Breaking News
recent

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அக்டோபர் நாளை முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1.1.2014ஐ தகுதி நாளாகக்கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மனுக்கள் அளிக்கலாம். 1.1.2014 தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அக்டோபர் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் கிராமப்புறமாக இருந்தால் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், நகர்ப்புறமாக இருந்தால் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், புகைப்பட வாக்காளர் பட்டியலின் உரிய பாகம், பிரிவு ஆகியவை படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

அக்டோபர் 6, 20, 27 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டிடங்கள் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சட்டசபை தொகுதிக்குள்ளேயே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். சட்டசபை தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், பெயர் சேர்ப்பிற்கான புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை (எபிக் கார்டு) அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும்.

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தையொட்டி, வாக்குச்சாவடிகளை வரையறை செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 761ல் இருந்து 60 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகள் விவரம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elctions.tn.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுவரை வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உடனடியாக வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யும் பணியில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்களது வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமித்த பிறகு அவர்களது பெயர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயரை நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர் தனது பெயரை சேர்க்க படிவம் 6ஏ–வை பூர்த்தி செய்து தர வேண்டும். அவரவர் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர், தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் படிவம்–6–ஐ வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கலாம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.