Breaking News
recent

இன்று (02-08-13) சர்வதேச குத்ஸ் மீட்பு தினம்

ஒவ்வொரு ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் பைத்துல் முஹத்திஸ் நாள்(அல் குத்ஸ் தினம்) என உலக முஸ்லிம்கள் அறிவித்துள்ளார்கள். இந்நாளில் உலகின் கவனத்தை பைத்துல் முஹத்திஸ் அல் அக்ஸாவின் ஆகியவற்றின் பக்கம் ஈர்த்து வருகின்றார்கள்.பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக உதவி செய்வோம்;துஆ செய்வோம்.
பைத்துல் முகத்தஸ் என்பது இன்று நேற்றல்ல, இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இஸ்லாத்துடன் இரண்டறக் கலந்து விட்ட, அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களின் மனதில் கலந்து விட்டதொரு இறைநம்பிக்கையின் வெளிப்பாடு, இன்றைக்கு அது முஸ்லிம்களின் வரலாற்றின் ஒரு பகுதியாக, இன்றைக்கும் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதொன்று. இஸ்லாம் கூறுகின்ற தூதர்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதும், முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் மீது தமது இறைநம்பிக்கையை பூரணப்படுத்துகின்றார்கள் என்பதும், இன்னும் இப்றாஹீம் (அலை) அவர்கள் முதல் மூஸா (அலை) இன்னும் ஈஸா (அலை) ஆகியோர் வரை, இன்னும் இஸ்லாத்தின் இறுதி நபியாக அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் வரையுள்ள குர்ஆன் குறிப்பிடும் அத்தனை நபிமார்களும், இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்வதோடு, இன்னும் அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவர்களது ஆன்மீகத்துடன் கூடிய மற்றும் உணர்வுப்பூர்வமான அனைத்தும் பைத்துல் முகத்தஸிடன் தொடர்புபடுத்தப்பட்டவை.
இத்தகைய ஆன்மீகத்துடனும், உணர்வுப்பூர்வமானவற்றுடன் ஒன்றுபட்ட பைத்துல் முகத்தஸை எவ்வாறு விட்டுக் கொடுக்க இயலும். இன்னும், ஓரிறைக் கொள்கையைப் பறைசாட்டக் கூடிய தளமாகவும் உள்ளது. அது முஸ்லிம்களது ஆன்மீகம், இறைநம்பிக்கை, உணர்வுகள், வணக்க வழிபாடு இன்னும் அவர்களது சமயம் சார்ந்த அனைத்திலும் அது தாக்கத்தை விளைவிக்கக் கூடியதொன்றாக இருந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அதிகம் சொல்லப் போனால் ஜிஹாத் என்றழைக்கப்படக் கூடிய, இறைவழியில் போராட்டம் என்பதன் அடையாளத் தளமாகவும் அது திகழ்கின்றது. இதற்கு கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாறு சாட்சியம் கூறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்து நடத்தி வரக் கூடிய இன்திபாழா, ஆன்மீக மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாட்டின் உச்சத்தைப் பறைசாற்றக் கூடியதாக இருப்பதோடு, அல் குத்ஸ் என்றழைக்கப்படக் கூடிய பைத்துல் முகத்தஸ் முஸ்லிம் உலகின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் திகழ்கின்றது. எல்லாவித கருத்துவேறுபாடுகளும் களையப்பட்டு, முஸ்லிம்களை ஓரணியில் நிறுத்தக் கூடிய பணியைச் செய்யக் கூடிய அடையாள பூமியாகவும் இது இருந்து கொண்டிருக்கின்றது என்றால் அதில் மிகையில்லை.
வரலாற்றுச் சிறு குறிப்பு
ஜெருஸலம் நகரானது கி.பி.637 ரபிய்யுல் ஆகிர் 16 ந் தேதி முஸ்லிம்களின் கைகளுக்கு வந்ததன் பின்னர், இது வரை இருந்து வந்த அடக்குமுறை ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முன் அந்தப் பகுதியை எகிப்தி யர்களும், கிரேக்கர்களும், பெர்ஸியர்களும் பின்பு ரோமர்க ளாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். ரோமர்களை எர்முக் என்ற இடத்தில் வைத்து போர் செய்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றவுடன், இந்த அடக்குமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ரோமர்களின் கவர்னராக இருந்து ஆட்சி செய்து வந்தவர், புனித நகரை விட்டு ஓடிச் சென்று, முஸ்லிம்களிடம் சரணடைந்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இது போலவே இன்னும் ஏனைய நகரங்களும் முஸ்லிம்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. ஆனால் மற்ற நகரங்களின் மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும், ஜெருஸம் நகர மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாக மதினா நகரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து இந்த நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே, அந்த மக்களின் வேண்டுகோளாக இருந்தது. இதனையறிந்த உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜெருஸலம் நகர் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று அந்த மக்களின் பெருமதிப்பைப் பெற்றார்கள். அவர்களது வருகையின் பொழுது, இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்த மக்களை அடக்குமுறையின் கீழ் வைத்திருந்ததற்கு மாறாக, உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே அந்த மக்கள், இஸ்லாத்தின் உன்னதத்தைக் கண்டு கொண்டார்கள்.
தொழுகைக்கான நேரம் வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களை கிறிஸ்த்தவர்களின் கோயிலில் தொழுது கொள்ளும்படி அந்த மக்கள் வேண்டிக் கொண்ட பின்பும், அதில் தொழ மறுத்துவிட்டதுடன், பின்பு வரக் கூடிய என்னுடைய சமூகம் இது எங்கள் உமர் நின்று தொழுத இடம் என்று வாதிடாமல் இருக்கத் தான் நான் தொழ மறுக்கின்றேன் என்று கூறி அன்றே அந்த மக்களின் மத, மற்றும் சகோதர நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்கள். மேலும், அங்கு வாழக்கூடிய மக்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் , ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேற்கண்ட இந்த உத்தரவு அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல, யூதர்கள் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த இவர்கள், நிம்மதியாக யார் காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், அது கிறிஸ்த்தவர்களான ரோமானியர்களின் ஆட்சிக் காலத்தில் அல்ல. மாறாக அது முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உண்மையான வரலாறாகும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுக்குள் கடுமையான பகைமையைக் கொண்டிருந்தார்கள். காரணம், கிறிஸ்த்தவர்களான ரோமர்கள் யூதர்களைப் படுகொலை செய்ததது மட்டுமல்லாது, கி.பி. 325 ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த ரோமப் பேரரசர் காண்ஸ்டான்டின் என்பவர், யூதர்களை ஜெருஸலம் உட்பட்ட பகுதிகளுக்குள் வரவே கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.
முஸ்லிம்கள் ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிய பின்னர் தான், அவர்கள் இந்தப் புனித பூமிக்குள்ளேயே நுழைய முடிந்தது. ஆக, இந்த யூதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியில் தான் இவர்கள் நிம்மதியைப் பெற்றார்கள். கி.பி.1099-1187 வரை சிலுவை யுதத்தின் பின் 88 வருடங்கள் ஆட்சி செய்த ரோமர்களின் கொடுங்கோள் ஆட்சியின் பொழுது தான், ஜெருஸலம் நகரில் வாழ்ந்த கிறிஸ்த்தவர்களும், யூதர்களும் முஸ்லிம்களின் ஆட்சியின் உன்னதத்தை அறிந்து கொண்டார்கள். ஏனெனில், சிலுவை யுத்தத்தின் பொழுது, ரோமர்கள் ஜெருஸலத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. மாறாக, கிறிஸ்த்தவர்கள், யூதர்கள் என 70 ஆயிரம் பேர்களைக் கொன்று தீர்த்தார்கள். என்றைக்கு ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் ஜெருஸலத்தை மீண்டும் கைப்பற்றினார்களோ அன்று தான் இவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்தார்கள்.
