Breaking News
recent

தமுமுக தலைவர் படுகொலை


தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வேலூர் மாவட்டத்தில் தமுமுக கிளைத் தலைவர் ஜிந்தா பாய், கள்ளச் சாராய கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரத்தின் அருகே உள்ளது பெரிய அசேன்புரா என்கிற பகுதி. தமிழகம் முழுக்க தமுமுகவினர் செய்துவரும் அறப்பணிகளைப் போலவே இப்பகுதியிலும் ஜிந்தா பாய் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் செய்து வந்தனர். குறிப்பாக ஆண்களை மது போதையிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி, மதுவிற்கு எதிராக நடத்திய பிரச்சாரப் பரப்புரையின் போது மமகவின் மதுவிற்கு எதிரான பிரசுரங்களை தமுமுக மற்றும் மமகவினர் குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து கள்ளச் சாராயத்தைக் கடத்திக் கொண்டு வந்து அதனுடன் சில வண்ணத் துகள்களை சேர்த்து போலி மதுபானம் தயார் செய்து வந்த முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் வெற்றிவேல் இப்பகுதியில் தனது வியாபாரத்தை படுஜோராக நடத்தியுள்ளார்.
போலி மதுபானத்தை பாட்டிலில் அடைப்பதற்கு உதவியாக சில இயந்திரங்களையும், அதை விற்பனை செய்வதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களையும் பயன்படுத்தி வந்துள்ளார். தனது போலி மதுபானம் குறித்து கேள்விகள் கேட்பவர்களை மிரட்டுவதற்கு கூலிப் படையையும் பயன்படுத்தி வந்துள்ளார்.
இச்சூழலில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் மத்தியில் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி மக்களை மது போதையிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேல், தனது கூலிப்படையினர் மூலம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகளிடம் தகராறு செய்து அவர்களைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து தமுமுகவினர், வெற்றிவேல் மற்றும் கூலிப்படையினர் மீது ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வெற்றிவேல் மூலம் நல்ல வருமானத்தைப் பார்த்துவந்த ஆற்காடு நகர காவல்துறை, தமுமுகவினரின் புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து கடந்த 7.3.2012 அன்று வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஏஜாஸ் அஹமது தலைமையில் தமுமுக & மமக நிர்வாகிகள், ஆற்காடு கலவை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது காவல்துறை.
இந்த சம்பவம் முடிந்து சில தினங்களிலேயே தமுமுக நகர தலைவர் ஜமால் பாஷா வீட்டிற்குச் சென்ற வெற்றிவேல் மற்றும் அவரது கூலிப்படையினர், ஜமால் பாஷாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெற்றிவேல் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, போலி மதுபானம் தயாரிக்க வெற்றிவேல் பயன்படுத்திய இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் தலைக்கேறிய வெற்றிவேல் மற்றும் கூலிப்படையினர் 7.3.2013 அன்று, அசேன்புரா கிளைத் தலைவர் ஜிந்தா பாயை இரும்புக் கம்பியாலும், கட்டையாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த ஜிந்தா பாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்). இந்தப் படுகொலையைத் தொடர்ந்து வெற்றிவேலை விட்டுவிட்டு அவரது கூலிப்படையைச் சேர்ந்த இருவரை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜிந்தா பாய் படுகொலை செய்யப்பட்ட தகவல் வேலூர் மாவட்டம் முழுக்க வேகமாகப் பரவியது. தகவல் கிடைத்ததும் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி, ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் ஜே. அவுலியா மற்றும் வேலூர் மாவட்ட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாரபட்சமாக செயல்படும் ஆற்காடு நகர காவல்துறையைக் கண்டித்தும், ஜிந்தா பாய் கொலைக்கு காரணமாக முக்கியக் குற்றவாளியான வெற்றிவேலைக் கைது செய்யக் கோரியும் 8.3.2013 அன்று சென்னை&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் ஆகியோர், வெற்றிவேலை உடனடியாக கைது செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.
பாக்ஸ்
ஜிந்தா பாய்
ஒரு காலத்தில் பெரும் மதுப் பிரியராக இருந்து பின்னர் மதுவை ஒழிக்க போராடியவர் ஜிந்தா பாய்.
48 வயதாக ஜிந்தா பாய்க்கு ஒரு பெண் உண்டு. அவருக்கும் திருமணமாகி விட்டது.
வெற்றிவேல் கொலை செய்ய முதலில் முயற்சித்தது தமுமுக கிளைச் செயலாளர் கௌஸ் பாயை. இதனை நன்கு அறிந்துகொண்ட ஜிந்தா பாய், எப்போதும் கௌஸ் பாயை தனியே அனுப்ப மாட்டாராம்.
நாள்தோறும் சைக்கிளில் சென்று பழைய இரும்பு சாமான்களை விற்கும் சிறிய வியாபாரி ஜிந்தா பாய்.
இந்த பாழாய்ப்போன வெற்றிவேலோடு சேர்ந்து நம்ம பசங்களும் இப்படிக் கெட்டுப் போராங்களே... என அடிப்படி புலம்புவாராம் ஜிந்தா பாய்.
இந்த மதுவை ஒழிக்காமல் ஓயமாட்டேன் என்று ஜிந்தா பாய், இன்று நிரந்தரமாக ஓய்ந்து விட்டார். அவரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போம்
 
Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.