Breaking News
recent

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

சென்னையில் இருப்போரும் சரி புதிதாக வருவோரும் சரி வெறுக்கிற ஒரு விஷயம் ஆட்டோக்கள் அடிக்கும் பகல் கொள்ளை ! மீட்டர் போட்டு ஓட்டுகிற பழக்கமே கிடையாது ! மாறி மாறி அரசாங்கம் வந்தாலும் மீட்டர் விஷயத்தில் எந்த மாறுதலும் வராததற்கு காரணம் - ஏராள ஆட்டோக்கள் போலிஸ் அதிகாரிகளுடையது என்பது பொதுவாக நம்பப்படுகிற ஒரு விஷயம் !

இந்நிலையில் சென்னையில் அறிமுகமாகி உள்ளது நம்ம ஆட்டோ ! சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - நம்ம ஆட்டோவில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் !

இந்த நம்ம ஆட்டோ பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்



அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்



இந்த சேவை பற்றி நம்ம ஜாக்கி சேகர் தளம் துவங்கி விகடன், தினகரன் என பல பத்திரிக்கைகளில் வெளி வந்திருந்தாலும், அவசியம் இது பற்றி இன்னும் பலருக்கு சென்று சேரவேண்டும் என்பதால் இந்த பதிவு

நம்ம ஆட்டோ நிறுவனர் திரு அப்துல்லா நமக்காக அளித்த பிரத்யேக பேட்டி இது :

நம்ம ஆட்டோ என்கிற இந்த ஐடியா தோன்ற என்ன காரணம் ?

சென்னையில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க கூடிய ஆதங்கம் சரியான மீட்டர் உடன் கூடிய ஆட்டோ இல்லையே என்பது. அப்படி பட்ட ஆட்டோ வேண்டும் என ஒவ்வொரு சென்னை வாசியும் ஏதோ ஒரு தருணத்தில் நினைத்திருப்பாங்க. நாங்க அதுக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளோம் அவ்வளவு தான்

நம்ம ஆட்டோ - வியாபார மாடல் பற்றி சொல்லுங்களேன் 

பயணம் செய்ய ஆட்டோ நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இதை தவிர ஆட்டோ ஓட்டுனருக்கு மாத சம்பளம் மற்றும் கமிஷன் தரப்படுகிறது. இப்போதைக்கு 66 ஆட்டோக்கள் - நம்ம ஆட்டோ திட்டத்தில் இயங்குகிறது.

66 ஆட்டோக்கள் நீங்களே முதலீடு செய்வதேன்றால் பெரிய விஷயமாச்சே ! நிறைய செலவு இல்லையா? 

கால் டாக்சி போல ஆட்டோ விலை மிக அதிகமில்லையே ! 2 லட்சக்கும் குறைவாய் தான் ஆட்டோ விலை வருது. 50 ஆட்டோ - ஒரு கோடி என்றால் அதை நான்கு நண்பர்கள் ஷேர் செய்து இன்வெஸ்ட் செய்துள்ளோம். அதனால் இது சாத்தியமாகிறது

பணமும் முதலீடு செய்து - சம்பளமும் தருகிறீர்கள். மீட்டரும் மிக சரியான அளவு உள்ளது; உங்களுக்கு எப்படி லாபம் வரும்?

இப்போதைக்கு நாங்கள் லாபம் பார்க்க முடியாது தான். 300 ஆட்டோக்களை தொட்டால் தான் எங்களுக்கு பிரேக் ஈவன் ஆகும். அதன் பின் தான் லாபம் வர துவங்கும். அது வரை நாங்கள் சற்று தியாகம் செய்து தான் ஆகணும்.

300 ஆட்டோக்கள் என்கிற அளவை கூடிய விரைவிலேயே எட்டுவோம் என நினைக்கிறேன்.

வால்யூம் வைத்து லாபம் பார்க்க கூடிய தொழில் இது. ஒரு ஆட்டோவில் கிடைக்கும் லாபம் மிக சிறிய அளவில் தான் இருக்கும் அதனை மொத்த ஆட்டோக்களோடு பெருக்கினால் அது கணிசமாக இருக்கும்.




நீங்கள் வேறு தொழில் ஏதும் செய்கிறீர்களா ? இது மட்டும் தானா ?