ஐரோப்பியர்களாலும், ஜெர்மன் நாஸிகளாலும் ஓட ஓட விரட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இவர்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு, யாருடைய ஆட்சியிலே பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தார்களோ, அத்தகைய முஸ்லிம்களின் மீது, போர் தொடுத்திருப்பது, காலம் காலமாக இறைவனுக்கும் இறைத்தூதர்களுக்கும் செய்து வந்த மாறுபாட்டை விட்டு நீங்காது, மீண்டும் மீண்டும் இந்த பூமியில் அழிச்சாட்டியம் செய்து வருவதைத் தான் குறிக்கின்றது. இது, இறைவனால் திட்டமிடப்பட்டிருக்கும், அவர்கள் மீது இறைவன் விதித்திருக்கும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தான் குறிக்கின்றது.
அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்
அல் குத்ஸ் அல்லது ஜெருஸலம் என்பது பழமையான அரபு நகரமாகும். இதனை பழமையான அரபுக் கோத்திரத்தவர்களான கேனனைட்ஸ் என்பவர்கள் இந்த நகரத்தை உருவாக்கினார்கள், இன்னும் இவர்கள் தான் பாலஸ்தீனத்தின் ஆரம்பக் குடிகளும் ஆவார்கள். இப்பொழுது, யூதர்கள் கூறிக் கொண்டிருப்பது போல ஜெருஸலம் என்பது ஹீப்ரு மொழியில் உள்ளதல்ல, மாறாக அல் யபோஸி என்ற ஓரிறைக் கோட்பாட்டைப் பின்பற்றியவனான கேனைன் மன்னன் அல் யாபோஸி என்பவன் இட்ட பெயராகும்.
இன்னும் இந்த நகரத்தை ‘யுவர் ஸலீம் அல்லது ஸாலம்’ என்றும் அழைப்பதுண்டு, யுவர் என்பது ஊர் அல்லது இடம் என்பதையும், ஸலீம் என்பது அந்த மன்னனையும் குறிக்கக்கூடியது. அதாவது ‘ஸாலம் நகரம்’ அல்லது ‘அமைதியின் நகரம்’ என்றழைக்கப்படுகின்றது. காலம் செல்லச் செல்ல இந்தப் பெயர் மருவி ஜெருஸலம் என்றழைக்கப்பட்டது. ஜெருஸலம் என்ற இந்தப் பெயர் பல்வேறு காரணப் பெயர்களுடனும் அழைக்கப்படுகின்றது. அதாவது, பைத்துல் முகத்திஸ், அல் குத்ஸ் – அதாவது புனிதமிக்க நகரம் என்றழைக்கப்படுவதுடன், இலியா என்றும் முன்பு அழைக்கப்பட்டு வந்தது.
அல் ஹரம் அஷ்ஷரீஃப்
முஸ்லிம்களுக்கு அல் குத்ஸ் ன் முக்கியத்துவம் என்பது அது அருள் செய்யப்பட்ட நகரம் – பாலஸ்தீனம், இதன் காரணம் என்னவெனில் அல் ஹரம் அஷ்ஷரீஃப் என்றழைக்கப்படக் கூடிய புனிதமிக்க பள்ளிவாசல் இருப்பதே அதன் காரணமாகும். இதற்கு கண்ணியமிக்க, புனிதமிக்கதுமான இந்தப் பள்ளிவாசல் உலக முஸ்லிம்கள் தொழுகையின் பொழுது முன்னோக்கும் திசையாகவும் முன்பு இருந்தது. இன்னும் மக்கா மற்றும் மதீனாவிற்கு அடுத்ததாக, மூன்றாவது புனிதமிக்க தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த பள்ளியில் இருந்து தான் ஏனைய இறைத்தூதர்களுக்கு தொழுகையை முன்னின்று நடத்தி விட்டு, பின்பு மிஃராஜ் என்றழைக்கப்படக் கூடிய விண்ணேற்றப் பயணம் செய்தார்கள் என்பதிலிருந்தும், அல் மஸ்ஜிதுல் அக்ஸா, அல் குத்ஸ், பாலஸ்தீனப் பூமி என்றழைக்கப்படக் கூடிய இந்த பூமி இறைவனால் அருள்செய்யப்பட்டதாகும். இன்னும் அதன் மேற்கண்ட முக்கியத்துவத்திலிருந்து இது முஸ்லிம்களின் இறைநம்பிக்கையுடன் எந்தளவு தொடர்புள்ள பூமி என்பதும் விளங்கும்.
அல் மஸ்ஜிதுல் அக்ஸா
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1)
அல் மஸ்ஜிதுல் அக்ஸா அல்லது தொலைதூரத்துப் பள்ளிவாசல் என்பதன் அர்த்தம் யாதெனில், புனிதமிக்க பள்ளிவாசலான மக்காவிலிருந்து தொலைவில் உள்ள பள்ளிவாசல் என்பதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் சென்ற – இஸ்ரா என்ற நிகழ்வினை ஆய்வு செய்யும் மார்க்க அறிஞர்கள், புனித மிக்க மக்கா நகரத்தையும், பைத்துல் முகத்தஸையும் இணைக்கின்ற இந்த நிகழ்வின் மூலம் இறைவன் பைத்துல் முகத்தஸையும், மக்காவின் புனிதத்தோடு இணைக்கின்றான் என்றே கருதுகின்றனர். இந்த விண்ணேற்ற உத்தரவு இறைவன் புறத்திலிருந்து வந்ததாகும், எனவே இரண்டு பள்ளிகளின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம்களையே சாருகின்றது. இதனை மாற்றியமைப்பதற்கு இறைவன் வேறு யாருக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கிடவில்லை.
மஸ்ஜித் அக்ஸாவின் முக்கியத்துவம் பற்றிய சில குறிப்புகள் :
முதல் கிப்லா
ஹிஜ்ரத் – இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு குடியேறிய பின் உள்ள ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் தங்களது வணக்கத்தின் பொழுது முன்னோக்கும் திசையாக, பைத்துல் முகத்தஸ் அமைந்திருந்த திசையை முன்னோக்கித் தான் தொழுது கொண்டிருந்தார்கள். இதுவே இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களுக்கும், இன்னும் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்குமுள்ள அனதை;துத் தூதர்களுக்குமான அடையாளமாகவும் இருந்தது. இமாம் புகாரீ அவர்களின் பதிவு செய்திருக்கின்ற நபிமொழியின்படி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி வானத்தையே உற்று நோக்கக் கூடியவர்களாக இருந்தார்கள், தொழுகையின் முன்னோக்கு திசையாக பைத்துல் முகத்தஸை விடுத்து மக்காவை நோக்கித் தொழுவதற்கான இறைவனுடைய உத்தரவு வந்து விடாதா என்று தான் அவர்கள் தனது முகத்தை வானத்தை நோக்கி அடிக்கடி திருப்பக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்னர் இறைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த விருப்பத்திற்கு பதிலளித்தான். அதன் பின்னர் தான் தொழுகையின் பொழுது முன்னோக்கும் திசையாக மக்கா மாற்றப்பட்டது. இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்;. (2:144)
தொழுகையின் முன்னோக்கு திசையான பைத்துல் முக்கத்தஸ் மாற்றப்பட்டு விட்டதன் காரணமாக அதன் புனிதத் தன்மையில் குறைவு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தமாகாது, மாறாக அதன் புனித்ததுவத்தைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் சிலாகித்துக் கூறுகின்றான். அதனை விட புதிய கிப்லா வாக உருவெடுத்திருக்கக் கூடிய மக்காவினுடன், பைத்துல் முகத்தஸும் முஸ்லிம்களின் முந்தைய கிப்லா என்ற முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுகின்றது.
