Breaking News
recent

தி.மு.க.,வை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஒரு மாயை-தமுமுக தலைவர்

மற்ற முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.,வை ஆதரிக்கும் போது நீங்கள் மட்டும் இதில் மாறுபட்டது ஏன்?

இது தவறான கருத்து. மக்கள் ஆதரவு உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துக்கள், அ.தி.மு.க.,வை தான் ஆதரிக்கின்றன. சிறுபான்மை அணியை சேர்ந்த சில, "லெட்டர் பேடு' அமைப்புக்களை அறிவாலயத்திற்கு அழைத்து, துணை முதல்வருக்கு மாலை, சால்வை அணிவித்து, போட்டோ எடுத்துக் கொண்டு, முஸ்லிம்கள் தி.மு.க.,வை ஆதரிப்பதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கையை தி.மு.க., நிறைவேற்றியதில்லை. தி.மு.க., அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கூடுதல் "சீட்'டுக்காக தான் நீங்கள் அ.தி.மு.க., அணிக்கு வந்ததாக கூறுகிறார்களே?


அப்படி இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., எங்களுக்கு ஒரு "சீட்' தர முன்வந்தது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட சொன்னார்கள். நாங்கள், சொந்த சின்னத்தில் நிற்க விரும்பினோம். மேலும், நாங்கள் கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை. இதனால் தான் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினோம்.


அ.தி.மு.க., கூட்டணியில் உங்கள் கோரிக்கை நிறைவேறியதா?


முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது. 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அப்துல் லத்தீப், பஸ் சின்னத்திலும், கடந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட தாவூத் மியாகான், வாழைப்பழம் சின்னத்திலும் போட்டியிட அ.தி.மு.க., ஒப்புக்கொண்டது. தற்போதும், எங்களுக்கு ஒதுக்கியுள்ள மூன்று தொகுதிகளிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக்கொண்டுள்ளது.

தி.மு.க., குறித்து உங்கள் நிலைப்பாடு தான் என்ன?

தி.மு.க., ஓர் இமாலய ஊழல் கட்சி. அங்கு மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அதிகார துஷ்பிரயோகம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. தற்போது கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கினர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள அவர்கள் மூவருமே, தி.மு.க., உறுப்பினர்களாக தான் இருப்பர். இந்நிலையில், காங்கிரசுக்காக, முஸ்லிம் லீக்கில் இருந்து ஒரு தொகுதியைப் பிடுங்கிக் கொடுத்து விட்டார் கருணாநிதி.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?


முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3.5 சதவீதம் ஒதுக்கீட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த ஒதுக்கீடு அடிப்படையிலும் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அரசு பணியில் சேர முடியவில்லை. 1991ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை மீண்டும் வழங்கவும், தமிழகத்தில் துவக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில், எங்களது உரிமையை, வேலை உத்தரவாதத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைப்போம்.

ஐந்து ஆண்டு கால தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து?


இவ்வளவு காலமாக குறைக்காத பெட்ரோல் விற்பனை வரியை தேர்தலுக்காக குறைந்த அளவில் குறைந்துள்ளார். விலைவாசியால் மக்கள் வெறுப்பைப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாகவே தி.மு.க., ஆட்சி விளங்குகிறது. இந்த அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், "கார்ப்பரேட்' மருத்துவமனைகள் தான் அதிகம் பயனடைந்துள்ளன. இன்னமும் மின்வெட்டு உள்ளது.

உங்களின் பிரசார வியூகம் என்ன?

மனிதநேய மக்கள் கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. தேர்தலில் பணத்தை முதலீடு செய்து வெற்றியை அறுவடை செய்யும் அரசியலுக்கு, ஒரு மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட கட்சி இது. தி.மு.க., கூட்டணி பணத்தை கொடுத்து வெற்றி பெற நினைக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 55 சதவீதம் மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக தான் ஓட்டு போட்டனர். எதிர்க்கட்சி ஓட்டுகள் சிதறலால் தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அது நடக்கும்.முஸ்லிம்களின் அரசியல் தனித் தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது.

Tmmk.in
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.