Breaking News
recent

உலகின் ஒரே & கடைசி 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்தஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. 


           இது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி,  பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை  பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்..! இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy)என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே..! University Degree Certificate -- இப்படி..! நினைவு இருக்கிறதா..? இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.


 (மேலே உள்ள மூன்றும் வெவ்வேறு...! அரபிகளுக்கு வனப்பெழுத்தில் ஆர்வம் மிக அதிகம்)


    பின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '.(அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும்,  சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும்,  கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..!

  இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்... கணிணி பயன்பாட்டினால், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியில், 'அச்சுக்கோர்ப்பு' என்பது எங்கேயோ உயர்ந்துவிட்ட சூழலில், 'நாடு முழுதும் தினமும் 22,000 பிரதிகள் விற்பனை ஆகும் ஒரு  தினசரி, அச்சுக்கோர்க்கப் படாமல் கையால் எழுதப்பட்டு, பின்னர் படி-அச்சு இயந்திரத்தில் பல ஆயிரம் பிரதிகள் எடுக்கப்பட்டு, இத்தனை வருடங்களாய்  ஒரு 'கையெழுத்துப்பிரதி'யாகவே இன்னும் வெளிவந்து கொண்டு இருக்கிறது' என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா..? உலகிலேயே ஒன்றே ஒன்றாய்..! அதுவும் அந்த தினசரி வெளி வருவது நம் இந்தியாவில் ..! அதுவும் நம் தமிழகத்தில்..! சென்னையில்..! திருவல்லிக்கேணியில்... என்றால்..!!! ஆம்..! வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது..!

   அதன் பெயர் "தி முசல்மான்"..! இது ஒரு உருது தினசரி..! இதனை 1927-ல் துவக்கியவர் சையத் அஸ்மத்துல்லாஹ். அப்போதைய சென்னை மாகான காங்கிரஸ் தலைவர் டாக்டர்.முக்தார் அஹ்மத் அன்சாரியால் இக்கையெழுத்து தினசரி பத்திரிக்கை துவக்கி வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் சையத் அஸ்மத்துல்லாஹ் இறந்தபின்னர் அவர் மகன் சையத் ஃபஸ்ளுல்லாஹ் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2008-ல் இறந்த பின்னர், இவர் மகன் சையத் நசருல்லாஹ் பொறுப்பேற்று இருக்கிறார். இன்னும் அது கையெழுத்து பிரதியாகவேதான் வெளிவந்து கொண்டு இருப்பதாகவிக்கிபீடியா தெரிவிக்கிறது.

      இங்கே பணியாற்றுவோர் மொத்தமே நான்கு பேர்..! உருதில் 'காத்திப்' எனப்படும் மூன்று வனப்பெழுத்தர்கள் தினசரி, இத்தினசரியை எழுதுகிறார்கள். இந்தcalligraphers-களில், ரஹ்மான் ஹுசைனி -- தலைமை வனப்பெழுத்தர் ஆவார். மற்ற இருவர் ஷபனா மற்றும் குர்ஷித் என்ற பெண்கள். இவர்களுக்கு செய்திகளை தருவது சின்னச்சாமி பாலசுப்ரமணியம் என்ற ஒரு நிருபர்.

    ஒரு குழல் மின் விளக்கு, இரண்டு கூரை மின் காற்றாடிகள், மூன்று குமிழ் மின் விளக்குகளுடன், 1950-ல் அமெரிக்காவின் ஒரு ஓய்ந்துபோன தினசரியிடம் இருந்து ஃபஸ்ளுல்லாஹ் வாங்கிய, ஒரு பிரதி எடுக்கும் இயந்திரத்தத்துடனும் (மேலே உள்ள படம்), 800 சதுர அடியில் ஒரு அறையில் இந்த அலுவலகம் இன்னும் இயங்கி வருகிறது. 

      தினசரியில் மொத்தம் நான்கே பக்கங்கள். முதல் பக்கம் தேசிய-சர்வதேச செய்திகளும், மற்ற இரு பக்கங்களில் உள்ளூர் செய்திகளும் கடைசி பக்கத்தில் விளையாட்டு பற்றிய செய்திகளையும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு, ஒரு பக்கம் எழுத 60 ரூபாய் ஊதியம். இந்த தினசரியின் விலை: 75 காசு..! 


   'பத்திரிக்கை உலகில் குறிப்பாக அச்சுத்துறையில் இவ்வளவு தொழில்நுட்பப்புரட்சி ஏற்பட்டபின்னும் ஏன் இப்படி பழங்கால வழக்கத்தில் இன்னும் கையால் தினசரிகளை எழுதுகிறீர்கள்..?' என்று இவர்களை கேட்டால்..." உருது மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை; அதை நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து செய்கிறோம்"   என்கிறார்கள்..!

         இப்படியும் இயல்பான மனிதர்கள், எளிமையாக நம்முடன் வாழ்கிறார்களே..! மொழியார்வம் என்றால் இதுதானோ..! ஆச்சர்யம்தான்..!
நன்றி: 

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~


Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.