இஸ்ரா மற்றும் மிஃராஜ் நிகழ்ந்த பூமி
இதுவரை எந்தப் படைப்பினமும் சென்றடைந்திராத இறைவனின் மிக அருகாமையை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரவில் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்குப் பயணமாகி, அங்கிருந்து மிஃராஜ் என்ற விண்ணேற்றப் பயணத்தை மேற்கொண்ட தளமாக மஸ்ஜிதுல் அக்ஸா திகழ்கின்றது. இந்தச் சம்பவத்தை திருமறைக் குர்ஆனின் 17:1 வசனம் மெய்ப்பித்துக் கூறுகின்றது. இது தான் அல் குத்ஸ் ன் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும், திருப்பு முனையாகவும் திகழ்வதோடு, முஸ்லிம்களின் வாழ்விலும் இன்னும் மனித வரலாற்றிலும் மிக முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் இந்த சம்பவம் திகழ்கின்றது.
இது முஸ்லிம்களின் ஆன்மீகத்துடன், அவர்களது உணர்வுடன் பரம்பரை பரம்பரையாக தொடர்பினை ஏற்படுத்தவல்லதாக இருக்கின்றது. மஸ்ஜிதுல் அக்ஸா வும் அதனுடன் தொடர்புள்ள நிலங்களும், மக்காவினைப் போன்றே முஸ்லிம்களுக்கு புனிதமிக்கதொன்றாக ஆகி விடுகின்றது.
மூன்றாவது புனிதமிக்க நகரம்
இந்தப் பள்ளியைச் சென்று தரிசிப்பதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை ஊக்கப்படுத்தினார்கள். கீழ்கண்ட மூன்று பள்ளிவாசல்களைத் தவிர ஏனைய பள்ளிகளுக்குச் சென்று அதனைத் தரிசிப்பதற்கு (அங்கு தொழுகை நடத்தும் நோக்கத்துடனும்) செல்லக் கூடாது. அவையாவன : மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜித் அல் ஹரம், மதீனாவில் உள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மற்றும் அல் மஸ்ஜிதுல் அக்ஸா (அல் குத்ஸ்). (புகாரீ, முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் தொழுகின்ற தொழுகை 500 மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது.
மக்காவில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஹரமில் தொழக் கூடிய தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகை ஒரு லட்சம் தொழுகைக்கு ஈடானது. மதீனாவில் தொழக் கூடிய தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகைக்கு ஆயிரம் மடங்கு தொழுகைக்கு ஈடானது. இன்னும் பைத்துல் முகத்தஸ் ல் தொழுகின்ற தொழுகையானது மற்ற இடங்களில் தொழுகின்ற தொழுகையின் 500 மடங்குக்கு ஈடானது. (ஹஸன் பைஹகீ)
தஜ்ஜாலின் குழப்பம் மிகைக்கும் பொழுது, முஸ்லிம்கள் அவனது குழப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தஞ்சம் அடையக் கூடிய தளமாகவும் பைத்துல் முத்தஸ் திகழ்கின்றது. மக்கா மற்றும் மதீனாவைப் போலவே தஜ்ஜால் இந்தப் பள்ளியில் நுழைவதனின்றும் இறைவன் பாதுகாத்தருள்வான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் பொழுது, ”அவன் இந்தப் பூமியில் நாற்பது நாட்கள் தங்கி இருப்பான், கஃபா, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மற்றும் அல் மஸ்ஜிதுல் அக்ஸா இன்னும் சினாய் குன்றுகள் ஆகிய இடங்களைத் தவிர, அவன் பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் நுழைவான்.” (அஹ்மத்)
அருள் செய்யப்பட்ட பூமி பாலஸ்தீனம்
பாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் பெருமைகள் மற்றும் அதன் புனிதத் தன்மை பற்றி திருமறைக் குர்ஆனிலும், இன்னும் ஏராளமான நபிமொழிகளிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. அறிஞர் பெருமக்களான இப்னு கதீர், அல் குர்தூபி, இப்னு ஜவ்ஸிய்யா மற்றும் பலர் ”சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்;” என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, ஷாம் என்றழைக்கப்படக் கூடிய இன்றைய சிரியாவும் பாலஸ்தீனப் பூமியுடன் உள்ளடங்கும் என்றும், அதுவும் அருள் செய்யப்பட்ட பூமி என்றும் விளக்கமளிக்கின்றார்கள். இந்த பூமியானது ஆன்மீகம், உலகாதாயம் மற்றும் அருட்கொடைகள் என்று அனைத்து வித அருட்கொடைகளையும் கொண்ட தளமாக, இறைவனால் அருட்செய்யப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது. இந்த அருட்கொடைகளானது பாலஸ்தீனர்களுக்கு மட்டும் உரித்தானதன்று, மாறாக பாலஸ்தீனர்கள், அரபுக்கள், முஸ்லிம்கள் என்று இந்த முழு உலக மனித வர்க்கத்திற்குமே அது அருட்கொடையாக விளங்குகின்றது என்பதை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.
அவற்றுள் சில அருட்கொடைகள் பின்வருமாறு :
உலகத்தின் மிக முக்கிய மையப் பகுதியில் அதன் அமைவிடம்
மேற்கு ஆசியாவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடைப்பட்ட மேற்கு வாசலாக இருப்பதோடு, இன்னும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இது வாசலாக அமைவதோடு, நைல் நதிப் பரப்பிலிருந்து யூப்ரடிஸ் நதி வரைக்கும் இது பரவி இருப்பதன் மூலம், இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் இந்த வளமான பூமியில் வந்து தங்கி வாழ விரும்புவதன் காரணமாக, உலகின் பன்முகச் சமுதாயத்தை இந்தப் பூமி தன்னுள் தோற்றுவித்துள்ளதன் காரணமாக, இந்தப் பூமிக்கு ‘குநசவடைந ஊசநளஉநவெ’ என்றழைக்கப்படுவதும் உண்டு. இதுவே உலகில் தோன்றிய ஏராளமான இறைத்தூதர்கள் இங்கு தோன்றியிருப்பதும், அவர்கள் இறைவனது தூதுச் செய்தியை இங்கிருந்து பரப்பியதற்குமான சில குறிப்பிட்ட காரணங்களாகச் சொல்ல முடியும்.
வானவர்கள் இறங்கிய தளம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷாம் தேச மக்களுக்கு ஒரு நற்செய்தி! அது என்ன செய்தி, இறைத்தூதர் (ஸல்) அவர்களே என்று அவர்கள் (தோழர்கள்) கேட்டார்கள். ”அல்லாஹ்வினுடைய வானவர்கள் தங்களது இறக்கைகளை ஷாம் தேசத்தின் மீது விரித்திருக்கின்றார்கள்” என்றார்கள். (திர்மிதீ)
இறைத்தூதர்கள் பலர் வந்துதித்த பூமி
அல்லாஹ் தனது தூதர்கள் பலரை இந்தப் பூமியில் தான் பிறக்க வைத்தான், அவர்களைத் தனது தூதர்களாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டான், இன்னும் தன்னுடைய வேத வசனங்களையும், கட்டளைகளையும், ஆகமங்களையும் வழங்கி மக்களுக்கு அவற்றைப் போதிக்கச் செய்தான் :
முஹம்மது (ஸல்) அவர்கள் இந்தப் புண்ணிய பூமியைத் தரிசித்ததோடு, அங்கு தொழுகையும் நடத்தினார்கள். இப்றாஹீம் (அலை), லூத் (அலை) ஆகியோர் இந்த பூமிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றார்கள். இன்னும் ஏராளமான தூதர்கள் இங்கு பிறந்திருகின்றார்கள், வளர்ந்திருக்கின்றார்கள், மரணித்திருக்கின்றார்ள், அடக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களாவன : இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை). அல் குத்ஸ் – இவர்கள் அனைவரும் வாழ்ந்து மரணித்த இடம் மட்டுமல்ல, அவர்கள் இந்தப் பூமியில் வந்து தங்கி, மக்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளையும் மேற்கொண்ட தளமுமாகும்.
