Breaking News
recent

அழகிய கடன் அறக்கட்டளையின் அழகிய பங்கீடு!



   أقيموا الصلات و أتواالزكاة  என்று அருளாளன் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது, வசதி பெற்றோரின் வருமானத்தின் ஒரு பகுதியானது தேவையுடையோருக்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகவே.  எவ்வாறு தொழுகையானது அதனதன் நேரத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமோ, அது போன்றதுதான் ஜக்காத்தும் என்பதற்காகவே, அல்லாஹ் தொழுகையுடன் ஜக்காத்தையும் சேர்த்துக் கூறியுள்ளான்.

‘கர்ழன் ஹஸனா’ எனும் அழகிய கடன் அறக்கட்டளையின் தோற்றம் பற்றிய அறிவிப்பைக் கேட்டவுடனேயே, இதில் ஜக்காத் நிதிப் பங்கீடும் ஓர் அங்கம் என்பதைத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அறிவிக்காத நிலையிலும், இறையச்சமும் மார்க்கப் பற்றும் உடைய சகோதரர்கள் சிலர் எமக்குத் தத்தம் ஜக்காத் தொகைகளைத் தாராளமாக அனுப்பித் தந்தனர்.  மாஷா அல்லாஹ்!  இது, நாம் உரிய முறையில், உரியவர்களுக்கு, உரிய நேரத்தில் அத்தொகைகளைப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவோம் என்ற அவர்களின் நம்பிக்கையின் விளைவுதான் என்று கூற முடியும்.

நிர்வாகக் குழுவின் ஆலோசனைப்படியும், நெறியாளர்கள் மற்றும் ஆலிம்களின் வழிகாட்டலின்படியும், தேவையுடையோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுபோய்க் கொடுக்கும் விதத்தில், ‘கர்ழன் ஹஸனா’வின் நிர்வாகிகளும் முக்கிய உறுப்பினர்களும் அவரவர் அறிந்த தேவையுடையோருக்கு ஜக்காத் நிதியைப் பங்கீடு செய்து கொடுக்கும் விதத்தில், தொகைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, அவர்களே ஏழை எளியோரைத் தேடிக் கொண்டுபோய்க் கொடுக்குமாறு பணிக்கப்பட்டார்கள்.  

இவ்வடிப்படையில் வழங்கப்பட்ட நிதிப் பங்கீட்டைப் பெற்றவர்கள் தம்மைப் பற்றிய விவரம் வெளியில் தெரிய விரும்பாதவர்கள் என்பதால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.  எனினும், சமுதாய ஆர்வலரும் இணையதளப் பங்களிப்பாளருமான சகோ. சேக்கனா நிஜாம்அவர்கள் தாம் வசிக்கும் ‘பிலால் நகர்’ பகுதியில், ஏழைகளுக்குக் கொடுப்பதற்காகத் தமக்கு இந்த அறக்கட்டளையால் வழங்கப்பட்ட தொகை 5000 ரூபாயைப் பத்துப் பேருக்குத் தலா 500 ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்து, அதனை இணையத்திலும் வெளியிட விரும்பினார்.  அதற்கு நாம் அனுமதியளித்தோம்.  காரணம், அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலான நமதூர்க்காரர்களுக்கு அறிமுகமற்றவர்கள்.  அவரின் பதிவு கீழே:

பிலால் நகர் – ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வட்டிக்கடனில் மூழ்கிருப்போர், அன்றாடம் தொழில்செய்து பிழைப்போர் என வாழ்ந்து வருகின்ற இப்பகுதிக்கு “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாகிகள் ரூ 5000/- ( ரூபாய் ஐந்து ஆயிரம் மட்டும் ) என்னிடம் வழங்கி அவற்றை நலிவுற்றோருக்கு வழங்கக் கேட்டுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில், கீழ்க்கண்ட பிலால் நகர் பகுதியைச் சார்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, தலா ரூபாய் 500/- வீதம் “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் சகோ. M.C. அலி அக்பர், செயலாளர் சகோ. M. I. ஜமால் முஹம்மது மற்றும் அதன் பொருளாளர் ஆசிரியர் A.M. மஹபூப் அலி ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
1. சகோதரி ஜஹபர் – (முதியவர்- விதவை) 
2. சகோதரி சுல்தான் நாச்சியா – (கணவனால் கைவிடப்பட்ட பெண் - மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் )
3. சகோதரி கபீரா – (ஏழைப்பெண்)
4. சகோதரி நாஜிரா – (கணவனால் கைவிடப்பட்ட பெண் - மூன்று குழந்தைகள் உள்ளனர்  - மீட்டர் வட்டிக்கடனில் மூழ்கியுள்ளவர்.)
5. சகோதரி  ஜஹபர் நாச்சியா – (முதியவர் – விதவை)  
6. சகோதரி பசீரா – (முதியவ௦ர் – விதவை)
7. சகோதரி ஹைரா – (நலிவுற்ற முதியவர் – விதவை)
8. சகோதரி கதீஜா – (மீட்டர் வட்டிக்கடனில் மூழ்கியுள்ளவர்) 
9. சகோதரர் ஹனீபா – ( ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர் )
10. சகோதரி ஹவ்வா அம்மாள் – (முதியவர் – விதவை)
ஜகாத் நிதி உதவி செய்த பெயர் சொல்ல விரும்பாத சகோதரர்களுக்கும், “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்தையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இதுபோன்ற உதவிகள் மென்மேலும் “கர்ழன் ஹஸனா” அழகிய கடன் அறக்கட்டளையின் சார்பாக பிலால் நகரைப் போல மிகவும் பின்தங்கியுள்ள அதிரையின் பகுதிகளுக்கும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லுதவி புரியட்டும் என்று “துஆ” செய்தவனாக........

அன்புடன்,
சேக்கனா M. நிஜாம்  

ஜக்காத் நிதிகளை ‘கர்ழன் ஹஸனா’ நிர்வாகிகளை நம்பி அனுப்பித் தந்த அன்புச் சகோதரர்களுக்காக நாங்களும், நிதியைப் பெற்ற மக்களும் இதயம் கனிந்து துஆச் செய்கின்றோம்.

“யா அல்லாஹ்!  எழைகளின்பால் இரக்கம் கொண்ட இந்தச் சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வளமான வாழ்க்கையைக் கொடுத்தருள்வாயாக!”

அதிரை அஹ்மது
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.