந்த விட்டில்களைத் தடுக்கிறேன். எனினும்﹐ அவைகள் என்னையும் மீறி நெருப்பில் மோதி அழிந்து விடுகின்றன.
இத்தகைய போலி பக்தர்கள் உருவாவதற்கு என்ன காரணம்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் கூறுவதெல்லாம் உண்மையா?
இவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணத்தை ஆரம்பித்தவர்கள்தாம். இவர்கள் பற்றிய மக்கள் அபிப்பிராயமும் ஆரம்பத்தில் நல்லதாகவே இருந்திருக்கும். மக்கள் நம்பும் நல்ல மனிதர்கள்தாம் பின்னர் மக்களைத் தவறான திசையில் வழிநடத்தி விடுகிறார்கள் என்பது எத்துனை கொடுமை. இது மக்களுக்கும் புரிவதில்லை. மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட மனமில்லை.
சமூகத்தைப் பிழையான திசையில் வழிநடத்துகின்ற இத்தகையவர்கள் எங்கோ ஓரிடத்தில் நெறி பிறழ ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் நெறிபிறழ்ந்த இடம்﹐ நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு அதிசயமான சம்பவமாக இருக்கலாம். அல்லது ஒரு உதிப்பு﹐ ஞானம்﹐ விசித்திரம் என ஏதொவொன்றாக இருக்கலாம் இவ்வாறு ஏதோவொன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற்றவுடன் அவர்கள் ஏனைய மனிதர்களைவிட தங்களுக்குள் ஏதோவொரு விஷேடம் இருப்பதாக உணர ஆரம்பிக்கின்றனர். நடைபெற்ற அதிசயத்தை அடிப்படையாகக் கொண்டு தங்களைச் சூழ ஒரு மதிப்புத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறானதொரு சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வைத் தரிசிக்கச் சென்றிருந்தவேளை சாமிரி என்பவன் ஒரு காளைக் கன்றை உருவாக்கி அதனை வணங்குமாறு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகத்தைப் பணித்தான். அவர்களும் அதனை வணங்கினார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் திரும்பி வந்து அது பற்றி சாமிரியிடம் கேட்டபோது அவன் அளித்த பதில் இந்த உண்மையை உணர்த்துவதாக உள்ளது:
''இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன். தூதர் (ஜிப்ரில்) இன் காலடியில் இருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை (காளைக் கன்றை செய்வதற்காக தயார்செய்திருந்த பதார்த்தங்களில்) எறிந்தேன். இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.''
பின்னர் சாமிரி காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாரும் ஒரு காளைக் கன்றின் சிலையை அசச்சமூகத்திற்குச் செய்து கொடுத்தான். அவர்கள் அதனை வணங்கினார்கள்.
இந்த சம்பவத்தை அல்குர்ஆனில் முழுமையாக படித்துப் பார்க்கும்போது தங்கத்தால் ஒரு காளைக்கன்றை சாமிரி செய்துள்ளான். அது ஓசை எழுப்பும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வந்து போன வேளையில் அவரது காலடி மண்ணின் ஒரு பிடியை எடுத்து அதனையும் அந்த சிலை செய்வதற்குத் தயாராக இருந்த பதார்த்தங்களுடன் அவன் சேர்த்துள்ளான். இது அவனுக்குள் ஏற்பட்ட ஒரு உதிப்பாகும். அந்த உதிப்பைப் பயன்படுத்தி சாமிரி அந்த சமூகத்தின் ஹீரோவாக மாற முயற்சி செய்துள்ளான் என்றே தெரிகிறது.
சாமிரியின் வாழ்க்கையில் நடந்த இந்த அபூர்வ சம்பவத்தை (அதாவது ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வந்து சென்றதை அவதானிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை) அவன் தனக்குக் கிடைத்த ஓர் அருளாகக் கருதி அத்தோடு அதனை விட்டிருக்கலாம். எனினும்﹐ அவன் அந்த சந்தர்ப்பத்தை விடவில்லை. அதனைப் பயன்படுத்தி தன்னை ஒரு பெரிய மனிதனாக மாற்ற அவன் முயற்சி செய்துள்ளான். சமூகத்தையும் வழிதவறச் செய்தான்.
இவ்வாறுதான் திடீரென ஏற்படும் ஓர் உதிப்பு அல்லது கண்ட கனவு அல்லது வாழ்வில் நடைபெற்ற ஓர் அதிசய சம்பவம் அல்லது தன்னிடமிருக்கும் வித்தியாசமானதோர் ஆற்றல் போன்றவற்றைப் பயன்படுத்தி சிலர் அவ்வப்போது ஹீரோவாக முயற்சிக்கின்றர். சமூகத்தையும் வழிதவறச் செய்கின்றனர்.