யுக முடிவு நாளுக்கு முன்பதாக, ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகை தரும் பொழுது, அல் மஸ்ஜிதுல் அக்ஸா வில் தான் அவர்களது வருகை இருக்கும் என்று ஏராளமான ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
உலக முஸ்லிம்களின் பொது (வக்ஃப்) சொத்து
பாலஸ்தீனப் பூமியை முதன் முதலாக தனது தோழரான தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரி (இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழரும் இன்னும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிமும் ஆவார்)என்பவருக்கு உரிமை வழங்கிய பொழுது, பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களுக்குரிய சொத்து என்று அதன் மீதான உரிமை குறித்து வலியுறுத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அந்தச் சொத்து தமீம் அத்தாரி அவர்களுக்கும் அவருக்கும் பின் அவரது சகோதரர்களுக்கும், அவர்களுக்குப் பின் அவர்களது சந்ததியினருக்கும் அது உரிமையாக்கப்பட்டு, இந்த உரிமையானது உலக அழிவு நாள் வரைக்கும் தொடரக் கூடியது.
இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்தால், முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலர், பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை வக்ஃப் செய்திருப்பதனைக் காண முடியும். உதுமானிய கிலாபத்தின் பொழுது, இவ்வாறு வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் யாவும் பத்திரத்தில் எழுதப்பட்டு, இஸ்தான்புல் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது.
இன்னும் மேலதிகமாக, இவ்வாறு வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களை காலனி ஆட்சி புரிந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசும் அங்கீகரித்திருந்தது, பாலஸ்தீனம் என்பது முஸ்லிம்களுக்கு உரிமைப்பட்டது என்றும் அந்த அரசு அங்கீகாரம் செய்தது.
ஜிஹாத் மற்றும் ரிபாத்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாலஸ்தீனப் பகுதி மக்கள் குறித்துக் கூறும் பொழுது, ”இவர்களும், இவர்களது மனைவியர்களும், இவர்களது குழந்தைகளும், அடிமைகளும் (ஆண், பெண்), இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் ரிபாத் செய்யக் கூடியவர்கள்.” (அத்தபரானீ) ரிபாத் என்பது முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாப்பது என்று பொருள், இஸ்லாத்திற்குச் செய்யப்படும் மிகப் பெரும் சேவைகளில் இதுவும் ஒன்று, ஒருவர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூமியை மீட்பதற்கான போராட்டத்தில் இறந்து விட்டார் எனில், மண்ணறையின் குழப்பங்களில் இருந்து அவர் பாதுகாக்கப்படுவதுடன், அவரது நல்லறங்கள் என்றைக்கு முடிவு பெறாது தொடர்ந்து கொண்டே இருக்கும், எதுவரையெனில் உலக முடிவு நாள் வரைக்கு அது தொடர்ந்து கொண்டே இருக்கும், இவரது கணக்கில் அது நல்லறங்களாக் குறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”என்னுடைய உம்மத்தில் ஒரு குழுவினர் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், இன்னும் (இறுதி) நேரம் வரும் நேரத்தில் அவர்கள் தங்களது எதிரிகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.” அப்பொழுது ஒருவர் கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., அவர்களை நாங்கள் எங்கே காண்பது? அதற்கு, ”அவர்கள் பைத்துல் முத்திஸிலும், அதனைச் சுற்றிலும் (வாழ்ந்து கொண்டு) இருப்பார்கள்” என்றார்கள். (அஹ்மத்)
எனவே, மார்க்க அறிஞர்கள் பலர் பாலஸ்தீனியர்கள் தங்களது நிலங்களை மீட்கும் போராட்டத்தில் உறுதியோடு இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கின்றார்கள். இந்தப் போராட்டமானது அல்லாஹ்வினிடத்தில் ஜிஹாத் மற்றும் ரிபாத் என்ற இரண்டு நற்கூலிகளை அவர்களுக்குப் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கின்றது.
ஹஷ்ர் மற்றும் மன்ஷ்ர்
இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாக, எமன் தேசத்தில் மிகப் பெரிய தீ உருவாகி அது மக்களை ஹஷ்ர் என்றழைக்கக் கூடிய பூமிக்குக் கொண்டு வந்து சேர்க்கும், (ஹஷ்ர் என்பது உலகத்தின் கடைக்கோடி) அதாவது ஷாம் தேசத்தில் – இன்றைய சிரியாவில் கொண்டு வந்து சேர்க்கும். இந்த அருள் செய்யப்பட்ட பூமியில் இருந்து தான் இஸ்ராஃபீல் என்ற வானவர், இந்த உலக முடிவு நாள் குறித்தும், இன்னொரு யுகத்தின் ஆரம்பம் குறித்தும் அதன் அடையாளமாக மிகப் பெரும் சங்கோசையை எழுப்புவார்.
மைமூனா பின்த் ஸாத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே பைத்துல் முகத்திஸ் பற்றிக் எங்களுக்குக் கூறுங்களேன் (என்ற பொழுது), ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இது ஹஷ்ர் மற்றும் மன்ஷர் (மரித்தோர்களை உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள்) – ன் பூமியாகும்” என்றார்கள். (தபரானீ)
ஜிஹாதிகளின் மண்ணறை
அருள் செய்யப்பட்ட இந்த பூமியின் ஒவ்வொரு மண் துகளின் மீதும், இஸ்லாத்திற்காக இறைவழியில் உயிர் துறந்த இறைப் போராளிகளின் இரத்தம் தோய்ந்திருக்கின்றது. பல்வேறு போராட்டங்கள் இந்த பாலஸ்தீனப் பூமியில் நடந்திருக்கின்றன. ஹித்தீன், ஐன்ஜாலூத் என்ற யுத்தங்கள் அக்கா மற்றும் அல் குத்ஸ் பூமியில் நடந்த பொழுது ஆயிரக்கணக்கான முஸ்லிம் போராளிகள், இந்தப் பூமியை மீட்கும் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை இங்கு ஈந்துள்ளார்கள். கடந்த 50 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீராத போராட்டத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை இந்தப் பூமிக்காக இழந்துள்ளார்கள். இரண்டாவது இன்திபாழாவுக்குப் பின் அனுதினமும் முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை இழந்து வரக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். புனித மிக்க இந்தப் பூமியில் ஜிஹாதும், இறைவழியில் உயிர் துறப்பதும் கியாம நாள் வரைக்கும் தொடரக் கூடியதாக இருக்கின்றது.
