சமத்துவ உரிமைகளைப் போராடிப் பெறுவோம்! நாம் கேட்பது பிச்சையல்ல, நமது உரிமை! பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாநாட்டில் கி. வீரமணி முழக்கம்

சமத்துவ உரிமைகளைப் போராடிப் பெறுவோம்!
நாம் கேட்பது பிச்சையல்ல, நமது உரிமை!


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற சமூக எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றினார் (மதுரை, 21.2.2010)

சமத்துவ உரிமைகளைப் போராடிப் பெறவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
மதுரையில் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய நாள்களில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள திடலில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (Popular front of India) அமைப்பின் சமூக எழுச்சி மாநாடு பிரம்மாண்ட மாக நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், (21.2.2010) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு எழுச்சிமிக்க சிறப்புரை ஆற்றினார்.

மாலை 7 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியின் தொடக்க உரையினை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் E M. அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

தனது தொடக்க உரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதித் தளத்தில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பணி மற்றும் அவர் உருவாக்கிய இயக்-கம்தான் மற்ற மாநிலங்-கள் சாதிக்க நினைக்காத பல்வேறு சமூகநீதி நட-வடிக்கைகளை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மிகவும் பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய செய்தியாகும்.

இருப்பினும் தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட அரசியல் கட்சிகளின் துணை கொண்டு பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்றியது மிகவும் வருத்தத்திற்குரியது.  பாரதீய ஜனதாவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை எனும் நிலை உருவாக்கப்படவேண்டும். அது திராவிட இயக்கங்களின் கையில்தான் உள்ளது.

தமிழர் தலைவரின் எழுச்சியுரை

பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் அமைப்பின் பல்வேறு நிலைப் பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வீற்றிருந்தார்.

தமிழர் தலைவர் தனது எழுச்சியுரையில் குறிப்பிட்டதாவது:
மாநாட்டிற்கு வருகை தந்தோர் அனைவரும் சாதனை புரியும் ஆற்றல்மிக்கவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். நாமெல்லாம் உருவத்தால் பலராயினும், உள்ளத்தால், சமூகத்தில், சமத்துவத்திற்குப் பாடுபடும் பண்பாட்டில் நாம் அனைவரும் ஒருவரே.

மாநாட்டு மேடைக்கு வந்ததும் எங்களுக்கு விருந்தினர் அலங்கார அட்டையினை சட்டையில் குத்திவிட்டார்கள். நாங்கள் விருந்தினர் அல்ல; உங்களோடு சேர்ந்து போராடுகின்ற சக போராளி (We are not guests; we are co-fighters) நம் அனைவருக்கும் ஒரே நோக்கு. அதுதான் சமூக எழுச்சி. அதுதான் நமது கோரிக்கையும்கூட.

திராவிடக் கட்சிகள் பி.ஜே.பி., கட்சிக்கு துணை போவதுபற்றி இங்கு குறிப்பிட்டனர். திராவிட கட்சிகள் அந்த நிலையிலிருந்து மாறி வர, திராவிடர் கழகம் பெரிதும் பாடுபட்டது.

அதில் வெற்றியும் கண்டுவருகிறது. பி.ஜே.பி. பாதையில் சென்ற கட்சிகளை சரியான பாதையில் திருப்பிவிட்டதில், திராவிடர் கழகத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இந்த மண்ணில் காவிகள் காலூன்றிவிட முடியாது. சங் பரிவார் கும்பல் தலைதூக்க முடியாது.

நீங்களெல்லாம் கைபர், போலன் கணவாய் வழியாக இந்நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இந்த மண்ணில் பிறந்தவர்கள் நீங்கள். இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள்.  சமூக லட்சிய வேட்கை கொண்டவர்கள்.
சங் பரிவார் கும்பலின் அட்டூழியங்களைத் தொகுத்து நாங்கள் வன்முறையின் மறுபெயர்தான் சங் பரிவார் கும்பல் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்துத்துவா கும்பலை விசாரணை செய்து வந்த காவல்துறை உயர் அதிகாரி கர்கரே, மர்மமான முறையில், பம்பாய் கலவரத்தில் கொல்லப்பட்டார். அதைப்பற்றி மகாராட்டிர மாநில காவல்துறையில், அய்.ஜி.-யாக பணியாற்றிய எஸ்.எம். முஸ்ரீப், கர்கரேயைக் கொன்றது யார்? (Who Killed Karkare) எனும் ஆங்-கில நூலை எழுதியுள்ளார்.