இத்தகையவர்கள் என்ன? இவர்கள் சென்று பிச்சை கேட்குமளவு அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டுபவர்கள் உலகில் வந்தாலும்கூட நேர்வழி என்பது வேறு﹐ இவர்கள் சொல்வதும் செய்வதும் வேறு. இரண்டிற்கும் சம்பந்தமுள்ளதா இல்லையா? என்பதை அளந்து பார்ப்பதற்குத் தனியான அளவுகோள் இஸ்லாத்தில் வேறு இருக்கிறது. அந்த அளவுகோளைத் தெளிவுபடுத்தும் ஒரு சம்பவம் அறிவுமேதை இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது வாழ்க்கையில் நடைபெற்றது.
அன்னார் தனது தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்த ஒரு வேளையில் திடீரென வானில் ஒரு பிரகாசம் தோன்றியது. அதனைத் தொடர்ந்து ஓர் அசரீரியும் கேட்டது. 'அப்துல் காதிரே! இன்று முதல் ஷரீஆ வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கடமைப்பாட்டிலிருந்து உமக்கு விடுதலை கிடைத்து விட்டது. நீர் இன்று முதல் சுதந்திரமாக வாழலாம் எனினும் வழிதவற மாட்டீர்.''
இதனைச் செவிமடுத்த இமாமவர்கள்﹐ உடனே ''எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்''என்று கூறினார்கள்.
சூழவிருந்தவர்கள் ''ஏன் அவ்வாறு கூறினீர்கள்?'' என ஆச்சரியமாகக் கேட்டார்கள். அதற்கு இமாமவர்கள் ''நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கே அல்லாஹ் ஷரீஆ வரம்புகளுக்கேற்ப வாழும் கடமைப்பாட்டிலிருந்து விடுதலை அளிக்கவில்லை. நான் எம்மாத்திரம். இது ஷைத்தானின் சூழ்ச்சியே தவிர வேறில்லை என்று கூறினார்கள்.''
மீண்டும் இமாமவர்களிடம் வந்த ஷைத்தான் இப்படிக் கூறினான்.''இமாமவர்களே! நான் எத்தனையோ மேதைகளை இவ்வாறு வழிதவறச் செய்துள்ளேன். எனினும்﹐ உங்களது பேரறிவு உங்களைப் பாதுகாத்து விட்டது.''
இதனைச் செவிமடுத்த இமாமவர்கள்﹐ மீண்டும் ''எடுத்ததெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.'' என்றார்கள். அப்போது சூழவிருந்தவர்கள் ''ஷைத்தான் கூறியது உண்மைதானே'' என்றார்கள். அதற்கு இமாமவர்கள்﹐ ''அல்லாஹ்தான் என்னைப் பாதுகாத்தான். எனினும்﹐ ஷைத்தான் எனது அறிவு என்னைப் பாதுகாத்ததாகக் கூறி எனக்குள் மமதையை உருவாக்கப் பார்த்தான்'' என்றார்கள்.
இந்த சம்பவம் கற்றுத்தரும் பாடமென்ன? பிறரது வாழ்வில் நடைபெறாத ஓர் அதிசய சம்பவம் இமாமவர்களின் வாழ்வில் நடைபெற்றது. அதனைப் பயன்படுத்தி இமாமவர்கள் ஹீரோவாகுவதற்கும் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு முற்படவில்லை. மாறாக﹐ அல்லாஹ்வின் நேரிய பாதையில் தனது பாதத்தை அவர்கள் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள். உண்மையில் இமாமவர்கள் பெற்றிருந்த அல்லாஹ்வின் மார்க்கம் பற்றிய தெளிவான விளக்கம் அவர்களுக்கு நேர்வழியையும் தவறான வழியையும் பிரித்துக் காட்டியது. இருப்பினும்﹐ அந்த அறிவால் தனக்கு மமதை வந்து விடக்கூடாது என்பதிலும் அன்னார் கவனமாக இருந்தார்கள். ஷைத்தானின் இழுவைக்கு அவர்கள் ஆட்பட்டுவிடவில்லை.
ஷைத்தான் தனது சதிவலையை விபரிதமாக விரித்து வைத்திருப்பான். பார்ப்பவர்களுக்கு அது ஒரு தெய்வீக அருள் போன்று காட்சி தரும். உடனே அவர்கள் மயங்கி விடுவார்கள். அதனால்﹐ மதி மயக்கம் ஏற்பட்டவர்கள் தாங்களும் கெட்டு சமூகத்தையும் பிழையாக வழிநடத்துவார்கள். இது எல்லாக் காலமும் நடைபெற்றுவருகின்ற அவலமாகும். இதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள ஒவ்வொருவரும் எச்சரிக்கையுணர்வோடு செயல்பட வேண்டும். இந்த எச்சரிக்கையுணர்வை இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கும்போது இப்படிச் சொன்னார்கள்.