அல் குத்ஸ் – முஸ்லிம்களுக்குச் சொந்தமானது
நான்கு மாத தொடர் முற்றுகைக்குப் பின்னர் ஹிஜ்ரி 16 ல் அல் குத்ஸ் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூமியானது, ”இறுதித் தூதர்” பற்றி அறிவுடைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்பதை அறிந்து உணர்ந்து, முஸ்லிம்களுடன் சமாதானம் செய்து கொள்ள முன் வந்தார்கள். இன்னும் தங்களது வேத நூலில் கண்டவாறு உள்ள அடையாளம் உள்ளவரைத் தவிர வேறு யாரிடமும் இந்த நகரத்தை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் என்று அவர்கள் மறுத்து விட்டார்கள். அந்த அடையாளங்கள் என்னவென்பது குறித்து அவர்கள் முஸ்லிம்களின் முன்னிலையில் தங்களது வேத நூல்களிலிருந்து வாசித்துக் காட்டிய பொழுது, அவ்வாறு குறிப்பிடப்படும் அடையாளங்கள் யாவும் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களையே சுட்டிக் காட்டுகின்றது என்று உணர்ந்து கொண்ட முஸ்லிம்கள், உமர் (ரலி) அவர்களை – அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பாளியை அல் குத்ஸ் நகரத்திற்கு விரைந்து வருமாறு செய்தி அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்களும் அல் குத்ஸ் நகரத்திற்கு புறப்பட்டு வந்து, மிக உயர்ந்த கிறிஸ்தவ போதகர்களது முன்னிலையில் அல் குத்ஸ் நகரத்தில் சாவியை உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அவ்வாறு சாவி ஒப்படைக்கப்பட்ட நேரம் தொழுகை நேரமாக இருந்தமையால், கிறிஸ்தவர்களின் சர்சுக்குள் நின்று தொழும்படி கிறிஸ்தவ பாதிரியார்கள் முன் வந்து வேண்டிக் கொண்ட போதும், உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழ மறுத்ததோடு, நாளை வரக் கூடிய சந்ததிகள் இது உமர் நின்று தொழுத இடம், எனவே இது எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள், அதற்கு நான் இடந் தர மாட்டேன் என்று கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களும் அவரது தோழர்களும் சர்ச்சுக்கு வெளியே இன்னொரு இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
உமருடைய ஒப்பந்தம்
உயர் அந்தஸ்தில் இருந்த பாதிரியார்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்கள், அதன்படி அல் குத்ஸ் ல் உள்ள அனைத்து மக்களுடைய உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு, சுதந்திரமான முறையில் அவரவர் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், இன்னும் வணக்க வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கும் உறுதி மொழி அளிக்கப்பட்டது. இன்னும் இந்த ஒப்பந்தத்தில், அந்த நகரத்தில் வாழக் கூடிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடையேயான உரிமைகள் குறித்தும் கூறப்பட்டிருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய இந்த ஒப்பந்தம் குறித்து எழுதும் வரலாற்று ஆசிரியர்கள், ”உலக வரலாற்றில் மிகவும் நீதமான முறையில் செய்து கொள்ளப்பட்டதொரு ஒப்பந்தம்” என்று வர்ணிக்கின்றார்கள். இஸ்லாமிய அரசுக்கு முந்தைய அரசான கிறிஸ்தவர்களின் பைஸாந்திய ஆட்சியானது, யூதர்களைக் கொலை செய்ததுடன், யூதர்கள் பைத்துல் முகத்தஸ் எல்லைக்குள் வாழ அனுமதி மறுக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் பைத்துல் முகத்தஸ் வந்த நாள் முதல் யூதர்கள் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்கினார்கள். றுயடைiபெ றுயடட என்றழைக்கப்படக் கூடிய பகுதியானது முஸ்லிம்களின் வக்ஃப் க்குச் சொந்தமாக இருந்த போதிலும் அதனை தரிசித்துச் செல்வதற்கு யூதர்களுக்கு முஸ்லிம்கள் அனுமதி வழங்கினார்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியை வரவேற்றதுடன், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மத சகிப்பத் தன்மையுடன் கூடிய புதிய வாழ்க்கையை அவர்கள் பாலஸ்தீனப் பூமியில் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தங்களது மார்க்கத்தை பூரண சுதந்திரத்துடன் பின்பற்றவும், அவர்களது சமூக நடைமுறைகளில் அவர்கள் சொந்த நடைமுறைச் சட்டங்களைப் பேணிக் கொள்ளவும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டார்கள். இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டின் இறுதியில் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அநேகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள், மிகவும் குறைந்த சதவிகித மக்களே யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யூத ஆக்கிமிப்பு
பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் அல் குத்ஸ் ன் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஆக்கிரமிப்புப் பகுதிகள் என்று குறிப்பிடுகின்றன. அதன் மீது இஸ்ரேலுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் முயற்சிகள் மூலமாக அல்குத்ஸ் நகரத்தை அவர்களுக்குச் சொந்தமான நகரமாக மாற்றிமைத்து விடலாம் என்று கருதுகின்றார்கள், இதனை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்று அவர்கள் கனவு கொண்டிருக்கின்றார்கள். அல் குத்ஸ் என்பது இஸ்ரேலின் பிரிக்க முடியாத பகுதி என்றும் அவர்களது தலைநகரம் என்றும் அறிக்கை வாசிக்கின்றார்கள். இஸ்ரேலானது அரபுக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான ஏராளமான நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இஸ்ரேலில் குடியேறும் யூதர்களுக்கு புதிய புதிய குடியிருப்புக்களை, இந்த நகரத்தைச் சுற்றிலும் கட்டியமைத்துக் கொண்டு வருகின்றது. இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அரபுக்களை வலுக்கட்டாயமாக பாலஸ்தீன் பூமியை விட்டு வெளியேற்றத் தூண்டுகின்றது. பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதுடன், அவ்வாறு வெளியேறாதவர்கள் தங்களது வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதி வழங்க மறுப்பதுடன், புதிய வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அல் குத்ஸ் ன் மக்கள் தொகை சதவிகிதத்தை மாற்றி அமைக்கும் பொறுட்டு, பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்து, அதில் யூதர்களுக்கான குடியிருப்புக்களைக் கட்டி அதில் யூதர்கள் தங்க வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றார்கள். எஞ்சியிருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு அடையாளங்களைத் துடைத்தெறிவதற்காக நகரத்தில் பல்வேறு மாற்றங்களை இஸ்ரேலிய அரசு செய்து வருகின்றது. இஸ்லாமிய வரலாற்றுச் சின்னங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மண்ணறைகள் போன்றவற்றை தகர்த்து அவற்றில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் இந்த மாற்றங்களைச் செய்து வருகின்றது. அரபு மற்றும் இஸ்ரேலிய சிந்தனையாளர்களின் கணிப்புப்படி, அல் குத்ஸ் ல் வீற்றிருக்கின்ற மஸ்ஜிதுல் அக்ஸாவைத் தகர்த்தெறிவது தான் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் அடிப்படை நோக்கம் என்று இஸ்ரேலின் கபட எண்ணத்தை தோலுரிக்கின்றார்கள்.
பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்
கடந்த 1967 முதல் பைத்துல் முகத்தஸின் மீது தனிநபர்களும், இஸ்ரேலிய அரசும் பல்வேறு விதமான தாக்குதல்களைத் தொடுத்திருக்கின்றார்கள். அதன் மூலம் அதன் நிர்மானத்தை தகர்ப்பதற்கும், முஸ்லிம்களை அச்சுறுத்தி, பைத்துல் முகத்தஸ் மற்றும் அல் குத்ஸ் நகரத்தின் மீதான உரிமையை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, யூதர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். அவற்றில் சிலவற்றை நாம் இங்கே சுருக்கமாகத் தருகின்றோம். விரிவான தகவல்களுக்கு எமது இணையத்தில் ”சமூக அவலங்கள்” பகுதியில் பாலஸ்தீன் என்ற தலைப்பிற்குச் சென்று பார்க்கவும்.
1969, ஆகஸ்டு மாதம் 21 ம் தேதியன்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ரோஹன் என்பவன் தன்னை ‘சர்ச் ஆஃப் காட்’ என்ற அமைப்பினைச் சேர்ந்தவன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, பைத்துல் முகத்தஸ் பள்ளியை தீ வைத்துக் கொளுத்த முயற்சி செய்தான். விலைமதிக்க முடியாத, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தேக்கு மரத்தைக் கொண்டு ஸலாஹுத்தீன் அய்யூபி – இனால் செய்யப்பட்ட மிம்பர் (ஜும்ஆ குத்பாவின் பொழுது இமாம் நின்று உரையாற்றும் பீடம்) முற்றிலும் சேதமுற்றது. இது ஸ்பெயினில் உள்ள அலிப்போ நகரத்தில் இருந்து சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி – இனால் பைத்துல் முகத்தஸ் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1982, அக்டோபர் மாதத்தில், பைத்துல் முகத்தஸை தகர்க்க முயற்சி மேற்கொண்ட கச் என்ற இயக்கத்தின் உறுப்பினர் கைது செய்யப்பட்டான். யோயல் லெர்னர் என்ற அந்த யூதன், குப்பத்துல் ஸஹ்ரா என்றழைக்கப்படக் கூடிய பள்ளியின் ஒரு பகுதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்த பொழுது, கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டான்.