வேறு சில தொழில்களும் எனக்கு இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு முழு கவனமும் நம்ம ஆட்டோவில் தான் உள்ளது.

நம்ம ஆட்டோவிற்கு வரவேற்பு எப்படி உள்ளது? 

நாங்க எதிர்பார்த்ததை விட மிக மிக அதிக வரவேற்பு உள்ளது. உண்மையில் நம்ம ஆட்டோவிடம் சென்னை மக்களின் டிமாண்ட் மிக அதிகமாக உள்ளது; அதை பூர்த்தி செய்ய என்னென்ன செய்வது என்பதில் மட்டும் தான் இப்போதைக்கு எங்கள் சிந்தனை உள்ளது.

பத்திரிக்கைகள், மீடியாக்கள் என அனைவரும் எங்களை பற்றி எழுதுகிறார்கள். இதனால் நம்ம ஆட்டோ எல்லோருக்கும் மிக எளிதில் சென்று சேர்ந்து விட்டது.

முக நூலில் நம்ம ஆட்டோ வலை பக்கத்தில் " முதல் கம்பிலேயின்ட் " என்று ஒருவர் எழுதியிருந்தார் : எங்கள் ஏரியாவிற்கு நம்ம ஆட்டோ வேண்டும்; இதனை முதல் கம்பிலேயின்ட் ஆக எடுத்து கொள்ளுங்கள் என்று.

எங்கள் தொலை பேசி எண்ணையும் நீங்கள் செல்லும் "நம்ம ஆட்டோ" பற்றிய குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் என பகிர்ந்துள்ளோம். தினம் அதில் வரும் ஒரே கம்பிலேயின்ட் எங்கள் ஏரியாவிற்கு இன்னும் நம்ம ஆட்டோ வரவில்லை என்பது தான்.

ரீச் மிக அதிகமானதால் டிமாண்ட்டும் அதிகமாக உள்ளது; அதற்கு ஏற்ப சப்ளை செய்வது தான் இனி எங்கள் வேலை

சாலையில் நம்ம ஆட்டோவை பார்ப்பதே அரிது ; அதிலும் காலியாக பார்ப்பது இன்னும் அரிது. நீங்கள் ஏன் தொலை பேசியில் புக் செய்யும் வசதி கொண்டு வரவில்லை? 

சென்னை என்பது மிக பெரிய ஏரியா. 3000 ஆட்டோக்கள் இருந்தால் தான் தொலைபேசியில் புக் செய்யும் வசதி கொண்டு வர முடியும். அப்படி இல்லாத போது - திருவான்மியூரில் இருந்து ஒருவரும் திருவொற்றியூரில் இருந்து ஒருவரும் ஆட்டோ கேட்டு போன் செய்தால் நாங்கள் எப்படி அனுப்ப முடியும்? உண்மையில் அப்போது தான் எங்கள் பேர் - ரிப்பேர் ஆகி விடும். எங்கிருந்து போன் வந்தாலும் ஏற்க கூடிய அளவில் ஆட்டோ எண்ணிக்கை ஒரு நாள் அதிகமாகும் அப்போது நிச்சயம் தொலை பேசி எண்ணில் அழைத்து புக் செய்யும் வசதி கொண்டு வருவோம்; அப்போது உங்களை போலவே எங்களுக்கும் சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் இருக்கும். இன்ஷா அல்லா

(" சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்" என்ற வார்த்தையை கேட்டதும் ஆச்சரியமாகி விட்டது. அப்துல்லா அவர்களுடன் முதன் முறை போனில் பேசுகிறேன். துவக்கத்தில் வீடுதிரும்பல் ப்ளாகில் பேட்டி என்றபோது கூட அவர் ஒன்றும் காட்டி கொள்ள வில்லை; "சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் என ஏன் சொன்னீர்கள்?" என கேட்டதும் நிதானமாக - "நானும் வீடுதிரும்பல் வாசித்துள்ளேன்" என்றார் )

Dinakaran news paper - 07-07-2013


துவக்கத்தில் உள்ள ரிஸ்க்கை நாங்கள் தான் ஏற்று கொள்ள வேண்டும்; இந்த கான்செப்ட் நன்றாக ரீச் ஆனால் பின்னர் மற்றவர்களும் எங்களுடன் கை கோர்க்கலாம் என நினைத்தோம். இப்போது நம்ம ஆட்டோ - மிக நன்றாக எல்லோர் மனதிலும் பதிய துவங்கியதால் இனி ஒத்த சிந்தனையுள்ள தனி நபர்களும் இதில் இணையலாம்

நம்ம ஆட்டோவிற்கு மற்ற ஆட்டோ காரர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பு வருவதாக வாசித்தோமே? 

