Breaking News
recent

நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக விசா மோசடி! #எச்சரிக்கை செய்தி

மன்னார்குடி அருகே உள்ள கட்டக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 41). இவர் நேற்று முன்தினம் இரவு, பாண்டி பஜார் போலீசில் முதலில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனு பின்னர் மாம்பலம் போலீசிற்கு மாற்றப்பட்டது. புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் ஆசை எனக்குள் இருந்தது. இந்த நிலையில் எனது நண்பர் ஒருவர் மூலம் செல்வம் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். செல்வம் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டு ஆவார். செல்வம், என்னை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

திருச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில், மலேசிய நாட்டைச் சேர்ந்த சாந்தி மற்றும் ராஜா ஆகியோரை, செல்வம் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மலேசிய பெண் சாந்தி, எனக்கு நியூசிலாந்து நாட்டில், மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அவரது பேச்சை நம்பி அவர் கேட்ட தொகை ரூ.6.5 லட்சத்தை கமிஷனாக கொடுத்தேன்.

என்னைப்போல மேலும் 5 பேரும் வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்தனர். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்தார்.

இந்த புகார் மனுவை கொடுத்து விட்டு, பாண்டியன், தன்னை ஏமாற்றிய சாந்தி உள்பட 4 பேரும், தியாகராயநகர், சரோஜினி தெருவில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் தமிழ்செல்வன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

லாட்ஜில் தங்கி இருந்த மலேசிய பெண் சாந்தி (வயது 44), ஏஜெண்டு செல்வம் (49), அவரது கூட்டாளி ராஜா (45) மற்றும் முகமது ஆசான் ஆகிய 4 பேர் லாட்ஜில் வைத்து கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவர்கள் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
நன்றி: மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.