1982 ஏப்ரல் மாதத்தில், ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரன் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கண்மூடிச் சுட்டதன் காரணமாக, பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். அவன் புனிதமிக்க ஆலயத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றவே இதனைச் செய்தேன் என்றான். பின்னர், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
1983 மார்ச் 10 ம் தேதியன்று, மேய்ர் கானே என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 45 நபர்கள், மஸ்ஜித் அல் அக்ஸா மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள். அவர்களது திட்டத்தை நிறைவேற்றுதவற்கு முன்பதாக சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார்கள். கடந்த 15 வருடங்களாக இது போன்ற எண்ணற்ற கொலை வெறித் தாக்குதல்கள் நிறைவேறாமலேயே தடுக்கப்பட்டிருக்கின்றன.
1983 ம் ஆண்டு யூத ரப்பியான யஹுதா கெட்ஸ் என்பவனது முயற்சியால், மேற்குச் சுவற்றின் பக்கம் சுரங்கம் தோண்டப்பட்டது. இந்தச் சுரங்கமானது பழைய நகரத்தின் வழியாகச் செல்கின்றது. இவ்வாறு தோண்டப்படக் கூடிய சுரங்கத்தின் பணிகளை முஸ்லிம்களின் வக்ஃப் உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதன் விளைவாக மஸ்ஜிதுல் அக்ஸாவின் கட்டுமான உறுதி பலவீனப்படுத்தப்பட்டது, இதன் காரணமாக பள்ளியின் அஸ்திவாரமானது கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உறுதியை இழந்து வருகின்றது. மேலும், இவ்வாறு தோண்டப்பட்ட சுரங்கத்தின் பகுதிகளை 1996 ல் பார்வையாளர்களின் வருகைக்காகத் திறந்தும் விடப்பட்டுள்ளது.
யூதர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால், மஸ்ஜிதுல் அக்ஸா வைத் தகர்த்து விட்டு, அதன் மீது ”மூன்றாவது கோயில்” என்பதனை அவர்கள் நிர்மாணிக்க விரும்புகின்றார்கள். இதற்காக அதன் கட்டுமாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கும் பணிகளை யூத இஸ்ரேலிய அரசு சிறிது சிறிதாக நிறைவேற்றி வருகின்றது. இதற்காக பல வருடங்களை அது செலவழிக்கவும் தயாராக இருக்கின்றது. இஸ்ரேலிய அரசினாலும், இன்னும் உலகின் வல்லரசுகளின் ஆதரவோடும் முஸ்லிம்களின் மீது பிரயோகிக்கப்படும் அச்சுறுத்தல்களுடன், இந்த மஸ்ஜிதுல் அக்ஸாவின் தகர்ப்புப் பணிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் மஸ்ஜிதுல் அக்ஸாவை முழுமையாகத் தகர்த்து விடுவதற்குண்டான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த இவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே அவர்களது முயற்சிகளின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறு நடைபெற்று விடுமானால், முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்களினூடாக பைத்துல் முகத்தஸையும், அதன் நகரமான அல் குத்ஸ் ஐயும் முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடும் வாய்ப்புக் கூட இனி கானல் நீராகி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடும். கடந்த காலங்களில், அவர்களின் ஆன்மீகத் தலைவர்கள் பலர் தங்களை மெஸையா அல்லது மூஸா என்று அழைத்துக் கொண்டு, தாங்கள் யூதர்களைக் காப்பாற்றுவதற்கும் அல்லது மஸ்ஜிதுல் அக்ஸா இருந்த இடத்தில் கோயில் கட்டவும் பிறப்பெடுத்திருக்கின்றோம் என்றும் தங்களை அந்த ஆன்மீகத் தலைவர்கள் இனங்காட்டிக் கொண்டார்கள். இந்தப் பிரச்னையை மையமாக வைத்து, இதனை ‘ஜெருஸலம் ஸின்;ட்ரோம்’ என்றும் அழைக்கின்றார்கள்.
யூதர்களின் தங்களின் இந்த முயற்சியில் வெற்றி பெற்று, பள்ளியை தகர்த்து விடுவார்களா என்றால், நடக்க வாய்ப்பிருக்கின்றது என்றே சொல்லலாம். மஸ்ஜிதுல் அக்ஸா இத்தகைய தகர்ப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படும் என்று முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இத்தகையவர்களது நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் யூத தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளின் அசமந்தப் போக்குகள் யாவும், மஸ்ஜிதுல் அக்ஸா தகர்ப்படக் கூடிய சாத்திக் கூறுகள் அதிகம் இருப்பதைத் தான் எடுத்துக் காட்டுகின்றன. அல்லாஹ் இத்தகைய இழிவுகளிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும், இன்னும் முழு முஸ்லிம் உம்மத்துக்களையும் பாதுகாப்பானாக.
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலைப் பாதுகாப்பது எவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின் மீதான அடிப்படைக் கடமையாக இருக்கின்றதோ, அதைப் போலவே மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பதும் அடிப்படைக் கடமையாகும். இதிலிருந்து விலகி இருப்பதானது, மஸ்ஜிதுல் ஹரமைப் பாதுகாப்பதனின்றும் விலகி இருப்பதற்குச் சமமாகும்.
அமைதி ஒப்பந்தங்களும், வாக்குறுதிகளும்
இஸ்லாம் எப்பொழுதும் அமைதிக்கு எதிராக இருந்தது கிடையாது. இஸ்லாம் என்றாலே அமைதி, சாந்தி என்ற பொருளைக் குறிக்கக் கூடியது, இன்னும் அல்குத்ஸ் என்பது அமைதி நகரமாகும். இஸ்லாத்தின் எதிரிகள் அமைதியை விரும்புவார்கள் என்று சொன்னால், முஸ்லிம்கள் என்றுமே அதற்குத் தடைக்கல்லாக நின்றதில்லை. ஆனால், அந்த அமைதியானது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளியாகக் கூடிய விருப்பமாக இருக்க வேண்டும், நீதமானதாக பாரபட்சமின்றி இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் சமூகத்தை வலுக்கட்டாயமாக அமைதி ஒப்பந்தத்திற்குள் திணிப்பது, அதன் மீது பலாத்காரத்தையும், அடக்குமுறையையும் பிரயோகிப்பது, அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்க அல்லது அற்பணிக்கக் கட்டாயப்படுத்துவதாக அது இருக்கக் கூடாது. அவர்களுக்குரிய உரிமைகளில் எதனையும் கைவைக்காது, அதில் நேர்மையாக நடந்து கொண்டு அதன் மீது அமைதியை விரும்புவது பயன்தரும்.