சென்னையில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எஸ்.எம். முஸ்ரீப் அவர்களை அழைத்துப் பாராட்டி, அவர் எழுதிய நூலை அறிமுகம் செய்தோம்.

மகாராட்டிர மாநிலத்-தில் அந்தப் புத்தகத்திற்குக் கிடைக்காத மரியாதை, அங்கீகாரம், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மண்ணில் கிடைத்துள்ளது குறித்து நூலாசிரியர் பெருமைப்பட்டார், மகிழ்ச்சி தெரிவித்தார். நூல் அறிமுகம் மற்றும் நூலாசிரியர் பாராட்டு நிகழ்ச்சிப் பேச்சு குறுந்தகடாகவும் வெளியிட்டுள்ளோம்.


சங் பரிவார் கும்பல் வஞ்சகம், சூழ்ச்சி மிக்க பயங்கரவாதக் கூட்டம், கலவரத்தை உருவாக்கிவிட்டு, அதற்கான பழியினை மற்றவர்கள் மேல் போடுவதில் கைதேர்ந்த கூட்டம். இம்மாநிலம், பிற மாநிலங்களில் எத்தகைய எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள் உள்ளன.

விடுதலை வெளியிட்டது

தென்காசியில் நடந்த கொலையினை, பிறர்மீது சுமத்தி, தப்பிக்கப் பார்த்தது அந்தக் கூட்டம். தற்சமயம் நடந்த புனே நகர ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் அன்னிய சக்திகளின்மீது குற்றம் சுமத்தப் பார்க்கும் வேலையில், விசாரணை செய்துவரும் உயரதிகாரி, உள்ளூர் இந்துத்துவா சக்திகளின் விளையாடலும் அதில் உள்ளதை மறுப்பதற்கில்லை எனக் கூறியுள்ளார்.

இதனை விடுதலை ஏடு விரிவாகக் கூறியுள்ளது. இந்து நாளிதழும் குறிப்பிட்டுள்ளது. தாடி வைத்தவரையெல்லாம் தீவிரவாதி என அடையாளம் காணும் அபாயகரப் போக்கு நிலவுகிறது. இந்நிலை மாறவேண்டும்.
நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களில் முஸ்லிம் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர்.

கல்வி, வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படவில்லை. சமத்துவ உரிமைகளைப் போராடி பெறவேண்டும். நாம் கேட்பது பிச்சை அல்ல; நமது உரிமை. உரிமைகளை மீட்டு எடுப்பதற்கான உரிமைப் போரில் நாம் ஒற்றுமை-யாய் இருப்போம். போராடுவோம், வெற்றி பெறுவோம். வாழ்த்துகள். வெல்க சமூக எழுச்சி மாநாடு.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

மாநாட்டிற்குத் தமிழர் தலைவருடன், திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே. எடிசன்ராசா, மாநில பகுத்தறிவாளர்கழகப்பொதுச்செயலாளர் வீ. குமரேசன், மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தலைவர் க. அழகர், செயலாளர் திருப்பதி, செல்வம், பேராசிரியர் நம். சீனிவாசன் மற்றும் தோழர்கள் உடன் சென்றனர்.
மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி எழுதித் தொகுத்த வன்முறையின் மறுபெயர்தான் சங் பரிவார் கும்பல் புத்தகமும், கர்கரேயைக் கொன்றது யார்? ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் மற்றும் இதர தலைவர்கள் பேசிய பேச்சு அடங்கிய குறுந்தகடும் வழங்கப்பட்டது.

தமிழர் தலைவர் உரை-யாற்றிய 20 நிமிடங்களும், பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கம் அமைதியுடன் கூர்மையாக கவனித்தது, எழுச்சி கொண்ட வண்ணம் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.


நன்றி: விடுதலை






பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாநாட்டில் தமிழர் 
தலைவர் முழக்கம்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.