Breaking News
recent

பயனுள்ள பயிற்சி முகாம்!

முன்பு இத்தளத்தில் இடம்பெற்ற செய்தித் தொகுப்பொன்றின் பின்னூட்டம் இது. ஐக்கிய அமீரகத்தின் Adirai Islamic Mission (AIM) அமைப்பின் ஆதரவில் கடந்த 02-05-2010 முதல் நமதூரில் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சி முகாம், நேற்றுடன் (16-2-10) மிகப்பயனுள்ள வகையில் நிறைவுற்றது!

சின்னஞ்சிறார்களுக்கும் வயது வந்த பெண்களுக்கும் பல்துறைப் பயிற்சிகள் கடந்த பதினைந்து நாட்களாக வழங்கப்பட்டன. இதில் பெரும்பங்கு வகித்த இலங்கை மவ்லவிகள் முஹம்மது நாஸர், அப்துல் ஹமீது ஆகியோருடன், காரைக்கால் 'ஜாமிஆ புஷ்ரா' மகளிர் கல்லூரியின் ஆசிரியை ஒருவரின் உழைப்பு, ஒரு நல்ல கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது எனலாம்.

அன்றாட வாழ்வின் ஆன்மிக நெறிகள், குர்ஆன் ஓதல் பயிற்சிகள், ஹதீஸ் மனப்பாடம், சட்ட நெறிகள், நினைவாற்றல் திறன், குழந்தை உளவியல், ஆளுமைத் திறன் வளர்ச்சி, தலைமைத்துவப் பயிற்சி, மூடநம்பிக்கை ஒழிப்பு, மனநோய் விளக்கம், 'மந்திரமா தந்திரமா' செய்முறைகள், எழுத்துப் பயிற்சி முதலான நிகழ்வுகள் இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமை ஒரு முன்மாதிரி நிகழ்ச்சியாக அமைத்துத் தந்தன.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போன்று, நேற்று மாலை மங்ரிபுத் தொழுகைக்குப் பின் 'தக்வாப் பள்ளி' முனையில் நடைபெற்ற பொதுக்கூடம் அமைந்தது குறிப்பிடத் தக்கது! இளம் சிறார்களின் இனிய ஓசையில் இறைமறை வசனங்கள் கடல் காற்றில் கலந்து வந்து அனைவரையும் மகிழ்வித்தன. சிறுசிறு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, அவைபற்றி ஆண்-பெண் பாலர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள், பெரியவர்களை அண்ணாந்து நோக்கச் செய்தன. ஆறு வயது முதல் உடைய சிறுவர் சிறுமியரின் உரையாடல்கள், சீர்திருத்தக் கவிதை வாசிப்பு, சிறார்களின் நினைவுத் திறனைப் பரிச்சோதிக்கும் 'அறிவுக் களஞ்சியம்' எனும் அழகிய நிகழ்ச்சி ஆகியவற்றுடன் இப்பொது நிகழ்ச்சி புதுமையாக அமைந்தது!

பயிற்சியாளர்களான ஆலிமா (கல்வி விழிப்புணர்வு-சரியான பாதை எது?), நாஸர் மவ்லவி (இளைஞர்களே விழித்தெழுவீர்!), அப்துல் ஹமீது மவ்லவி (குடும்பச் சிக்கல்களும் உளவியல் தீர்வுகளும்) ஆகியோரின் சொற்பொழிவுகள் பார்வையாளர்களுக்குச் சீரிய சிந்தனையை உருவாக்கின எனலாம்.

நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும் போட்டிகளில் வென்றும் சாதனை படைத்த
மாணவ-மாணவியர்க்குப் பயனுள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், உள்ளூர் பள்ளிகளில் பயின்று, அரசுத் தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியர்க்கும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சி முகாமைத் திறம்பட நடத்தியதில், அமீரகத்திலிருந்து விடுப்பில் வந்து அயராது உழைத்த சகோதரர் அமீன் அவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. உள்ளூரிலிருந்து அவருடன் ஒத்துழைத்த சகோதரர்கள் அப்துல் காதிர், அப்துர்ரஹ்மான் முதலானோர் நமது பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் உரியவர்களாவர்.

இவ்வாண்டு நிகழ்ச்சியை ஒரு முன்மாதிரியானதாகவும், பயனுள்ள ஒன்றாகவும், Trouble-free யாகவும் அமைப்பதற்கு உதவிய ALM பள்ளி நிர்வாகத்தினரை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். அவர்கள் தமது பள்ளியின் வகுப்புகளை இப்பயிற்சி முகாமின் பல்வேறு பாடங்கள் நடத்துவதற்காகத் திறந்தளித்ததும், சிறார்களின் ஓய்வு நேர விளையாட்டிற்காக மைதானத்தைப் பயன்படுத்த அனுமதித்ததும், பள்ளியின் பேருந்தை மாணவ மாணவியரின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததும் ஆகிய ஒத்துழைப்புகள், இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த AIM உறுப்பினர்களை உளமகிழ்வையும் நன்றியையும் கொள்ளச் செய்தது.

தகவல்: அதிரை அஹ்மது
 தாஜுதீன் (THAJUDEEN )

தாஜுதீன் (THAJUDEEN )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.