முழு முஸ்லிம் உம்மத்திற்கும் என்று ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் விரும்பாத ஒருவரை முன்னிறுத்திக் கொண்டு, அவரின் மீது பலாத்காரத்தைப் பிரயோகித்து அந்த பலாத்காரத்தின் பின்னணியுடன் அமைதி ஒப்பந்தங்களைக் கொண்டு வருவதும், அதற்குப் பின்னணியாக உலக வல்லரசுகளின் வற்புறுத்தலும் இருப்பது, அமைதிக்கான முன் முயற்சியாக இருக்காது. இன்றைக்கு இருக்கின்ற பாலஸ்தீன அதிகார சபை மேற்கண்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்த அமைதி ஒப்பந்தம் நீதமானதாக அடக்குமறையற்றதாக இருக்காது. மாறாக, அடக்குமுறையும், அநீதியும், முஸ்லிம்களது உரிமை குறித்த கருத்துவேறுபாடுகளும் தான் தலைதூக்கி நிற்கும். இவ்வகையான ஒப்பந்தங்கள் அந்தப் பிராந்தியத்தில் அமைதியை அல்லது நிச்சயமான தன்மையைக் கொண்டு வந்து விடாது. அநீதத்திற்கு மேல் அநீதம் நீடிப்பதும், அதன் பாதிப்புகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வன்முறைகள் அதிகரிப்பதற்கே வழி அமைக்கும்.
முஸ்லிம்களே இறுதி வெற்றியாளர்கள்..!
திருமறைக் குர்ஆனும், இன்னும் நபிமொழிகளும், முஸ்லிம்கள் தங்களது போராட்டத்தில் வெற்றி பெற்று புனிதமிக்க பூமியை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்வு கூறுகின்றன. இதற்கான அறிகுறிகளை முஸ்லிம்கள் மத்தியில் காண முடிகின்றது, முஸ்லிம்கள் வெற்றி பெற்று தங்களது அழைப்புப் பணியை விரைவு படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை சமீப கால நிகழ்வுகள் நற்செய்தி பகர்கின்றன.
உலக அளவில், பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன, இந்த உலகைப் பொறுத்தவரை அல்லாஹ் மாற்றத்தை அடிக்கடி கொண்டு வரக் கூடியவனாக இருக்கின்றான். அது அவனது திட்டங்களில் உள்ளதொன்றாகவும் இருக்கின்றன. இன்றைக்கு இருக்கக் கூடிய பலவீனங்கள் தொடரும் என்பதற்கில்லை. இந்த உலக அமைப்பின் சட்டங்கள் மாறி மாறி வரக் கூடியது என்று அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான் : ”இந்த உலகத்தின் வளங்களை பல்வேறு சமுதாயங்களுக்கிடையே மாறி மாறி வரச் செய்கின்றேன்” என்று கூறுகின்றான். பலவீனர்கள் அதிகாரம் படைத்தவர்களாக மாறி விடுவார்கள், இன்னும் அதிகாரம் படைத்தவர்கள் பலவீனர்களாக மாறி விடுவார்கள். இது அல்லாஹ்வின் நியதி. இரண்டாவது சிலுவை யுத்தத்தின் பொழுது, தொடர்ந்து 92 வருடங்களாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி இருந்த பைத்துல் முகத்தஸ் மீண்டும் கைப்பற்றப்பட்டது, 92 வருடங்களுக்குப் பின்பு அதனை முஸ்லிம்கள் மீட்டெடுத்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.
முஸ்லிம்கள் எப்பொழுதும் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. இன்னும் இன்றைக்கு இருக்கும் நிலையை வைத்து சரணடையும் போக்கை என்றைக்கும் முஸ்லிம்கள் கைக்கொள்ளக் கூடாது. பலவீனத்தின் காரணமாக முஸ்லிம்களிடையே நம்பிக்கையீனம் காணப்படுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில், ”(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் – மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.” (என்று முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தைரியமளிக்கின்றான்) (47:35) இறைவன் நாடினால் விரைவில் ஒரு ஸலாஹுத்தின் அல் அய்யூபியை இஸ்லாமிய உலகம் பெற்றுக் கொள்ளும். அத்தகைய நம்பிக்கையாளர் ஒருவர் கிடைத்து விட்டால், விரைவில் முஸ்லிம்கள் தாங்கள் இழந்த பெருமைகளை மீட்டெடுப்பார்கள், அப்பொழுது கடந்த 1187 ம் வருடம் அதிக இரத்த இழப்பீடில்லாமல் எவ்வாறு பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்டதோ, அவ்வாறு கைப்பறப்பட்டு, அருள் செய்யப்பட்ட அந்த பூமியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் முஸ்லிம்கள் கொண்டு வருவார்கள்.
இன்றைக்கு இருக்கும் நிலை மாற வேண்டுமெனில் முஸ்லிம்கள் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில், ”எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (13:11) இன்றைக்கு இந்த உம்மத்தில் இதற்கான மாற்றங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. கடந்த மூன்று தாசப்தங்களாக இஸ்லாமிய உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாவும், வெற்றிக் கனி கிட்டவே இருக்கின்றது என்பதனை உரத்து முழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் முக்கிய அறிகுறி எதுவென்றால் பாலஸ்தீன மக்கள் எடுத்து நடத்தி வரும் ”இன்திபாழா” என்ற போரட்டமாகும். இந்தத் தொடர் போரட்டம் மூலமாக முஸ்லிம்கள் தங்களது போராட்டத்தை இடைவிடாது எடுத்துச் செல்வதோடு, அதில் ஏற்படும் கஷ்டங்களையும், சிரமங்களையும் அல்லாஹ்விற்காகத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் வெற்றி குறித்து, அகில உலகங்களையும் படைத்த வல்ல ரஹ்மான் முஸ்லிம்களுக்கு நற்செய்தியையே வழங்கி இருக்கின்றான். சூரா அல் இஸ்ராவில் இடம் பெற்றுள்ள இறைவசனங்கள் உண்மையான மற்றும் பொய்யான வாக்குறுதிகள் பற்றியும், இன்னும் புனித பூமியை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஈஸா (அலை) அவர்கள் நிச்சயமாக இந்தப் பூமிக்குத் திரும்பி வந்து, அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சத்திய மார்க்கமாக இஸ்லாம் ஒன்றே இருக்கின்றது என்பதற்கான சாட்சியத்தை வழங்குவார்கள். ஈஸா (அலை) அவர்களின் வருகை என்பது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கிடையே நடைபெறக் கூடிய தொடர்ச்சியான போரட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்த தேற்றவாளராகிய ஈஸா (அலை) வருவார், சத்தியத்தைப் பற்றியும், அல் அக்ஸா மற்றும் அருள் செய்யப்பட்ட பூமியைப் பற்றியும், அதன் மீதான உண்மைகள் பற்றியும் உலகிற்கு வெளிச்சப்படுத்துவார்.
வரலாற்றுப் பக்கங்களில் ..,
ஆதம் (அலை) அவர்கள், மக்காவில் கஃபா ஆலயத்தை நிறுவிய 40 ஆண்டுகள் கழித்து இந்தப் பள்ளியைக் கட்டினார்கள். இன்னும் சில அறிவிப்புகளின்படி, இந்த இரண்டு பள்ளிகளையும் வானவர்கள் கட்டினார்கள் என்று வருகின்றது. இதனடிப்படையில், மஸ்ஜித் அல் அக்ஸா என்பது யூதர்களின் சிறப்பு வணக்கத்தளமன்று. மேலும், இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு முன்பிருந்தே இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டு விட்டது
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமை இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களும் மறு கட்டமைப்புச் செய்த பின் உள்ள 40 ஆண்டுகள் கழித்துத் தான், மஸ்ஜிதுல் அக்ஸாவை இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரது மகனார் இஸ்ஹாக் (அலை) அவர்களும் புனர்நிர்மாணம் செய்கின்றார்கள்.
இஸ்ஹாக் (அலை) அவர்களது மகனார் யாக்கூப் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீண்டும் புனர்நிர்மாணம் செய்கின்றார்கள். இந்தப் பணியில் அதற்கு அருகாமையில் இருந்த பாறைக் குன்றுகளும் இணைக்கப்படுகின்றன. இந்தப் பள்ளியை இறைநம்பிக்கை கொண்ட அனைவரது வணக்க வழிபாட்டிற்காக, அதாவது ஹீப்ரு பேசக் கூடிய அல்லது ஹீப்ரு மொழியைப் பேசாத அனைவருக்கும் திறந்து விடப்படுகின்றது.