''ஒரு மனிதன் உங்களது கண்களின் முன்னால் ஆகாயத்தில் மிதந்து வருகிறான் அல்லது சமுத்திரத்தின் மேற்பரப்பில் நடந்து வருகிறான். அல்லது ஒரு நெருப்புக் குண்டத்தில் நுழைந்து மறு பக்கமாக வெளியேறுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய காட்சிகளை நீங்கள் நேரடியாகக் கண்டபோதிலும்கூட அவர்கள் கூறும் கருத்துக்களையும் போதிக்கும் போதனைகளையும் நம்பிவிடாதீர்கள். அவற்றை அல்லாஹ்வின் மார்க்கத்தோடும் குர்ஆன்﹐ ஸுன்னாவோடும் உரசிப் பாருங்கள். பொருந்தினால் ஏற்றுக் கொள்ளுங்கள். பொருந்தாது போனால் அவர்களின் பின்னே சென்றுவிடாதீர்கள்.'
ஆக﹐ அதிசயங்கள்﹐ அற்புதங்கள் வழமைக்கு மாற்றமான சம்பவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறலாம். அவ்வாறு நடைபெறுவதற்கும் அவர் சொல்லும் உபதேசங்களுக்கும் தொடர்பிருப்பதாக யாரும் நம்பிவிடலாகாது. உபதேசங்கள் குர்ஆன்﹐ ஸுன்னாவிலிருந்து பெறப்பட்டவையாக இருப்பின் மாத்திரமே அவற்றுக்குக் காது கொடுக்க வேண்டும். அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய காரணத்தால் உபதேசங்களுக்குக் காது கொடுப்பது பெரும் தவறில் கொண்டு சேர்த்துவிடும். இதற்குத்தான் மார்க்கம் பற்றிய தெளிவோடும் விளக்கத்தோடும் ஒரு முஸ்லிம் வழ வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
உலகின் அந்திம காலத்தில் ஒன்றைக் கண்ணன் தஜ்ஜால் வருவான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அவன் மக்களை அழைப்பது உபதேசங்களால் அல்ல மாறாக﹐ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியே தன்பின்னால் வருமாறு அவன் மக்களை அழைப்பான். உலகில் அவன் வரை வாழ்ந்து அற்புதங்கள் செய்து காட்டியவர்கள் அனைவரும் அவனிடம் வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டுவது எப்படி? என்ற வித்தையைக் கற்க வேண்டியிருக்கும். அந்த அளவு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவான் தஜ்ஜால்.
பல வருடங்கள் தொடர்ச்சியாக வரட்சியால் பாதிக்கபட்ட பூமிக்கு மழையைப் பொழிவிப்பான். அந்தப் பிரதேசம் உடனே செழிப்படைந்து பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும். இறந்தவர்களை உயிர்ப்பித்து பிரிந்தவர்களின் கவலையைப் போக்குவான் அவர்கள் தமது காலடியில் தெய்வம் வந்து நிற்பதாக எண்ணி அவனை சிரம்பணிந்து வணங்குவார்கள். வறியவர்களுக்கு வாரி வாரி செல்வத்தை வழங்குவான். நோய்களைக் குணப்படுத்துவான். இவ்வாறு அவன் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்களை வரிசைப்படுத்திய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் நம்பி தஜ்ஜாலை நிராகரிக்கும் ஓர் இறைவிசுவாசியோடு தஜ்ஜால் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதை விளக்கினார்கள்.
ஓர் இறைவிசுவாசியைப் பார்த்து தஜ்ஜால் கூறுவான்:
''உனது இரட்சகன் நான்தான். நீ என்னை ஏற்றுக் கொள்'' அதற்கு அந்த இறைவிசுவாசி ''இல்லை நீதான் தஜ்ஜால் நான் உன்னை நிராகரிக்கிறேன்''என்று கூறுவான். அப்போது தஜ்ஜால் ''உன்னை உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் நான்தான்'' என்று கூறி அந்த இறைவிசுவாசியைக் கொலை செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான். பின்னர் கேட்பான். ''இப்போது என்ன சொல்கிறாய்?'' அதற்கு அந்த இறைவிசுவாசி ''இப்போது நான் முன்பை விட உறுதியாகச் சொல்கிறேன். நீதான் தஜ்ஜால்'' என்று கூறுவான். இதனைக் கேட்ட தஜ்ஜால் அந்த இறைவிசுவாசியைப் பிடிக்க முயற்சிப்பான். ஆனால்﹐ அது அவனால் முடியாது போய்விடும்'' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விளக்கினார்கள்.
