Breaking News
recent

shcilestamp.com போலிகளைத் தவிர்க்க மின்னணு முத்திரைத்தாள்

போலி முத்திரைத்தாள் மோசடி இந்தியாவை உலுக்கியபோது, தாம் வாங்கிய முத்திரைத்தாள் அசலா, போலியா என்ற அச்சம் பலருக்கும் எழுந்தது. அதனால், சாதாரண மக்களுக்குப் பிரச்னைகள் ஏதும் எழாத போதும், இந்த சர்ச்சையைத் தவிர்க்க இப்போது வழி இருக்கிறது.
மின்னணு முத்திரைத்தாள்கள் (இ-ஸ்டாம்ப் பேப்பர்) ஏற்கெனவே புழக்கத்துக்கு வந்துவிட்டாலும், பலருக்கும் அது பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லை.
மின்னணு முத்திரைத்தாள்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கின்றன.
விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் மாநில அரசு இறங்கியுள்ளது.
மின்னணு முத்திரைத்தாள்கள் நமது பகுதிக்கு வரும் வரை, வாங்கும் முத்திரைத்தாள்கள் அசலானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முத்திரைத்தாள்களில், விற்பனையாளரின் பெயர், கையொப்பம் இடம்பெற்றிருக்கும். எந்தக் கருவூலத்தில் இருந்து பெறப்பட்டது என்பதற்கான முத்திரையும் இடப்பட்டிருக்கும்.
அதிக விலைமதிப்புடைய முத்திரைத்தாள்களில், சம்பந்தப்பட்ட உதவிக் கருவூல அதிகாரியின் கையொப்பமும், அலுவலக வட்ட முத்திரையும் இடப்பட்டிருக்கும். இவற்றைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
அரசு வழிகாட்டி மதிப்புக்கு மட்டுமே முத்திரைத்தாள் வாங்க வேண்டும் என்பதில்லை. உண்மையான மதிப்புக்கு வாங்கினால், உங்களிடம் இருக்கும் பணம் கறுப்புப் பணம் இல்லை; முறையாகச் சம்பாதிக்கப்பட்டது என்ற உத்தரவாதம் உங்களுக்குக் கிடைக்கும்.
எல்லோருமே நல்ல நாளில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர். முத்திரைத்தாளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில், எத்தனை சதவீதத்துக்கு முத்திரைத்தாள் கொடுத்தாலும் வாங்கி அதில் எழுதலாம். மீதமுள்ள தொகையை, சார்பதிவாளர் அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்திவிடலாம். அத்தொகை வரவு வைக்கப்பட்டதற்கு அத்தாட்சியாய், முத்திரைத்தாளின் பின்பக்கத்தில் எழுதி, ஒப்புகை வழங்கப்படும். இதற்கு சட்டப்பிரிவு 41 வழி செய்கிறது.
எங்கு கிடைக்கும்?
மின்னணு முறையில் முத்திரைத்தாள் வழங்க, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எஸ்எச்சிஐஎல்) நிறுவனத்தை மத்திய ஆவணக் காப்பக முகவராக அரசு நியமித்துள்ளது.
பெரும்பாலும் சாதாரண முத்திரைத்தாளைக் கூடுதல் விலைகொடுத்துத்தான் வாங்குகிறோம். மின்னணு முத்திரைத் தாளை வாங்கும்போது கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தட்டுப்பாடு என்ற பிரச்சினை இன்றி எப்போதும் முத்திரைத்தாள் கிடைக்கும். ஒரே ஒரு முத்திரைத்தாளைப் பயன்படுத்தி எவ்வளவு சொத்து மதிப்பையும் பதியலாம்.
ரொக்கம், வங்கி வரைவோலை, ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி என வங்கிக் கணக்கிலிருந்து மாற்றிக்கொள்ளுதல் போன்ற பல்வேறு வகைகளிலும் மின்னணு முத்திரைத்தாளை பெறமுடியும்.
மின்னணு முத்திரைத் தாளின் நம்பகத்தன்மையை தொலைபேசி அழைப்பின் மூலம் உறுதி செய்ய முடியும்.
எஸ்எச்சிஐஎல் நிறுவனத்தின் கிளைகள், இந்தியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப்் காமர்ஸ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி ஆகிய வங்கிகளின் கிளைகளில் (தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகள்) மின்னணு முத்திரைத்தாள் கிடைக்கும்.
குறைந்தது ரூ. 500க்கு மேற்பட்ட முத்திரைத்தாள் தீர்வை செலுத்த இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு www.shcilestamp.com என்ற இணையத்தில் தேடலாம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.