யாக்கூப் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் எகிப்துக்குச் சென்றதன் பின்னர், இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஹீப்ரு மொழி பேசாத யூசுப் (அலை) அவர்கள், மஸ்ஜிதின் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார்கள். அதில் தனது வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
யூதர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்பி வந்த பின், யஹ்யா வுக்குப் பின் வந்தவரான அல் இஸ (ஜோஸுவா – துழளாரய) என்ற இறைத்தூதர் அந்தப் பாறையின் மீது மூஸா அவர்களின் கூடாரத்தை அமைத்து, அதனை நோக்கி தொழுது வருகின்றார்.
தாவூத் (அலை) அவர்கள் இஸ்ரேல் என்ற சாம்ராஜ்யத்தை நிர்மாணிக்கின்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை புனர்நிர்மாணம் செய்வதற்காக வேண்டிய தயாரிப்புகளைச் செய்கின்றார், இருப்பினும் அதனை நிவேற்றுவதற்கு முன்பாக இறந்து விடுகின்றார். அவருக்குப் பின் அவரது மகனார் சுலைமான் (அலை) அவர்கள் பாலஸ்தீனக் குடிமக்களின் உதவியுடன் மஸ்ஜிதைப் புனர் நிர்மாணம் செய்கின்றார்கள். சுலைமான் (அலை) அவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்தப் பள்ளியானது முன்னெப்பொழுதும் உலகம் கண்டிராத அளவுக்கு கலைநயத்துடன், சிறப்புக் கவனத்துடன் அலங்கரிக்கப்பட்டது. யூதர்கள் எப்பொழுதும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியை ‘சுலைமான் ஆலயம்’ என்று உரிமை கொண்டாடி வருகின்றார்கள், ஆனால் இந்தப் பள்ளியை அவர் முதன் முதலாக நிர்மாணிக்கவில்லை, அவருடைய பிறப்பிற்கு முன்னேயே கட்டப்பட்டு விட்டது.
கி.மு.586 ல் பாபிலோனிய மன்னன் நெபுஜட்நெஸ்ஸார் என்பவன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்து இந்தப் பள்ளியை நிர்மூலமாக்கினான். யூதர்களைச் சிறைப்;பிடித்துக் கொண்டு, பாபிலோனிற்குத் திரும்பினான்.
யூதர்கள் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். எஸ்ரா என்பவர் இந்தப் பள்ளியில் பல்வேறு புனர் நிர்மாணப் பணிகளைச் செய்கின்றார்.
யூதர்கள் யஹ்யா (அலை) அவர்களையும், ஜக்கரிய்யா (அலை) அவர்களையும் கொலை செய்கின்றார்கள், இன்னும் ஈஸா (அலை) (இயேசு) அவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நிர்மூலமாக்குகின்றார்கள், யூதர்களைப் பாலஸ்தீனத்தை விட்டும் விரட்டியடிக்கின்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அல் குத்ஸ் நகரத்தின் சாவியைப் பெற்றுக் கொண்ட பொழுது, பள்ளியைச் சுற்றிலும் யூத மற்றும் கிறிஸ்தவ கோயில்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பள்ளி வளாகத்தை மக்கள் கைவிட்டு விட்டு, அந்தப் பகுதியை குப்பை கூளங்களைக் கொட்டும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலான புனர் நிர்மாணம் செய்த இஸ்லாமிய ஆட்சித் தலைவராவார். அவர் ஹரம் அல் ஷரீஃப் என்ற பகுதிக்கு அருகில் பாறைக்கு முன்னதாக சிறிய பள்ளி ஒன்றைக் கட்டினார்.
உமைய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் பின் மர்வான் என்பவர், பாறையின் மீது இன்றிருக்கும் மிகப் பெரிய மஸ்ஜிதைக் கட்டினார், அதன் கும்பாஸை தங்க மூலாம் பூசி அலங்கரித்ததுடன், அதனை அல் கியமா என்ற சர்ச் ன் அழகை ஒத்ததாக அதனை அழகூட்டினார்.
அவரை அடுத்து வந்த இஸ்லாமிய கலீபாக்களில் பலர் பல்வேறு நிர்மாணப் பணிகளைச் செய்தனர். இந்த இரு பள்ளிகளுடன் கல்விக் கூடங்களையும், மருத்துவமனைகளையும், அனாதை இல்லங்களையும், பயணிகள் தங்குவதற்கென ஓய்வு அறைகளையும் இந்த வளாகத்துடன் சேர்த்துக் கட்டினார்கள்.
கி.பி.1099 ல் சிலுவை யுத்தக் காரர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கைப்பற்றிக் கொண்டதுடன், 70 ஆயிரம் பொதுமக்களையும் கொன்றொழித்தார்கள். அவர்களில் பலர் பள்ளியின் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒன்று கூட்டப்பட்டு சர்ச்சுக்குள் வைத்து தீக்கிரையாக்கிக் கொல்லப்பட்டனர்.
அல் குத்ஸ் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் பெருமுயற்சியில் மீண்டும் முஸ்லிம்களின் கைகளுக்கு வருகின்றது. மஸ்ஜித் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்படுகின்றது. பாலஸ்தீனத்தை விட்டு அகதிகளாக அலைந்து திரிந்த யூதர்களை பாலஸ்தீன் வந்து குடியேற ஸலாஹுத்தீன் அவர்கள் அனுமதிக்கின்றார்கள். இன்னும் அல் குத்ஸ் க்குள் வரவும் அனுமதி வழங்குகின்றார்கள்.
பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அல் குத்ஸ், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் பாறைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் மீது எப்பொழுதும் சிறப்புக் கவனமெடுத்துச் செயல்படுகின்றார்கள். மஸ்ஜிதினைப் பராமரிப்பதற்காகவென்று எராளமான பொருளாதாரத்தைச் செலவிடுகின்றார்கள்.
1947 ல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீன மண்ணைப் பிரிப்பதற்கு அனுமதியளிக்கின்றது. அல் குத்ஸ் ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது என்று அறிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பிரிவினைச் சட்ட மூலத்தையும் மீறி, இஸ்ரேல் என்ற நாடு உதயமாவதற்கு முன்னாள், 1947 ல் யூதர்களைக் கொண்டதொரு படையானது அல் குத்ஸ் ன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றுகின்றது.
1948 ல் யூதர்களுக்கென்ற ஒரு தனி நாடாக இஸ்ரேல் பிரகடனப்படுத்தப்படுகின்றது. மேற்குக் கரையானது ஜோர்டானிற்குச் சொந்தமாக்கப்படுகின்றது. காஸாப் பகுதிகள் எகிப்தின் கட்டுபாட்டிற்குள் வருகின்றன. அல் குத்ஸ் ஐக்கிய நாடுகளின் கட்டுபாட்டிற்குரியதென்றும், ஜோர்டானின் நிர்வாகத்தின் கீழ் அது இருக்குமென்றும் முடிவாகின்றது.
1967 ல் அரபுக்களின் மீது ஒரு யுத்தத்தை இஸ்ரேல் திணிக்கின்றது, அல் குத்ஸ் ன் கிழக்குப் பகுதியையும், மேற்குக் கரையையும், காஸாப் பகுதிகளையும், சிரியாவுக்குச் சொந்தமான கோலன் மலைக் குன்றுகளையும் இன்னும் எகிப்திற்குச் சொந்தமான சினாய் பாலைவனங்களையும் இஸ்ரேல் தனதாக்கிக் கொள்கின்றது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.