ஏன் 'கல்வி விழிப்புணர்வு '? யாரும் கேட்கலாம் இந்தக் கேள்வியை!
ஆர்வத்துடன் பலரும், கவலையுடன் சிலரும் எதிர்பார்க்கும் இந்த மாநாடு, இன்ஷா அல்லாஹ், நமதூரில் எதிர்வரும் ஜனவரி பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் நடைபெறத்தான் போகிறது.
இந்த ஏற்பாட்டில் முயன்று உழைக்கும் நாங்கள் கடந்த சில மாதங்களாக, முனைப்புடன் சில வாரங்களாக, கல்வி நிலையங்களின் நிர்வாகிகளையும் அவற்றின் தலைவர்களையும் நேரில் சென்று கலந்துரையாடல் செய்த வகையில், அவர்களின் கலப்புக் கருத்தாடல்கள் கவலை தொணிப்பதாகத்தான் இருக்கின்றன!
"நம்ம சமுதாயத்துக்காகத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனா, கவலைக்குரிய விஷயம், அவங்க இந்த வசதிகளை முறையாப் பயன்படுத்திக் கொள்வதில்லை. வாப்பா உம்மாடெ செல்லப் புள்ளையா பசங்க வளந்துட்டாங்க. அவங்க நெனக்கிரத்தை எல்லாம் சாதிக்கணும்னு விரும்புறாங்க – கல்வி முன்னேற்றத்தைத் தவிர!" என்று கவலைப்பட்டார் நிர்வாகி ஒருவர்.
"ஒம்பதாவது படிக்கும்போதே உம்மா-வாப்பா 'பைக்' வாங்கிக் கொடுத்தா, உருப்படுவானா புள்ளே? அப்பறம் ஊர் சுத்துறதுதான் வேலை." இது இன்னொருவரின் எதிர்வாதக் கவலை.
"பொதுவா காலேஜ் பசங்கல்லாம் கவலையில்லா வாழ்க்கைதான் வாழுறாங்க. ஏன்டா, வாப்பா ஃபாரின்லே சம்பாதிச்சு அனுப்புற பணத்தே உம்மாட்டே அடிச்சுப் புடிச்சு வாங்கி, அவன் இஷ்டத்துக்கு 'செல்'லும் வாக்மேனும் வாங்கி 'ஜோக்' கொண்டாடுனா, படிப்பு நம்ம பசங்களுக்கு எப்படிங்க வரும்?" கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கவலைக் குற்றச்சாட்டு இது.
"ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவனுக்கு ரோட்டில் என்னங்க வேலை? நான் வெளியூர் போய்ட்டு ஊருக்குள் வர்றப்போ, வண்டிப் பேட்டையில் ஒரு கூட்டம். வாகனத்தை நிறுத்திப் பார்த்தால், எல்லாம் என்கிட்டே படிக்கிற பசங்க! 'டேய் மேடம்டா!' என்று அவர்கள் சொன்னது காதில் விழுந்தது. 'என்னப்பா இந்த நேரத்திலே இங்கே நிக்கிறீங்க?' என்றதற்கு, 'சும்மாதான்' என்று ஒருவன் முணுமுணுத்தது என் காதில் விழுந்துச்சு. இந்த மாதிரி இருந்தா, எப்புடி சுபுஹுலே முழிச்சு, தொழுது, பாடங்களைப் படிக்கும் பழக்கம் நம்ம பசங்களுக்கு வரும்? வீனாலே நேரத்தைக் கழிக்கிறாய்ங்களே தவிர, வகுப்புகளில் கொடுக்குற 'அசைன்மென்ட்' பக்கம் கவனமே செலுத்துரதில்லை. மார்க்கக் கடமைகளைச் செய்வதிலும் 'பெயில்' மார்க்கு; படிப்புலேயும் 'பெயில்'. அப்புறம் இவன்ய்ங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? பொம்புலேப் புள்ளேய்ங்க நல்லாப் படிக்கிறாங்க இந்த ஊர்லே" என்று மிகக் கவலைப்பட்டார் பள்ளித் தலைமையாசிரியை.
இப்படியெல்லாம் தத்தம் கவலையை வெளிப்படுத்திய கல்வியாளர் ஒவ்வொருவருக்கும், "அதனால்தான் இப்படி ஒரு கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தும் முயற்சியில் முனைந்துள்ளோம்" என்று ஆறுதல் கூறினோம்.
"நல்லாச் செய்ங்கோ. இதுக்காக நான் என்னவெல்லாம் ஒத்துழைப்புக் கொடுக்க முடியுமோ, அதெல்லாம் தரத் தயார்" என்று கைகுலுக்கி விடையளித்த ஹாஜி முஹம்மது சாரின் ஆதரவைக் கண்டு மகிழ்ந்தவர்களாக நாங்கள் விடை பெற்றோம்.
ஆக்கம்: அதிரை அஹமது
AdiraiPost
அதிரை அஹ்மது
கல்வி விழிப்புணர்வு
ஏன் 'கல்வி விழிப்புணர்வு '? யாரும் கேட்கலாம் இந்தக் கேள்வியை!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்