Breaking News
recent

பாகப்பிரிவினை சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சொத்து வாங்கும்போது அதை விற்பவர் எந்த வகையில் அந்த சொத்துக்கு உரிமை உடையவராக இருக்கிறார் என்பதை நன்கு விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர் விற்பனை செய்யக்கூடிய சொத்துக்கான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அந்த ஆவணங்கள் அவருடைய பெயரில் தான் இருக்கிறதா? அவருடைய பெயருக்கு எப்படி மாற்றப்பட்டது? அவர் அந்த உரிமையை பெற்றது எப்படி? என்பது போன்ற விவரங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவருடைய குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் சொத்தை விற்கக்கூடிய சொத்துக்கான உரிமையை பெற்று இருந்தால் அந்த தாய் பத்திரங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக அவரிடம் இருப்பது செட்டில்மெண்ட் (தான) பத்திரம் அல்லது பாகபிரிவினை பத்திரமாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
செட்டில்மெண்ட் பத்திரம்
தன்னுடைய சொத்தை மற்றொருவருக்கு தானமாக எழுதி கொடுப்பது தான் செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும். தாய் அல்லது தந்தை பிள்ளைகளுக்கு சில சமயம் இந்த பத்திரம் மூலம் சொத்தை எழுதி கொடுப்பார்கள். அந்த பத்திரத்தில் ஏதேனும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? என்பது தான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் சொத்து யாருக்கு தானமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அவருக்கு அந்த சொத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு கொடுக்கப்பட்டு இருந்தால் அந்த சொத்தை அவர் அனுபவிக்க முடியுமே தவிர அவரால் சொத்தை விற்பனை செய்ய முடியாது.
அவருடைய வாழ்நாளுக்கு பிறகு சொத்தின் உரிமையை பெறுபவருக்கு தான் விற்பனை செய்யும் உரிமை இருக்கலாம் என்பதால் தீவிரமாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை கவனிக்காமல் சொத்தை வாங்கினால் சிக்கலை சந்திக்க நேரிடும். இதுதவிர சொத்தை தானமாக எழுதி கொடுப்பவருக்கு, செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யும் உரிமையும் இருக்கிறது. பெரும்பாலும் ரத்து செய்யப்படுவது இல்லை என்ற நோக்கிலேயே பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். எனினும் அதுபற்றி எதுவும் குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.  
செட்டில்மெண்ட் பத்திரத்திலும் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஒன்றும் இருக்கிறது. அந்த சொத்து கூட்டு குடும்ப சொத்தாக இருந்தால் அதை செட்டில்மெண்ட் செய்ய தனிப்பட்டமுறையில் யாருக்கும் உரிமை கிடையாது. இப்படி இருக்கையில் செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் சொத்தை வாங்கும்போது உஷாராக இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பாகப்பிரிவினை பத்திரம்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சொத்தை பாகம், பாகமாக பிரித்து கொடுக்கப்படும் பாகப்பிரிவினை பத்திரம் மூலம் சொத்தை வாங்கும்போதும் அந்த சொத்தை பெற்றவருக்கு அதை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது விற்பனை செய்வதற்கும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மேலும் சொத்தை பாகப்பிரிவினை செய்து கொடுத்தவர் அந்த சொத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா? அதுபற்றி பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.
இதுதவிர பாகப்பிரிவினை சொத்தை பெற்றவர் தனது பெயருக்கு சொத்தை மாற்றி விட்டாரா? அவர் பெயரில் பட்டா பெற்று இருக்கிறாரா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் சொத்தை பாப்பிரிவினை மட்டும் செய்து இருக்கலாம். அவருடைய பெயரில் பட்டா இருக்காது. அப்படி இருக்கையில் அந்த சொத்தை வாங்கும்போது சிக்கல் ஏற்படலாம். எனவே சொத்தை விற்பவர் பெயரில் பட்டா மாற்றப்பட்டு இருக்கிறதா? அதற்கான தீர்வை செலுத்தி வருகிறாரா? அந்த ரசீது இருக்கிறதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.