ஆக﹐ அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட மனிதன் எப்போதும்﹐ எந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் தெளிவோடு தனக்குரிய திசையில் பயணித்துக் கொண்டிருப்பான். அவனை எத்தகைய அற்புதங்களாலும் திசை திருப்ப முடியாது. காரணம்﹐ குர்ஆனும் ஸுன்னாவும் வழிகாட்டும்போது அற்புதங்கள் அவனைக் குழப்புவதில்லை. அவன் தனது திசை பற்றியும் பயணம் பற்றியும் தெளிவோடு இருப்பான். வாழ்க்கையில் எதிர்ப்படும் சாதாரண﹐ அசாதாரண நிகழ்வுகளால் அவன் அலைக்கழிய மாட்டான். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை﹐ இறந்ததிலிருந்து மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் வரை﹐ உயிர்ப்பிக்கப்பட்டதிலிருந்து நரகம் அல்லது சுவனம் வரை ஒரு மனிதனின் பயணப் பாதை மிகவும் தெளிவாக குர்ஆனிலும் ஸுன்னாவிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மனிதனுக்குள்ள ஒரே ஒரு பொறுப்பு அது பற்றிய தெளிவையும் விளக்கத்தையும் பெறுவது மட்டும்தான். அந்த விளக்கத்துடன் அவன் பயணிக்கும்போது﹐ அந்த விளக்கத்தினடிப்படையில் ஒரு மனிதன் தனது வாழ்வை அமைத்துக் கொள்கின்றபோது பிரளயங்களும் பூகம்பங்களும் எரிமலைகளும் புயல்களும் அவனை ஒன்றும் செய்து விடுவதில்லை. அவனது உயிரை சிலபோது அவைகள் பறித்துக் கொள்ளும் எனினும்﹐ தனது வாழ்க்கையின் வெற்றி குறித்த உறுதியை அவன் இழக்கமாட்டான். அது அவனது உள்ளத்திற்கு நிம்மதியையும் போரனந்தத்தையும் வழங்கும் பெறுதற்கரிய சொத்து.
ஆனால்﹐ இன்றோ அந்த சொத்தை முஸ்லிம்கள் கை நழுவ விட்டுள்ளனர். அதன் பெறுமதியை உணராதிருக்கின்றனர். தங்ளது ஊருக்கு அற்புதமொன்றைச் செய்து காட்டும் ஒரு மனிதர் வந்துவிட்டால் ஊருக்குள் அல்லாஹ்வின் அனைத்து அருள்களும் ஒன்றுசேர்ந்து நுழைந்து விட்டதாகக் கருதுகின்றனர். அற்புதங்கள் செய்து காட்டாவிட்டாலும் அற்புதமான ஒரு தோற்றம் இருந்தாலே போதும். அவரை அணுகினால்... தொட்டால்... முத்தமிட்டால்... அனைத்து உலக﹐ மறுமை சௌபாக்கியங்களும் தமக்குக் கிடைத்து விடும் என ஆறுதலடைகின்றனர். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் அது பற்றிய விளக்கத்திற்கும் இல்லாத மரியாதை வெறும் மதிப்புத் தோற்றங்களுக்குக் கிடைத்துவிட்ட ஒரு காலப் பகுதியில் நாம் வாழ்கிறோம். குர்ஆனும் ஸுன்னாவும் வரைந்துள்ள வாழ்க்கையையும் அதன் வரையறைகளையும் அறிந்து அதற்குரிய பாதையில் பயணிப்பதை விட இந்த மதிப்புத் தோற்றங்களுக்குப் பின்னால் சென்றால் அனைத்து உலக﹐ மறுமை ஈடேற்றங்களையும் பெற்று விடலாம் என்று மக்கள் இந்த அறிவியல் யுகத்திலும் நம்ப வைக்கப்படுகிறார்கள் நம்பிக்கை கொண்டும் இருக்கிறார்கள். இந்தத் தவறான பாதையில் மன முரண்டாகச் செல்பவர்கள் தங்களது நிலையை ஒரு கணம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குர்ஆனையும் ஸுன்னாவையும் அல்லாஹ் இறுதிநாள் வரை பாதுகாத்து வைத்திருப்பது எதற்காக? என்பதை அவர்கள் உணர வேண்டும். குர்ஆன்﹐ ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நாம் நகர வேண்டுமா? வெறும் மதிப்புத் தோற்றங்களின் பின்னால் முஸ்லிம் சமூகம் செல்ல வேண்டுமா? என்பது பற்றிய தெளிவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
''அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவர்களுக்கு மார்க்க விளக்கத்தைக் கொடுப்பான்'' (ஹதீஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்