நம்ம ஆட்டோ ஓட்டுவது யார் சார் ? சென்னையில் இதுவரை ஆட்டோ ஓட்டிய மனிதர்கள் தானே ? அவர்களின் சக தோழர்கள் தானே? அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் அந்த அளவு ஆட்டோ காரர்களிடம் எதிர்ப்பு இருக்கிறதோ அதே அளவு ஆதரவும் அவர்களிடமிருந்து இருக்கு.

எங்களை பொறுத்தவரை, அவர்களுடன் ஒத்திசைவு அணுகு முறையை தான் பின்பற்றுவோம் முரண்பாட்டு அணுகுமுறையை அல்ல



ஆட்டோக்கள் எண்ணிக்கையை அதிகபடுத்த வேறு என்ன திட்டம் வச்சிருக்கீங்க ?

இப்போதைய முக்கிய தேவை ஆட்டோக்கள் எண்ணிக்கையை அதிகபடுத்துவது தான். முன்பே சொன்ன மாதிரி டிமாண்ட் மிக அதிகமாக இருக்கு

ஒரு புது ஆட்டோவின் விலை 1,90,000. இந்த 1,90,000 முதலீடு செய்ய தயாராய் உள்ளவர்கள் - தங்கள் பெயரில் ஆட்டோ எடுத்து - அதனை நம்ம ஆட்டோவிற்கு வாடகைக்கு விடலாம். நம்ம ஆட்டோ இதற்கான வாடகையாக தினம் ரூ. 180 ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் போட்டு விடுவோம் மாதம் ரூ. 5, 400 வருமானம் அவர்களுக்கு நிச்சயமாக வரும். அதுவும் தினம் 180 ரூபாய் அவர்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிடும்.

ஏற்கனவே ஆட்டோ வைத்திருப்போரை - நம்ம ஆட்டோ திட்டத்தின் கீழ் கொண்டு வர சில முயற்சிகள் செய்து வருகிறோம்

இதுவரை ஆட்டோ மீட்டரை ஒரு காட்சி பொருள் மாதிரி பார்த்து வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்; சென்னை மக்கள் இதை முழு மனதோடு வரவேற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

சிலர் சேவையையே தொழிலாய் செய்வார்கள். நாங்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலை ஒரு சேவை போல் செய்து வருகிறோம்.

எங்களின் பேச்சு முடியும் முன் அவரிடம் சொன்னேன் : " இந்த பேட்டி , அது ப்ளாகில் வருவது எல்லாம் பெரிய விஷயமில்லை; ஒரு சென்னை வாசியாக எனது விருப்பமெல்லாம் - இந்த நல்ல திட்டம் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என்பது தான். நிச்சயம் இந்த திட்டம் இன்னும் விரிவாகி நிறைய பேரை சென்றடையணும் " என்று சொல்ல

" இதை விட நாங்க என்ன சார் சம்பாதிக்கணும்? உங்களை மாதிரி சகோதரர்கள் பலரின் எண்ணம், சப்போர்ட் நிச்சயம் இந்த திட்டத்தை எங்களை தொடர்ந்து நடத்த வைக்கும் " என்று முடித்தார்
"அதீத ஆட்டோ கட்டணம்" என்கிற சமூக சீர்கேட்டினை களைய - முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளனர் இந்த குழுவினர்.

நம்ம ஆட்டோவை பற்றிய தகவலை பலருக்கும் சேர்ப்பதும், இத்திட்டத்தை ஆதரிப்பதும் சென்னை வாசிகளான நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சமூக கடமை என்றே தோன்றுகிறது !
*****
நம்ம ஆட்டோ வெப் சைட் : http://nammaauto.com/new/
மெயில் ஐ டி - contact@nammaauto.com
தொடர்பு எண் - 044 65554040

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.